கோப்புப்படம்.  
தலையங்கம்

உயர் கல்வியில் கவனம் தேவை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மூன்றே ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரிப்பு...

ஆசிரியர்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மூன்றே ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 74 சதவீதமாக அதிகரித்தது. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது.

உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்கள் குறித்து கடந்த 2021-22ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழ்நாடு 47 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தது. இதர பெரிய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு இந்தச் சாதனையைப் படைத்தது. தற்போதைய புதிய தரவுகளின்படி கணக்கிட்டால் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் தற்போது 24,338 தொடக்க, 6,992 நடுநிலை, 6,223 உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 37,553 அரசுப் பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் 6-12 ஆம் வகுப்பு வரை படித்து இளநிலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ. உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் "புதுமைப் பெண்' திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டது.

இந்த உதவித் தொகை திட்டத்தால் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து, 6-12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 ஊக்கத் தொகை வழங்கும் "தமிழ்ப் புதல்வன்' திட்டம் 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரு திட்டங்கள் மட்டுமல்லாது, 2022- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "நான் முதல்வன்' திட்டமும் உயர் கல்வி பயில வேண்டியதன் அவசியம் குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வெழுதிய 3,97,809 மாணவ, மாணவிகளில் 2,72,744 பேர் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தனர். உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் இலக்கை எட்ட வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படுவதாகத் தெரிகிறது.

பள்ளிக் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மெச்சத்தக்கதாக இல்லை என்பதுதான் எதார்த்த நிலை.

பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாதது, நிதிப் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடுகள், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தங்களது கற்பிக்கும் திறனை தகவமைத்துக் கொள்ள முடியாத தகுதியில்லாத ஆசிரியர்கள் உள்ளிட்ட காரணங்களால் அரசு சார்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் கடும் சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 20 அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் சென்னை, மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு கல்வியியல், தஞ்சை தமிழ்ப் பல்கலை., தமிழ்நாடு கால்நடை அறிவியல், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டம், கோவை வேளாண்மை, அண்ணா, தமிழ்நாடு உடற் கல்வியியல், சிதம்பரம் அண்ணாமலை ஆகிய 12 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இன்றி செயல்பட்டு வருகின்றன.

இது மட்டுமல்லாது, பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய முக்கியப் பதவிகளும் காலியாக உள்ளன. பொறுப்பு அதிகாரிகளைக் கொண்டு நிர்வகிக்கப்படுவதால் இந்தப் பல்கலைக்கழகங்களில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன. மேலும், பணியில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் கொடுக்க முடியாத அளவுக்கு பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது.

அரசு கலைக் கல்லூரிகளிலும் இதுபோன்ற நிலைமைதான் உள்ளது. எனவே, உயர் கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் சேருவதை உறுதிப்படுத்தினால் மட்டும் போதாது; அரசு சார்பு உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவால், தமிழகத்தில் உள்ள அரசு சார்ந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. அரசியல் சார்பற்ற, பண பலத்தால் அதிகாரத்தைப் பெற முயற்சிக்காத, தகுதியான கல்வியாளர்களை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாகவும், அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களாகவும் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் ஒருவா் பலி!

ஜாம்பவான்கள் சந்திப்பு...

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கேரளம், புதுச்சேரி அரசுகள் சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தல்

செங்கத்தில் கங்கைகொண்டான் கல்மண்டபம் கட்ட பூமிபூஜை

கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்து யாராலும் சாதிக்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்!

SCROLL FOR NEXT