கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக "வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு' சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஆதரவு, எதிர்ப்பு எனக் கலவையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2005-ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு நிதியாண்டும் ஊரகப் பகுதிகளில் குறைந்தபட்சம் 100 நாள்களுக்கு ஊதியத்துடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இதன்மூலம், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
நாடு முழுவதும் 741 மாவட்டங்களைச் சேர்ந்த 7,212 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 2.69 லட்சம் கிராம ஊராட்சிப் பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை 37 மாவட்டங்களைச் சேர்ந்த 388 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 12,525 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுவரும் நாள்கள் 125-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் பராமரிப்பு, சாலைகள், அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட ஊரக கட்டமைப்பு, வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்பு உருவாக்கம், பேரிடர் அபாய குறைப்புடன் தொடர்புடைய பருவநிலை மாற்றத்துக்குத் தக்கவாறு நடந்துகொள்ளுதல் ஆகிய நான்கு முக்கியப் பணிகள் புதிய திட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூறு சதவீதம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், புதிய திட்டமான 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதிச் சுமையை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்துகொள்ளும். அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில அரசுகள் 40 சதவீதத்தையும் அளிக்க வேண்டும். இதை எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகள் எதிர்க்கின்றன.
முந்தைய திட்டத்தின்படி கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு உண்மையிலேயே பயன் தரக்கூடிய பணிகள் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது. குறிப்பாக, இந்தத் திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்கள் போதிய எண்ணிக்கையில் கிடைக்காமல், கூடுதல் கூலி கொடுத்து வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
விவசாயத்தில் ஏற்கெனவே போதிய லாபம் கிடைக்காத சூழ்நிலையில் அது விவசாயிகளைப் பெரும் நெருக்கடியில் தள்ளியது. அந்தப் பிரச்னைக்கு புதிய திட்டத்தில் தீர்வு காணப்பட்டிருக்கிறது. வேளாண் பருவ காலங்களில் விவசாயப் பணிகள் உச்சகட்டத்தில் இருக்கும்போது, அந்தப் பணிகளுக்குப் போதிய அளவு விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்க வசதியாக 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், எந்தப் பணியும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று புதிய திட்டம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்திருக்கிறது. 2021-22-இல் ரூ.96,812 கோடியை மத்திய அரசு விடுவித்த நிலையில், 2022-23-இல் ரூ.88,290 கோடி, 2023-24-இல் ரூ.88,217 கோடி, 2024-25-இல் ரூ.85,640 கோடியாக அது குறைந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பது பெரும்பாலான மாநிலங்களில் (ஏன், அனைத்து மாநிலங்களிலும் என்றுகூடச் சொல்லலாம்) வரிப்பணம் விரயம் தானே தவிர வேறொன்றுமில்லை. இதுவரையில் வழங்கப்பட்ட ஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையை ஒவ்வொரு மாநிலமும் வெளியிட அறிவுறுத்தினால், இதுவரையில் செய்யப்பட்ட விரயம் எவ்வளவு என்பது தெரியவரும்.
ஊரகத் துறை அதிகாரிகள் ஊதியத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நிலவியது. நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பணம் கொடுத்தால்தான் வேலைவாய்ப்பு என்கிற புதிய நடைமுறை பல இடங்களிலும் அறிமுகமாகி விட்டது. மகளிர் உரிமைத் தொகை விநியோகத்துக்கு இதுதான் முன்னோடித் திட்டம். அதனால், படிப்படியாக இந்தத் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்கிற பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை மத்திய அரசு மறைமுகமாக நிறைவேற்ற முற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் வரிப் பணத்தை, மாவட்டந்தோறும் தொழில்கள் தொடங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்த முதலீடு செய்வதுதான் அறிவார்ந்த பொருளாதாரம். மாநிலங்களின் பங்களிப்பு இருந்தால்தான், ஓரளவுக்கு கண்காணிப்பு இருக்கும் என்பது வரவேற்புக்குரிய முடிவு.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்று சொன்ன மகாத்மா காந்தியின் பெயர்தான், கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டத்துக்கு மிகப் பொருத்தமானது.
அவரது பெயரை அந்தத் திட்டத்திலிருந்து ஏன் நீக்க வேண்டும்? காந்திஜியின் பெயரால் நடக்கும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தானோ என்னவோ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.