முகப்பு
தலையங்கம்

பெற்றோரே பொறுப்பு!

வாகனங்களை வேகமாக இயக்குவது ஒருவித பரவசத்தை அளிப்பதால் சிறுவர்களும் விபரீதத்தை உணர்வதில்லை.

Updated On : 15 ஏப்ரல், 2025 at 4:28 AM
புணே கார் விபத்து - PTI
பகிர்:

பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறார்களால் இயக்கப்படும் வாகனங்களால் நேரிடும் விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது சமூக ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

சிறுவர்கள் வாகனங்கள் இயக்குவதைத் தடுக்க மத்திய அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. நீரஜ் டாங்கி எழுப்பிய கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில் இதைக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 2023-24-ஆம் ஆண்டில் சிறுவர்கள் இயக்கிய வாகனங்களால் 11,890 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 2,063 விபத்துகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் (1,067), உத்தர பிரதேசம் (935), ஆந்திர பிரதேசம் (766), கர்நா டகம் (751), குஜராத் (727), கேரளம் (645), சத்தீஸ்கர் (504), ராஜஸ்தான் (450) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை வடபழனியில் 14 வயதுச் சிறுவன் கடந்த ஏப். 4-ஆம் தேதி ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியதில் 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவன், காரில் பயணித்த அவரின் தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதற்கு முன்னதாக, சென்னை பேசின் பாலத்தில் 18 வயதுச் சிறுவன் கடந்த ஏப். 1-ஆம் தேதி அதிவேகமாக இயக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த 3 சிறுமிகள் உள்பட 5 சிறார்களும் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதேபோன்று, கோவை சாரமேடு பகுதியைச் சேர்ந்த ரிஜாஸ் (17) என்ற சிறுவன் மற்றொரு சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் உயிரிழந்தார். கோவையில் 2025-ஆம் ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் சிறுவர்களால் நிகழ்ந்த பத்து விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

புது தில்லியில் பஹாட்கஞ்ச் பகுதியில் 15 வயதுச் சிறுவன் சொகுசு காரை கடந்த மார்ச் 30-ஆம் தேதி இயக்கியபோது முன்னால் விளையாடிக் கொண்டிருந்த 2 வயதுப் பெண் குழந்தை கார் மோதி உயிரிழந்தது.

இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த மனை வணிக தொழிலதிபரின் 17 வயது மகன் ரூ.1 கோடி மதிப்புள்ள ஜெர்மானிய தயாரிப்பான 'போர்ஷ்' ரக காரை கடந்த 2024 மே 19-ஆம் தேதி மது அருந்திவிட்டு 200 கி.மீ. வேகத்தில் இயக்கியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்களான அனிஷ் (24), அஸ்வினி (24) ஆகியோர் உயிரிழந்தது அப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியது நினைவுகூரத்தக்கது.

சட்டம் அனுமதிக்காவிட்டாலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது என்பது நாடு முழுவதுமே காணப்படுகிறது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, 18 வயதுக்கு கீழ் உள் ளவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது வாகன உரிமையாளருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தை ஒட்டிய சிறுவன் 25 வயதுவரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது.

இந்த சட்டம் செயல்பாட்டில் இருப்பினும், பெரும்பாலான சிறுவர்கள் இது குறித்து அறியவில்லை அல்லது அறிந்திருந்தாலும் கவலைப்படுவதில்லை. விபத்துகளின் விபரீதத்தை உணராமல், தலைக்கவசமும் அணிவதில்லை; பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதில்லை.

சிறுவர்களும் இளைஞர்களும் புளூடூத், ஹெட்செட் போன்ற வற்றை அணிந்து கொண்டு பாடல்களைக் கேட்டுக் கொண்டும் பேசிக் கொண்டும் வாகனங்களை இயக்குவதும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்கள் எழுப்பும் ஒலி கேட்காததாலும் கவனச் சிதறலாலும் விபத்துகள் நிகழ்கின்றன.

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு தானாகவே அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. சில இடங்களில் ஏஐ தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், கைப்பேசியை மாற்றிவிட்டால் குறுந்தகவல் செல்லாதது, வாகன உரிமையாளர் வீடு மாறுவது போன்றவற்றால் அபராதம் வசூலிப்பதில் சிரமம் நிலவுகிறது.

ஆனால், இதுவும்கூட மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சில பகுதிகளில் மட்டுமே தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் போலீஸார் பற்றாக்குறை, கண்காணிப்பு கேமராவுக்கான செலவினம் போன்றவற்றால் சிக்கல் உள்ளது.

சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் இயக்குவதைப் பெற்றோர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதிவேகமாக இயக்கக் கூடிய, விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள், கார் போன்றவற்றை வாங்கியும் கொடுக்கிறார்கள். வாகனங்களை வேகமாக இயக்குவது ஒருவித பரவசத்தை அளிப்பதால் சிறுவர்களும் விபரீதத்தை உணர்வதில்லை.

சிறுவர்களின் செயல்களுக்குப் பெற்றோரைப் பொறுப்பாக்குவதுடன், போக்குவரத்து விதிகள் எந்தவித சமரசமும் இல்லாமல் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.