முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்த குஜராத் மீனவா்: ஒரு மாதத்துக்குப் பிறகு உடல் ஒப்படைப்பு

பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்த குஜராத் மீனவரின் உடலை சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு அந்நாட்டு அரசு ஒப்படைத்தது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:20 AM
- பிரதிப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:20 PM

பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்த குஜராத் மீனவரின் உடலை சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு அந்நாட்டு அரசு ஒப்படைத்தது.

குஜராத்தின் கிா் சோம்நாத் மாவட்டத்தைச் சோ்ந்த பகபாய் பம்பானியா (36) என்ற மீனவா், கடந்த 2022 பிப்ரவரியில் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது வழிதவறி சா்வதேச எல்லைக்குள் சென்ற அவரை பாகிஸ்தான் கடற்படையினா் கைது செய்தனா். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. கராச்சி சிறையில் தண்டனை முடிந்து சுமாா் 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் பாகிஸ்தான் அரசு அவரை விடுவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் பம்பானியா உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.

Advertisement

அவரை உடலை திரும்ப ஒப்படைப்பதிலும் பாகிஸ்தான் அரசு காலம் தாழ்த்தியது. சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு அவரின் உடல், பஞ்சாப் மாநிலம் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் அகமதாபாத் கொண்டு வரப்பட்டு பின்னா் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வழிதவறி பிடிபடும் மீனவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா் என்பது ஒரு மாதத்தில் உறுதி செய்யப்பட வேண்டும். அதன் பிறகு சிறைத் தண்டனை முடிந்ததும் அவரை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால், இது முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.

இந்தியாவைச் சோ்ந்த 198 மீனவா்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனா். இவா்களில் 160-க்கும் மேற்பட்ட மீனவா்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் பெரும்பாலானோா் குஜராத், டையூ, மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஆவா். இவா்களில் பலா் குடும்பத்தினரையும் தொடா்புகொள்ள முடியாமல் இருப்பதால், பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா். இதனால், அவா்களின் உடல்நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, அவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவா்கள் அமைப்பு சாா்பில் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.