நக்ஸல் இயக்கம் என்று பரவலாக அறியப்படும் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் பொதுச் செயலராக இருந்த நம்பலா கேசவ ராவ் (எ) பசவராஜு (71) கொல்லப்பட்டது ஆயுதம் தாங்கிப் போராடும் அந்த இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த இவர். 1970-களில் இருந்தே இடதுசாரி தீவிரவாத அமைப்புகளில் செயல்பட்டு வந்தார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு சத்தீஸ்கர், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிர அரசுகள் வெகுமதி அறிவித்திருந்தன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து திருப்பதி அருகே கடந்த 2003-இல் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல், சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் 2010-இல் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல், 2020-இல் சுக்மாவில் பாதுகாப்புப் படையினர் 17 பேர் கொல்லப்பட்ட தாக்குதல், 2021-இல் பிஜாபூரில் பாதுகாப்புப் படையினர் 22 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் போன்ற எண்ணற்ற தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்.
சத்தீஸ்கரில் நாராயண்பூர் - பிஜாபூர் - தந்தேவாடா ஆகிய மூன்று மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள அபூஜ்மார் வனப் பகுதியில் கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் பசவராஜு உள்ளிட்ட 27 நக்ஸல்களைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
நக்ஸல் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த செருகுரி ராஜ்குமார் பாதுகாப்புப் படையினரால் கடந்த 2010-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு பசவராஜு கொல்லப்பட்டது அந்த இயக்கத்துக்கு மிகப் பெரும் பின்னடைவாக ஆகியுள்ளது.
முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலம், பிஜாபூர் மாவட்டத்தில் 11 பெண்கள் உள்பட 31 நக்ஸல்கள் கடந்த பிப்ரவரியில் கொல்லப்பட்டனர். தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்க அடிப்படை கட்டமைப்புகள், துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை, ஆயுதக் கிடங்குகள், பிரசுரங்கள் அச்சடிக்கும் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்த இந்திராவதி தேசிய பூங்கா பகுதி பாதுகாப்புப் படையினரால் அப்போது நிர்மூலமாக்கப்பட்டது.
பசவராஜு கொல்லப்பட்ட அடுத்த இரண்டாவது நாளில் (மே 23), மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் 4 பேரும், ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் ஜன முக்தி பரிஷத் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின் தளபதியான பப்பு லோஹரா உள்ளிட்ட இருவர் மே 24-ஆம் தேதியும், அதே பகுதியில் மனீஷ் யாதவ் என்பவர் மே 25-ஆம் தேதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வளர்ச்சிப் பணிகளில் வனத்தில் வாழும் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கத்தில் அந்த மக்களின் ஆதரவை நக்ஸல்கள் பெற்று வந்தனர். ஆனால், அதன்பின்னர் நக்ஸல் ஆதரவாளர்கள் என்று கூறி பாதுகாப்புப் படையினராலும், காட்டிக் கொடுப்பவர்கள் என்று கூறி நக்ஸல்களாலும் அப்பாவிப் பொதுமக்கள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளானார்கள்.
நக்ஸல் தீவிரவாதம் 2026 மார்ச் 31-க்குள் முழுமையாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நக்ஸல்களுக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும், வங்கிக் கணக்குகளையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை ஆகியவை முடக்கியதன் மூலம் அவர்களது வருவாய் ஆதாரம் துண்டிக்கப்பட்டது.
2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், அந்தப் பகுதிகளில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளுடன் வளர்ச்சிப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. சரணடையும் நக்ஸல்களுக்கு மறுவாழ்வு, காவல் நிலையங்கள் அமைத்தல், சமூக காவல் பணி, பாதுகாப்புப் படைகளுக்கான நிதி என கடந்த 10 ஆண்டுகளில் ரூ.6,121 கோடி ஒதுக்கப்பட்டது.
நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் 14,600 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7,768 கைப்பேசி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. 46 தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), 49 திறன் மேம்பாட்டு மையங்கள், 178 ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. 5,731 அஞ்சல் அலுவலகங்கள், 1,007 வங்கிக் கிளைகள், 937 ஏடிஎம்}கள் ஆகியவை திறக்கப்பட்டன.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2014-இல் 126-ஆக இருந்தது 2024-இல் 38-ஆக சுருக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர், கொண்டகாவ் ஆகிய மாவட்டங்கள் நக்ஸல் பாதிப்பு மாவட்டங்கள் பட்டியலில் இருந்து கடந்த மே 28-ஆம் தேதி நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு என்பது இந்தியா போன்ற பரந்துவிரிந்த, 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டில் சாத்தியமில்லாதது என்பதை நக்ஸல்கள் உணர்ந்து தீவிரவாதத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை மேலும் முன்னெடுத்து நக்ஸல் பாதிப்பு இந்தியாவில் இல்லை என்ற நிலையை உருவாக்கி அந்தப் பகுதிகளில் நிரந்தர அமைதிக்கு மத்திய அரசு வழிவகுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.