அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக, அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைக் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்கிற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கோரிக்கை வரவேற்கத்தக்கது. சீர்திருத்த நடவடிக்கைகளால் அரசின் வருவாயைப் பெருக்க முடியும் என்பதையும், அரசின் வருவாய் பெருகுவதால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், சமூகநீதி சார்ந்த திட்டங்களை நிறைவேற்றவும் முடியும் என்பதையும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தெரிவித்திருப்பதற்காக அவரை எத்துணை பாராட்டினாலும் தகும்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கும் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் காணப்படும் அறிவிப்புகள் குறித்தும், முன்மொழிந்திருக்கும் சில திட்டங்கள் குறித்தும் கருத்து வேறுபாடுகளும், விமர்சனங்களும் இருக்கலாம். ஆனால், மிகத் திறமையான நிதி நிர்வாகம் குறித்து அவரைப் பாராட்டமல் இருக்க முடியாது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த இப்போதைய திமுக ஆட்சியில் நிதியமைச்சராகப் பதவியேற்றபோது, அவர் எடுத்த நிதி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் சூளுரையைப் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதன் வெளிப்பாடுதான் அவரது இப்போதைய நிதிநிலை அறிக்கை.
கடந்த 2022-23-க்கான பட்ஜெட்டைவிட, 2023-24-க்கான இப்போதைய பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை 34% குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு வரிவருவாய் அதிகரித்திருப்பது காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில், வருவாய் செலவினங்களை சுமார் 8% அளவில் கட்டுப்படுத்தியிருப்பதும் முக்கிய காரணம். அதன் மூலம் கடந்த நிதியாண்டின் நிதி பற்றாக்குறையைவிட நிகழ் நிதியாண்டில் 3% அளவில் அவரால் நிறுத்த முடிந்திருக்கிறது. மின் துறை சீர்திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் அடுத்த நிதியாண்டின் நிதி பற்றாக்குறையை அனுமதிக்கப்பட்ட 3.25% அளவில் கட்டுப்படுத்த முடியும் என்கிறது அவரது பட்ஜெட்.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்களில், மிக அதிகமான கடன் சுமை உள்ள மாநிலம் தமிழகம். தமிழகத்தின் கடன் சுமார் ரூ.28.3 லட்சம் கோடி. ஆனால் மாநிலத்தின் மொத்த ஜிடிபியில், அனுமதிக்கப்பட்ட அளவில்தான் அடுத்த நிதியாண்டின் கடன் சுமை இருக்கும்.
நிகழ் நிதியாண்டின் திருத்தப்பட்ட மூலதனச் செலவைவிட வரும் 2023-24 நிதியாண்டின் மூலதனச் செலவு 15.6% அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் அனைவருக்கும் குடிநீர், மெட்ரோ ரயில் திட்டங்கள், ஊரக சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. திட்டமிட்டபடி இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், நிதியமைச்சரின் கூடுதல் ஒதுக்கீடு மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிகோலும்.
சர்வதேச, தேசியப் பொருளாதாரச் சூழல்கள் கவலை அளிக்கும் விதத்தில் இருக்கின்றன. ஏற்றுமதி சார்ந்த மென்பொருள், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி துறை உள்ளிட்டவை கடும் சவாலை சந்தித்து வருகின்றன. எதிர்பார்த்ததுபோல வரி வருவாய் 19.3% அதிகரிக்குமா என்று சொல்ல முடியாது. அடுத்த நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடருமா, நிறுத்தப்படுமா என்கிற கேள்வியும் எழுகிறது. இத்தனை சவால்களுக்கு இடையிலும் நிதி நிர்வாகத்தை முறைப்படுத்தி, கடன் அளவையும் பற்றாக்குறையையும் கட்டுக்குள் வைக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தாலும், சமூக ஊடகங்கள் மேற்கொண்ட பரப்புரைகளாலும் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் என்றாலும்கூட சுமார் ஒரு கோடி குடும்பத் தலைவியர் உரிமைத் தொகை பெறுவர் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் நிதிநிலமையை எடுத்துச் சொல்லி, வாக்குறுதியை நிறைவேற்ற கால அவகாசம் பெற்றிருக்கலாம். மக்கள் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. முதல்வரும் நிதியமைச்சரும் ஏன் இந்தப் பிரச்னையில் தயக்கம் காட்டினார்கள் என்று தெரியவில்லை. ஒரு கோடி பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 "உரிமைத் தொகை'யாக வழங்கும்போது அதன் தொடர் விளைவாகப் பணப்பெருக்கம் அதிகரித்து விலைவாசி உயரும். அதுவேகூட ஒரு மறைமுகமான வரிச்சுமைதான் என்பதை மறந்துவிடக் கூடாது.
வளர்ச்சித் திட்டங்களுக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டுக்காக முனைப்புக் காட்டும் வேளையில், ஒரு கோடி பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது என்பது தேவையானதாகவே இருந்தாலும், நிதிநிலைமையை கருத்தில்கொண்டு தவிர்த்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு வளர்ச்சிப் பணிகள் மூலம் பதில் அளித்திருக்கலாம்.
அதேபோல மின்கட்டண உயர்வு, இலவச மின்சாரம் குறித்த நிதியமைச்சரின் கருத்து நியாயமானவை. பொருளாதாரம் பத்து மடங்கு உயர்ந்திருக்கும் நிலையில், மின் கட்டணச் சீர்த்திருத்தம் இல்லாமல் அரசின் வருவாயை எப்படி பெருக்க இயலும் என்கிற அமைச்சர் தியாகராஜனின் கேள்வியில் உள்ள நியாயம் ஏற்புடையது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது தேவையானது. ஆனால், அது முறைப்படுத்தப்படுவது அவசியமானது. பொதுத்துறை நிறுவனங்களில் சீர்திருத்தம் என்பது இன்றியமையாதது.
எதிர்க்கட்சிகளுக்கு நிதியமைச்சரின் மனம் திறந்த வேண்டுகோள் ஆக்கபூர்வமானது.நிதி நிர்வாகம் தெரிந்த ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அரசின் வருவாயைப் பெருக்கவும் அவருக்கு முழு மனதுடன் வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.