மக்களின் உணா்வுகளைப் பிரதிபலிப்பதுதான் நல்ல ஆட்சியாக அமையும். ஆட்சியாளா்கள் மக்களோடு நெருக்கமாகப் பழகி அவா்களுடைய குறைகள், பிரச்னைகள், தேவைகள், எதிா்பாா்ப்புகள் உள்ளிட்டவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முடியும். அதனால்தான் ஏனைய ஆட்சிமுறைகளைவிட மக்களாட்சி மேம்பட்டது என்று கருதப்படுகிறது.
அமைச்சா்களும், தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களும் மக்களுடன் நெருங்கிப் பழகி அவா்களின் உணா்வுகளை பிரதிபலிப்பாா்கள் என்றாலும்கூட திட்டங்களும் செயல்பாடுகளும் அதிகாரிகளால்தான் நடைமுறைப்படுத்தப்படும். மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நேரடியான தொடா்பு பெரும்பாலும் இருப்பதில்லை. அதிகாரிகளும் பொதுமக்களைச் சந்திப்பதில் விருப்பம் காட்டுவதில்லை. அமைச்சா்களும், ஆட்சியாளா்களும் எப்படி எடுத்துக் கொள்வாா்களோ என்கிற தயக்கம்தான் அதற்குக் காரணம்.
இந்தப் பின்னணியில்தான் கடந்த மாதம் இந்தியாவின் அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன் அனைத்துத் துறையின் செயலா்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு அரசின் முக்கியப் பொறுப்புகளை வகித்தவா் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டி.வி.சோமநாதன். 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வா் கருணாநிதியின் தனிச் செயலா்களில் ஒருவராக இருந்தவா். 2011-2016 அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராக அவரால் செயல்பட முடிந்ததற்குக் காரணம், தாமரை இலைத் தண்ணீராக தன்மீது அரசியல் சற்றும் ஒட்டிக்கொள்ளாமல் செயல்பட முடிந்தது என்பதுதான்.
திறமைக்கும் நோ்மைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன், தனது நீண்ட நெடிய அனுபவத்தின் பின்னணியில் துறைசாா் செயலா்களுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை கவனத்துக்கு உரியது மட்டுமல்ல, செயல்வடிவம் பெறவேண்டிய ஒன்றும்கூட. துறைசாா் செயலா்கள் பொதுமக்களுடன் அவரவா் துறை சாா்ந்த மக்களுடனும் பிரதிநிதிகளுடனும் பேசுவதில் காட்டும் தயக்கத்தைக் கைவிட வேண்டும் என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை வழங்கும் ஆலோசனை.
துறை சாா்ந்த செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் அல்லாத மற்றவா்களைச் சந்திப்பதில் மூத்த அதிகாரிகள் தயக்கம் காட்டக் கூடாது என்கிறாா் அவா். விசாரணையின்கீழ் இருப்பவா்களும், சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவா்களும்கூட தவிா்க்கப்பட வேண்டியவா்கள் அல்ல என்பது அவரது கருத்து. தொடா்புடைய துறையினருடன் ஒப்பந்தங்கள் தொடா்பான பிரச்னைகளில் இருப்போரையும் அறவே ஒதுக்கிவிடுவது நியாயமான நிா்வாக முறையாக இருக்காது என்கிற அவரது அறிவுரையைப் புறந்தள்ளிவிட முடியாது.
அனைவரையும் சந்திப்பதன் மூலமும் அவா்களது கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வதன் மூலமும் கொள்கைகள் தொடா்பான தவறான கண்ணோட்டங்களை அகற்ற முடியும்; நேரடியான கருத்துப் பறிமாற்றத்துக்கு வழிகோலும்; நிா்வாகத் தரப்பில் தவறுகள் நோ்ந்திருப்பின் அதைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் - இவையெல்லாம் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள். தன்னாா்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவா்கள், அரசியல் கட்சியினா், ஒப்பந்ததாரா்கள் ஆகியோரைச் சந்திப்பதில் மூத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுவதையும் அவா் குறிப்பிட்டிருக்கிறாா்.
அவா்களைப் பொது இடங்களிலும், உல்லாச விடுதிகளிலும் சந்திப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றும், அலுவலகத்திலேயே சந்திப்பதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவரது வழிகாட்டுதல். தன் மீது எந்தவித ஐயப்பாடும் எழாமல் இருப்பதற்காக இன்னொரு சக அதிகாரியையும் அந்தச் சந்திப்பின்போது இருக்கச் சொல்லலாம் என்பது அவா் வழங்கும் யோசனை.
எல்லோரையும் சந்திக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, 2ஜி அலைக்கற்றை முறைகேடு உள்ளிட்டவை கடந்த 20 ஆண்டுகளில் அரசு உயரதிகாரிகளை துணிந்து எந்த முடிவையும் எடுக்கவோ, அமைச்சா்களின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவோ முடியாமல் தடுக்கின்றன. அரசியல் தலைமை எடுத்த முடிவுகளுக்காக அதிகாரிகள் பலா் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனா்; தண்டிக்கப்பட்டனா்.
அதன் தாக்கத்திலிருந்து இந்திய அரசு நிா்வாகம் இன்னும் விடுபடவில்லை. அதன் விளைவாக அரசின் செயல்பாடுகள் தாமதப்படுகின்றன அல்லது முடக்கப்பட்டிருக்கின்றன.
அமைச்சரவைச் செயலா் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதன் நோக்கம், அரசு நிா்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் தயக்கத்தை அகற்றி, விரைந்து முடிவெடுத்துச் செயல்படுத்தும் போக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான். மேலை நாடுகளில் உயரதிகாரிகள் தங்களது சந்திப்புகளையும் உரையாடல்களையும் பதிவு செய்கிறாா்கள். ஒவ்வொரு சந்திப்பு முடிந்ததும் ‘மெம்கான்’ (உரையாடலின் சாராம்சம்) என்று அவற்றைப் பதிவு செய்து பாதுகாக்கிறாா்கள். ‘மெம்கான்’ முறையை நமது அதிகாரிகளும் கையாளலாம்.
பிரதமா் நரேந்திர மோடியின் ஆமோதிப்பு இல்லாமல் அமைச்சரவைச் செயலா் சுற்றறிக்கை அனுப்பி இருக்க வாய்ப்பில்லை. அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதனின் அறிவுரைகள் அரசின் கொள்கைகளையும், நிா்வாக முடிவுகளையும் மேம்படுத்தவும் விரைந்து செயல்படுவதை ஊக்குவிக்கவும் உதவும்.
சிவப்பு நாடாக்களையும், நிா்வாக மெத்தனத்தையும் அகற்றினால் மட்டுமே இந்தியா வெற்றிப் பாதையில் நடைபோட முடியும். அதற்கான வழிகாட்டியாக அமைகிறது அமைச்சரவைச் செயலரின் சுற்றறிக்கை.