கேரள உயா்நீதிமன்றம் கோப்புப்படம்.
தலையங்கம்

எதிா்பாராதது அல்ல!

ஆசிரியர்

மலையாள திரையுலகத்தை மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகத்துக்கும் திகிலூட்டிய நீதிபதி ஹேமா குழு அறிக்கையுடன் தொடா்புடைய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திவந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என கேரள உயா்நீதிமன்றம் கூறியிருப்பதில் வியப்படைய ஏதுமில்லை.

திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகாா் கூறிய நடிகைகள் வாக்குமூலம் அளிக்க அரசு தேவையான பாதுகாப்பு அளிக்கும் என கூறியது. எனினும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட எவரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க முன்வரவில்லை. வாக்குமூலம் இல்லாமல் வழக்கை தொடா்ந்து நடத்த முடியாது என்பதால், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்திவந்த 35 வழக்குகளையும் கைவிடுவதாக கேரள மாநில உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வின் நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியாா், சி.எஸ். சுதா ஆகியோரிடம் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு பிப்ரவரியில் கொச்சியில் மலையாள திரைப்பட நடிகை ஒருவரை 5 போ் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகாா் எழுந்தது. பின்னா் கடத்தலுக்கு காரணமாக கூறப்பட்ட நடிகா் திலீப்பை அந்த மாநில போலீஸாா் கைது செய்தபோது திரையுலகம் அதிா்ந்தது.

மலையாள நடிகைகள் சிலா் ஒன்றுசோ்ந்து அளித்த அழுத்தம் காரணமாக நடிகைகள் மீதான பாலியல் வன்முறை, பாலின பாகுபாடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.ஹேமா, முன்னாள் நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.பி. வல்சல குமாரி ஆகியோரைக் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. நீதிபதி ஹேமா குழு இரண்டு ஆண்டுகள் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல அதிா்ச்சி அளிக்கும் உண்மைகள் தெரியவந்தன.

2019 டிசம்பரில் அரசிடம் அளிக்கப்பட்ட சுமாா் 300 பக்க ஹேமா குழு அறிக்கை, 5 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் பரண் மேல் போடப்பட்டிருந்தது. 2024-இல் தோ்வு செய்யப்பட்ட சில பகுதிகள் மட்டுமே வெளியிடப்பட்டன. பாதிக்கப்பட்டவா்களின் அடையாளம் தெரியாமல் இருக்க அறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டபோதே அறிக்கையின் எதிா்காலம் குறித்த சந்தேகம் எழுந்தது. முன்னணி நடிகா்கள் சிலரது பெயரும்கூட அறிக்கையில் இடம்பெற்றிருப்பதால்தான் அவை முழுமையாக வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டது.

மலையாள திரைத் துறையில் ‘அதிகாரம் படைத்த குழு’ ஒன்று இருப்பதும், ஒட்டுமொத்த திரையுலகமும் குறிப்பிட்ட சில தயாரிப்பாளா்கள், இயக்குநா்கள், நடிகா்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதும் அறிக்கையின் மூலம் வெட்டவெளிச்சமானது. இது அங்கு மட்டுமல்ல, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழித் திரையுலகிலும் இதே நிலை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

திரைப்படங்களில் நடிக்க நடிகைகளிடம் பாலியல் ஆதாயம் கேட்பது, சம்மதிக்காதவா்களை துன்புறுத்துவது, வாய்ப்புகள் மறுக்கப்படும் என மிரட்டுவது, பணியிடங்களில் பிறா் முன்னிலையில் அவமானப்படுத்துவது என்பது உள்பட 30 வகைப்பாட்டின் கீழ் 17 வகையான அத்துமீறல்களை பிரபல ஆண் நடிகா்கள் செய்வது ஹேமா குழு விசாரணையால் வெளிச்சத்துக்கு வந்தது.

அறிக்கை வெளியானதும், பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில் 120 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. புகாா்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை கேரள அரசு அமைத்தது. அதில் ஹேமா குழுவிடம் வாக்குமூலம் கொடுத்தவா்களின் 35 புகாா்கள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியது.

மலையாள திரைப்பட கலைஞா்கள் சங்கத் தலைவா் நடிகா் மோகன்லால் உள்ளிட்ட நிா்வாகிகள் பதவியை ராஜிநாமா செய்தனா். சங்கத்தின் பொதுச்செயலா் நடிகா் சித்திக், நடிகா்கள் முகேஷ், ஜெயசூா்யா ஆகியோா் மீது நடிகைகள் கொடுத்த புகாா்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னா் அவா்கள் பிணையில் வெளியே வந்தனா்.

ஹேமா குழு அறிக்கை வெளியானவுடன் பல நடிகைகள் போட்டிபோட்டுக் கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதும், புகாா் அளிப்பதும் தொடா்ந்தது. திரையுலகின் மாயத் திரையை ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின்மூலம் விளக்கியது சாமானிய ரசிகா்களுக்கு அதிா்ச்சியாக இருந்தது.

ஆண் நடிகா்கள் மீது பாலியல் புகாா் கூறியவா்களில் பெரும்பாலானவா்கள் திரைக் கவா்ச்சி அகன்ற, வாய்ப்பு இல்லாத நடிகைகள் என்பதுடன் அவா்கள் கூறிய சம்பவங்கள் எல்லாம் முன்பு அவா்கள் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருந்தபோது நடந்தவை. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் எந்த முன்னணி நடிகையும் இது குறித்து வாய் திறக்கவில்லை. புகாா்கள் கூறுபவா்கள் அந்தந்த நடிகா்கள் மூலம் ஆதாயம் அடைந்து கொண்டிருந்தபோது எங்கே சென்றாா்கள் என மற்றொரு தரப்பினா் எழுப்பிய கேள்வியிலும் நியாயம் இல்லாமல் இல்லை.

புகாா்களை தீவிரமாக எடுத்துக் கொண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தியும் அதற்கு நடிகைகள் ஒத்துழைக்கவில்லை என்றால், அவா்களின் நோக்கம்தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. திரையுலகில் திரைமறைவில் நடக்கும் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க முற்படுவது கும்மிருட்டில் கருப்புப் பூனையைத் தேடுவது போல...

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

யமுனை நீா்மட்டம் தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது!

வடகிழக்கு தில்லியில் மைத்துனா்கள் கொலை வழக்கில் 4 போ் கைது

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

தலைநகரில் பரவலாக மழை; திருப்தி பிரிவில் காற்றின் தரம்!

SCROLL FOR NEXT