அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். 
தலையங்கம்

தோண்ட... தோண்ட... தோண்ட...

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 81 டாலரை தொட்டது.

ஆசிரியர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த நாட்டு எரிசக்தித் துறைக்கு விடுத்திருக்கும் அறிவிப்புகள், 'டிரில் பேபி டிரில்'. அதாவது, எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுங்கள் என்று அர்த்தம். அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, எண்ணெய் வளம் அதிகம் இல்லாத, தனது கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 81 டாலரை தொட்டது. ஈரான்- இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்குப் பிறகு 67 டாலராக குறைந்து, ஓரளவுக்கு சமநிலைப்பட்டிருக்கிறது. இந்த நிலைமை அப்படியே தொடரக்கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

இத்தனைக்கும் 'ஓபெக்' நாடுகளிடம் போதிய கையிருப்பு இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். 'தனது உற்பத்தியும், கையிருப்பும் போதிய அளவில் இருக்க வேண்டும் என்று அமெரிக்காவே எச்சரிக்கையாக இருக்கும் நிலையில், தனது தேவையில் 88 % கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் இந்தியாவின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 2012 நிதியாண்டிலிருந்து இந்தியாவின் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதால், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கச்சா எண்ணெய் வயல்கள் ஆய்வும், உற்பத்தியும் குறைந்து வருவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. புதிய கச்சா எண்ணெய் வயல்களை அடையாளம் கண்டு, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து உற்பத்தி செய்வது எளிதானது அல்ல. ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு அதிக அளவில் மூலதனம் தேவைப்படும். பழைய எண்ணெய் வயல்களிலும், சுமாரான அளவில் மட்டுமே எண்ணெய் வளம் கொண்ட இடங்களிலும் நிலத்தடி கச்சா எண்ணெயின் இருப்பும் குறைந்து வருகிறது.

இப்போதுதான் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசு விழித்துக் கொண்டு புதிய ஹைட்ரோ கார்பன் வயல்களின் கண்டுபிடிப்பு அறவே இல்லாமல் இருப்பதை உணர்ந்திருக்கிறது. ஆழ்கடல் கச்சா எண்ணெய் ஆய்வுக்கான தொழில்நுட்பத்திலும் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பதும் காலம் கடந்து புரிந்திருக்கிறது.

உள்நாட்டு, பன்னாட்டுக் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலமும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும்தான், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையையும், உற்பத்தியையும் எட்ட முடியும் என்கிற உண்மையைப் புரிந்து கொள்ள இத்தனை ஆண்டுகளாகி இருக்கின்றன. அதன் விளைவுதான், 2025 எண்ணெய் வயல்கள் (வரைமுறைப்படுத்துதல், மேம்படுத்துதல்) திருத்தச் சட்டம்.

2030-க்குள் 10 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்த ஆய்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார். அதற்கு, தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் இருப்புக் குறித்த ஆய்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டால் தான் அமைச்சரின் எண்ணம் ஈடேறும். ஆய்வுக்கான விருப்ப மனுக்களில் 38 % தடை செய்யப்பட்ட பகுதிகளில்தான் அமைகின்றன.

மத்திய அரசின் ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் கடந்த நிதியாண்டில் புதிதாக 578 ஆழ்துளை எண்ணெய் கிணறுகளை நிறுவி இருக்கிறது. கடந்த 35 ஆண்டுகளில் இதுதான் அதிக சாதனை. இவற்றில் 109 சோதனைக் கிணறுகள் என்றால் ஏனைய 469 ஆழ்துளைக் கிணறுகள் எண்ணெய் எடுப்பதற்கானவை. (இவற்றுக்கான மூலதனச் செலவு மட்டும் 7.2 பில்லியன் டாலர்).

'மும்பை ஹை' எனப்படும் மும்பையை ஒட்டிய அரபிக் கடல் பகுதிகளில் எண்ணெய் வயல்களைக் கண்டறியவும், உற்பத்தி செய்யவும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. தனியார் பன்னாட்டு நிறுவனமான 'கெய்ன் ஆயில் அண்ட் கேஸ்' இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரித்து மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் அளவை எட்டத் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 400 கோடி டாலர் முதலீடு செய்ய இருக்கிறது.

ஏப்ரல் 2000 முதல் செப்டம்பர் 2024 வரையிலான 24 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் துறையில் இந்தியா ஈர்த்திருக்கும் மொத்த அந்நிய நேரடி முதலீடு வெறும் 8.2 பில்லியன் டாலர் மட்டுமே.

முதலீட்டு அளவிலும் எண்ணெய் வயல்களைக் கையகப்படுத்துவதில் சிக்கலும், அதிக இழப்பீட்டுத் தேவையும் உலகின் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தடையாக இருக்கின்றன. ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்கான செலவு மிக அதிகம் என்பதால், ஏனைய தொழிற்சாலைகளைப் போல நிலத்துக்கான இழப்பீடு வழங்க முடிவதில்லை என்பது அவர்களது வாதம்.

வேளாண்மைக்கும், வசதியான வாழ்க்கைக்கும் எரிசக்தி தேவை என்றால், அதற்காக சில சமரசங்களுக்கும் நாம் தயாராக வேண்டும். இலவச மின்சாரம் வேண்டுமென்றால் அணு மின் நிலையங்களின் ஆபத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தாராளமாக பெட்ரோல், டீசல் பயன்பாடு வேண்டுமென்றால் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நமது விளைநிலங்களை பலி கொடுத்தாக வேண்டும்.

நம்மைப் பற்றி கவலைப்படப் போகிறோமா அல்லது நமது முன்னோர்களைப் போல, வருங்கால சந்ததியினரைப் பற்றி கவலைப்படப் போகிறோமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசியக் கோப்பை: இந்திய வம்சாவளி ஜதீந்தர் சிங் தலைமையில் ஓமன் அணி!

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்த பிக்பாஸ் பிரபலம்! புனிதத்தை மீட்க பரிகாரப் பூஜை!

ரவி மோகன் இயக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு!

யுபிஐ, உணவு டெலிவரி... ஓடிபி எண் கேட்கத் தடையில்லை! - மதுரைக் கிளை

தெய்வ தரிசனம்... எமபயம் போக்கும் திருகோடிக்கா திருகோடீஸ்வரர்!

SCROLL FOR NEXT