பனை மரத்தில் பதநீா் இறக்கும்பணியில் ஈடுபடும் தொழிலாளி 
தலையங்கம்

கள்ளுக்கடையா, தடையா?

இந்தியாவில் உள்ள பனை மரங்களில் ஏறத்தாழ பாதி தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன.

ஆசிரியர்

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதின் குக்கட்பள்ளி, பாலநகர் உள்ளிட்ட இடங்களில் கள் குடித்தவர்களில் சுமார் 40 பேருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. இவர்களில்

12 பேர் பெண்கள்; சிகிச்சை பலனின்றி 9 பேர் இறந்துள்ளனர். கள்ளில் கூடுதல் போதைக்காக சில ரசாயனப் பொருள்களைக் கலப்படம் செய்ததுதான் உயிரிழப்புகளுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி, தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. மதுக் கடைகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல் தலைவர் ஒருவரேகூட கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட கிராமம் ஒன்றில் பனையின் மீது ஏறி, கள் இறக்கி அதற்கான தனது ஆதரவைத் தெரிவித்தார். கள் ஆதரவு மாநாடு ஒன்றையும் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். கள்ளுக் கடைகளைத் திறந்தால் முக்கால்வாசி மதுக் கடைகளை மூடிவிடலாம் எனக் கூறி, கடந்த 2023}இல் தமிழக பாஜகவினர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்து கடந்த நிதியாண்டில் ரூ. 48,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளது தமிழக அரசு. கள் இறக்க அனுமதி அளித்தால் மதுபான ஆலை அதிபர்களைப் போல பனை, தென்னை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்பது கள் ஆதரவாளர்களின் வாதம்.

அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகள் என தமிழ்நாட்டைச் சுற்றிலும் கள்ளுக்குத் தடை இல்லை. அங்கெல்லாம் முறைப்படி அனுமதி வழங்கப்பட்ட கடைகள் மூலம் கள் விற்பனை செய்யப்படுகிறது. கேரளத்தில், கள்ளை மதிப்பூட்டிய பொருளாக மாற்றி நட்சத்திர விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களில் விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள பனை மரங்களில் ஏறத்தாழ பாதி தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. ஒரு காலத்தில் சுமார் 30 கோடியாக இருந்த பனை மரங்கள், தற்போது சுமார் 5 கோடியாகக் குறைந்து விட்டன. கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் சுமார் 9 கோடி தென்னை மரங்கள் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் கள் இறக்கினால் விவசாயிகளுக்கும், அரசுக்கும் வருமானம் கிடைக்கும் என்பது கள் ஆதரவாளர்களின் வாதம்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது நிரந்தரமாக இல்லாமல் மாறி மாறி அமல்படுத்தப்பட்டு வந்த காலகட்டத்தில், கடந்த 1986}இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சாராயம் மற்றும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதும், அரசே மதுபானக் கடைகளை நடத்தத் தொடங்கியது என்றாலும் கள்ளுக்கான தடை அகற்றப்படவில்லை.

பனை, தென்னை, ஈச்ச மரம் ஆகியவற்றிலிருந்து இயற்கையாக இறக்கப்படும் "நீரா' பானம் உடலுக்கு நல்லது. அதையே ஓரிரு நாள்கள் புளிக்க வைத்தால் உண்டாகும் கள்ளில் ஆல்கஹால் 4 முதல் 6 சதவீதம் வரை இருக்கும். அதை அளவுக்கு அதிகமாக போதைக்காகப் பருகும்போது ஜீரணக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு, தேவையற்ற மனப் பதற்றம், நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ உண்மை.

தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகள் இருந்தபோது கள் விரைவாக புளிப்பதற்காகவும், அதிகமான போதைக்காகவும் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் சில ரசாயனங்கள் மற்றும் இயற்கையான சேர்மானங்களைச் சேர்த்தனர் . அளவுக்கு அதிகமாக அந்தக் கள்ளைக் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டவர்கள் பலர்.

விற்பனை செய்யப்படும் கள்ளில் கலப்படத்தை தடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கலப்படத்தைத் தடுக்க முடியாமல் போனதால்தான் அன்றைய எம்ஜிஆர் அரசு கள்ளைத் தடை செய்தது.

அரசு விற்பனை செய்யும் மதுவால் மக்களின் உடல்நலம், சமூக}பொருளாதாரச் சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன என குற்றஞ்சாட்டும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கள்ளுக் கடைகளைத் திறப்பதாலும் சீர்கேடுகள் ஏற்படும் என்பதை ஏற்க மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. கள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காது எனக் கூறுவோர், கள்ளில் கலப்படம் செய்யப்படுவது குறித்து கவலைப்படுவதில்லை. மதுக் கடைகளை மூட வேண்டும் எனக் குரல் கொடுப்போர் கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என்பது நகைமுரண்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தனர். கள்ளுக் கடைகள் திறந்தால் அதுபோன்ற விபரீதங்கள் நிகழும் என்பதற்கு சமீபத்திய ஹைதராபாத் சம்பவமே சாட்சி. 1982} இல் கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் வைபின் தீவில் 75 பேரின் உயிரைப் பலி கொண்டு 63 பேரின் பார்வையைப் பறித்து பலரை நடைப்பிணமாக்கிய கள்ளச்சாராய, கலப்படக் கள் சம்பவம் என்றும் நினைவில் இருந்து அகலாது.

கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, அழிந்துவரும் பனை மரங்களைப் பெருக்கவும், பதநீர் இறக்குதலை ஊக்குவிக்கவும், அதில் மதிப்பூட்டிய பொருள்களைத் தயாரித்து சந்தைப்படுத்தவும் அரசு ஊக்கமளிக்க அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுக்கலாம். மதுபோதையிலிருந்து மக்களை மீட்பதற்கான வழியைத் தேடாமல், கள்ளுக் கடைகளைத் திறந்து குறைந்த விலையில் மதுவை வழங்குவது கண்ணை விற்று சித்திரம் வாங்குவதைப்போல் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT