காவல் துறையினர் மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளில் உள்ள குற்றம்-குறைகளை விசாரணை நீதிமன்றங் கள் முதல் உச்சநீதிமன்றம்வரை பல வழக்குகளில் சுட்டிக்காட்டியும் அதிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. நாட்டு மக்களை உலுக்கிய முக்கியமான வழக்குகளில்கூட எதிரிகள் விடுதலை பெறுவதும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் எனக் கருதி தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்படுவோர் முன்னதாகவே விடுவிக்கப்படுவதும் விசாரணை அமைப்புகளின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரில் 17 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து அண்மையில் உத்தரவிட்டுள்ளனர்.
'இந்த வழக்கில் விசாரணை அதிகாரி சமர்ப்பித்த சுமார் 14,000 பக்கங்கள் கொண்ட பரிந்துரையை அதே நாளில் பரிசீலித்து 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளது காவல்துறை உயர் அதிகாரிகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாட்டை வெளிச்சம் போடுகிறது.
குற்றவாளி ஒருவரோ, சிலரோ அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் என காவல்துறையினர் உறுதியாகக் கருதினால் அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை குறைபாடுகள் இல்லாமல் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.
கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல் போன்ற குற்றங்கள் புரிவதை வழக்கமாகக் கொண்ட ஒருவர் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி, அவர் தொடர்ந்து குற்றம் செய்கிறார் அல்லது செய்வார் எனக் காவல்துறை கருதினால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பது வழக்கம்.
அண்மைக் காலங்களில், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சமூகத்தை உலுக்கிய முக்கியமான வழக்குகளில் கைது செய்யப்படுவோருக்கு எதிரான பொதுமக்களின் கோபத்துக்கு அஞ்சி எதிரிகளை உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. குற்றவாளிகளைத் தண்டிக்க வழக்கமான சட்ட நடைமுறைகளை மேற்கொண்டால் காலதாமதமாகும் என்பதால், குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது எனக் காவல்துறையினர் கூறுவது, அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கிறது.
நீதிமன்றத்தில் முறையான விசாரணை ஏதுமின்றி, தங்களது தரப்பு நியாயத்தை முறையிட வாய்ப்பு அளிக்கப்படாமல் ஓராண்டு காலத்துக்கு பிணையில்கூட வெளியே வரமுடியாத வகையில் ஒருவரை சிறையில் அடைக்கப் பயன்படுத்தப்படும் குண்டர் தடுப்புச் சட்டம்-1982, அதிக அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி நீதிமன்றமும் அவ்வப்போது இடித்துரைக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2011-க்கு பிறகு குண்டர் தடுப்புச் சட்டம் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது. அதிலும் கடந்த 2021 வரையிலான 10 ஆண்டுகளில் நாட்டில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 51.2% பேர் தமிழ்நாட் டில்தான். இது தொடர்ந்து அதிகரித்து வருவதாக நீதிமன்றம் கூறி யுள்ளது கவலை அளிக்கும் ஒன்றாகும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2022-இல் முதல் 10 மாதங்களில் விசாரிக்கப்பட்ட 517 குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளில் 445 அதாவது 86% வழக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி ரத்து செய்யப்பட்டன. எஞ்சிய 14% வழக்குகளில் தொடர்புடையவர்களின் சிறைக்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2011-இல் அளித்த தீர்ப்பு ஒன்றில், ஒருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் அவசியமல்ல. மாறாக, ஒரு வழக்கு இருந்தாலும், அவர் தொடர்ந்து பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் குணம் கொண்டவராக இருப்பாரானால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம் எனக் கூறியது காவல்துறையினருக்கு வசதியாகப் போய்விட்டது.
கடந்த 2023-இல் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 'சிப்காட்' விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
எந்த ஒரு சட்டத்தையும் அதிகாரிகள் நேர்மையாகவும், சரியாகவும் பயன்படுத்தினால் மட்டுமே சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்; பயன் கிட்டும்; இல்லையெனில், குற்றவாளிகளுக்கு சட்டங்கள் மீதான அச்சம் குறைவதைத் தடுக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.