அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இடையிலான அலாஸ்கா பேச்சுவார்த்தையில் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உடன்பாடு எதுவும் ஏற்படவில்லையென்றாலும், உலக நாடுகளின் பரவலான வரவேற்பை இந்தச் சந்திப்பு பெற்றிருக்கிறது. மூன்று ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது.
டிரம்ப்-புதின் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. போர்நிறுத்தத்துக்கு உக்ரைன்-
ரஷியா இரு நாடுகளும் தங்கள் பிராந்தியத்தில் சிலவற்றை பரிமாறிக்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் கூறியிருந்ததும், பேச்சுவார்த்தையில் உள்ள நிபந்தனைகளுக்கு புதின் உடன்படவில்லையென்றால் பெரும் விளைவுகளை ரஷியா எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்ததும் அதற்கு முக்கியக் காரணம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றதும், உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு சாதகமாக சில கருத்துகளைக் கூறி வந்தார். அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளையே அந்தக் கருத்துகள் எரிச்சலடையவைத்தன. ஆனால், அதன்பிறகு பல சந்தர்ப்பங்களில் ரஷியாவுக்கு கடும் மிரட்டலை விடுத்தார் டிரம்ப். ஆதலால், டிரம்ப்-புதின் நேரடி சந்திப்பை உலகம் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.
10 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவுக்குச் சென்ற புதினுக்கு அலாஸ்காவில் அளிக்கப்பட்ட வரவேற்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இனிய முகத்துடன் புதினை எதிர்கொண்டு டிரம்ப் கைகுலுக்கியதும், சிவப்புக் கம்பளத்தில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடைபெற்ற அறையை நோக்கி ஒன்றாக நடைபோட்டுச் சென்றதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சந்திப்பில் எதிர்பார்க்கப்படாத ஒன்று.
இரு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும்போது சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது வழக்கமானதுதான் என்றாலும், உக்ரைன் போருக்குப் பின்னர் சர்வதேச அளவில் பெரிதும் புறக்கணிப்பைச் சந்தித்துள்ள புதினுக்கு அளிக்கப்பட்ட இந்த அளவிலான வரவேற்பை அவரே எதிர்பார்த்திருந்தாரா என்பது தெரியவில்லை.
போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் புதினுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதிலும், உலக நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதிலும் புதின் சில கட்டுப்பாடுகளை தனக்குத்தானே விதித்திருந்தார். அமெரிக்கா-ரஷியா எல்லையில் உள்ள அலாஸ்கா மாகாணம் ஆங்ரேஜ் நகரில் டிரம்ப்புடனான சந்திப்புக்கு புதின் ஒப்புக்கொண்டதும் அதற்கு ஒரு காரணம்.
புதினுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லையென்றாலும், பல விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன என டிரம்ப் தெரிவித்திருக்கிறார். பிராந்தியங்களை ரஷியாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் கடந்த சில நாள்களுக்கு முன்பு சொன்னபோது இருந்த கடுமை, புதினுடனான சந்திப்புக்குப் பின்னர் இல்லை என்பதை கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று, பிராந்திய பரிமாற்றம் குறித்து பேசப்பட்டிருக்காது அல்லது அதற்கு சாதகமான பதிலை புதின் அளித்திருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தையில் உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்கிற குற்றச்சாட்டுக்கும் தனது செயல்பாட்டின் மூலம் பதிலளித்திருக்கிறார் டிரம்ப். புதினுடனான பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற அம்சங்கள் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களை தொலைபேசி மூலம் உடனடியாகத் தொடர்புகொண்டு டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டார். எந்த ஒரு போரையும் தானே நிறுத்தப்போவதாக தோற்றத்தை உருவாக்கிவரும் டிரம்ப், இந்த ஆலோசனையை நடத்தியிருப்பதை அவரது அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகத்தான் கருத வேண்டும்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தற்காலிக போர் நிறுத்தம் மட்டும் போதாது, நேரடி அமைதி ஒப்பந்தம் தேவை என்கிற நிலைப்பாட்டையும் டிரம்ப் எடுத்திருக்கிறார்.
ரஷியாவும்-உக்ரைனும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அதற்குப் பொருள். புதினுடனான சந்திப்பின் தொடர்ச்சியாக வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை ஆக.18-ஆம் தேதி சந்திக்கவிருக்கிறார் டிரம்ப்.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அதிக வரி விதிப்பதாகக் கூறிய பிறகே, உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு புதின் முன்வந்தார் என அலாஸ்கா சந்திப்புக்கு முன்பு டிரம்ப் கூறினார். புதினுடனான
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சில முன்னேற்றங்கள் காரணமாக, இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பு குறித்து இப்போதைக்கு முடிவெடுக்க வேண்டியதில்லை என்று நினைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
புதினைப் பொருத்தவரை சர்வதேச தனிமைப்படுத்துதலில் இருந்து ஒரு சிறிய தளர்வு கிடைத்திருக்கிறது. இந்தியா மீதான கூடுதல் வரிவிதிப்பை அமல்படுத்துவது குறித்து அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என டிரம்ப் கூறியிருப்பதன் மூலம் இந்தியாவுக்கும் ஓர் ஆறுதல்.
உக்ரைன்-ரஷியா இடையிலான போரை நிறுத்த உடன்பாடு ஏற்படாவிட்டாலும் அதற்கான நம்பிக்கை தரும் திசையைக் காட்டியிருக்கிறது அலாஸ்கா சந்திப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.