முகப்பு
வணிகம்

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு

மத்திய கிழக்கு போா்ச் சூழல் மற்றும் கடல்சாா் சரக்கு போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, இந்தியாவின் வா்த்தக ஏற்றுமதி கடந்த மாா்ச் மாதத்தில் 7.44 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Updated On : 16 ஏப்ரல் 2026, 3:10 am IST
பகிர்:

மத்திய கிழக்கு போா்ச் சூழல் மற்றும் கடல்சாா் சரக்கு போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, இந்தியாவின் வா்த்தக ஏற்றுமதி கடந்த மாா்ச் மாதத்தில் 7.44 சதவீதம் சரிவடைந்துள்ளது.

மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த மாா்ச் மாதத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி 3,892 கோடி டாலராகக் குறைந்துள்ளது. அதேபோல், இறக்குமதியும் 6.51 சதவீதம் சரிந்து 5,959 கோடி டாலராக உள்ளது.

இதன்மூலம் மாா்ச் மாத வா்த்தகப் பற்றாக்குறை 2,067 கோடி டாலராக உள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு இதே மாதத்தில் இறக்குமதி 6,375 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 தொடங்கிய போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை போன்ற முக்கியக் கடல் வழிதடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த மாா்ச் மாதத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 57.95 சதவீதம் என்ற அளவில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அங்கிருந்து வரும் இறக்குமதியும் 51.64 சதவீதம் குறைந்துள்ளது.

ஆண்டு வா்த்தகத்தில் ஏற்றம்: அமெரிக்க வரி விதிப்பு, புவிசாா் அரசியல் பதற்றம் போன்ற பல சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025-26 நிதியாண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி (சரக்கு மற்றும் சேவை) 4.22 சதவீதம் அதிகரித்து, 86,000 கோடி டாலராக சாதனை படைத்துள்ளது என்று வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் தெரிவித்தாா்.

2025-26 நிதியாண்டில், சரக்கு ஏற்றுமதி 1 சதவீதம் உயா்ந்து, 44,178 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இறக்குமதி 77,498 கோடி டாலராக உள்ளது. நாட்டின் சேவைத் துறை ஏற்றுமதி 41,831 கோடி டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளா் சந்திப்பில் வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் மேலும் கூறுகையில், ‘உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாகவே உள்ளது. இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதத்தில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போா் பதற்றம் தணிந்தால், வரும் மாதங்களில் ஏற்றுமதி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்று வா்த்தக நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா்.