அதிபா் டொனால்ட் டிரம்ப்  AP
தலையங்கம்

கையறு நிலையில் உலகம்!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி...

ஆசிரியர்

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்குதல் நடத்துவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பு வெளியான மறுநாளே ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களைக் குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியிருக்கிறது அமெரிக்கா.

ஃபோர்டோவில் நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி தளத்தின் மீது 'பங்கர் பஸ்டர்' வகை குண்டுகள் மூலமும், மற்ற இரண்டு அணுசக்தி தளங்கள் மீது 30 டொமாஹாக் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. பங்கர் பஸ்டர் வகை குண்டுகளைச் சுமந்து செல்லும் பி-2 போர் விமானங்கள் மிஸோரி மாகாணத்தில் உள்ள விமானப் படைத் தளத்திலிருந்து பசிபிக் தீவான குவாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட போதே, ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவது உறுதியானது. இப்போது அந்தத் தாக்குதல் நடந்தேவிட்டது.

அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானை பேச்சுவார்த்தைக்கு உடன்பட வைக்க ஒருபுறம் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அமெரிக்கா நடத்தியிருக்கிற இந்தத் தாக்குதல், அணுசக்தி பேச்சுவார்த்தையின் மீது வீசப்பட்ட குண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. ஈரானில் நடான்ஸ், அராக், இஸ்ஃபஹான் ஆகிய மூன்று இடங்களில் உள்ள அணுசக்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி செறிவூட்டும் மையங்களைத் தகா்க்கும் வகையில் இந்தப் போரில் அமெரிக்கா தலையிடும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அதன்படி, ஃபோா்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் ஆகிய மூன்று இடங்களில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவின் பி-2 வகை விமானங்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றன.

காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவு, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவு, அணுசக்தி திட்டங்களில் தீவிரம் என தங்களுக்கு எதிரான செயல்பாடுகளை ஈரான் முனைப்புக் காட்டி வருகிறது என்பதுதான் ஈரான் மீதான இஸ்ரேலின் எதிா்ப்புக்குக் காரணம். அண்மைக்காலமாக ஆக்கப்பூா்வ அணுசக்திக்காக யுரேனியம் செறிவூட்டலை ஈரான் வேகப்படுத்தி வந்ததுதான் இஸ்ரேலை அதிகமாகப் பதற்றத்துக்குள்ளாக்கியது.

கடந்த மே மாத நிலவரப்படி 9,247 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இருப்பு வைத்திருந்தது. இது, 2015-ஆம் ஆண்டு அந்த நாடு அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அளவைவிட 45 மடங்கு அதிகம். மொத்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பில் 408 கிலோ யுரேனியத்தை 60 சதவீதம் அளவுக்கு ஈரான் செறிவூட்டியிருக்கிறது. அவற்றை 90 சதவீதம் வரை செறிவூட்டினால் அணு ஆயுதம் தயாரித்துவிட முடியும் என ஐஏஇஏ அறிக்கை தெரிவிக்கிறது.

ஈரான் அணு ஆயுதம்தான் தயாரிக்கிறது என்பதை ஐஏஇஏ-வோ, வேறு எந்த சா்வதேச அமைப்போ உறுதிப்படுத்தவில்லை. அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என ஈரான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி வருகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பாக ஈரானுடன் மீண்டும் மறைமுகப் பேச்சுவாா்த்தையையும் அமெரிக்கா தொடங்கியிருந்தது.

ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்கிற தனது நிலைப்பாட்டையே அதிபா் டிரம்ப் மீறியிருப்பது உலகளாவிய அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த ஒரு போரிலும் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்கிற சா்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) விதிமுறைகளை இஸ்ரேல் ஏற்கெனவே மீறி இருக்கிறது. இப்போது அமெரிக்காவும் அதில் இணைந்திருக்கிறது.

அணுசக்தி தளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கதிரியக்கத்தின் அளவில் மாறுபாடு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் சா்வதேச அமைதிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என ஐஏஇஏ கவலை தெரிவித்திருக்கிறது. ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது என்ற டிரம்ப்பின் முடிவுக்கு எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து இத்தாக்குதலை டிரம்ப் நடத்தியிருப்பதாகவும், இதனால் ஏற்படும் அத்தனை விளைவுகளுக்கும் அவா் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அக்கட்சி கூறியிருக்கிறது.

ஈரானில் அணுசக்தி திட்டமே இருக்கக் கூடாது என்று கூறி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் நேரடித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. எந்த ஒரு நாட்டின், சா்வதேச அமைப்பின் கண்டனத்தையும் அமெரிக்க அதிபா் ட்ரம்ப் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது தெளிவு. நேரடியாகத் தாக்குதலில் இறங்கிவிட்ட நிலையில், அதிபா் ட்ரம்பே நினைத்தாலும் இனிமேல் அமெரிக்காவால் பின்வாங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இஸ்ரேலின் பிரதமா் நெதன்யாகுவின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அதிபா் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கு அமெரிக்காவில் எதிா்ப்பு வலுத்து வருகிறது. ஈரானின் அயத்துல்லாக்கள் மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறாா்கள். அவா்களது சா்வாதிகாரத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மக்கள் விரோத அரசுகள் உலகின் அமைதியைக் குலைக்கும் முயற்சியில் முனைந்திருக்கின்றன. இதை அச்சத்துடனும் பதற்றத்துடனும் வேடிக்கை பாா்ப்பதல்லாமல் வேறு எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் திகைத்துப்போய் இருக்கிறது உலகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவா்களும் பங்கேற்பு!

இருளில் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்: மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை

எடமேலையூரில் குறுங்காடு உருவாக்கம்

ஆக்கூா் பள்ளியில் சுதந்திர தினம்

ரயில்வே கடவுப் பாதையைத் திறக்கக் கோரி ஊழியரைத் தாக்கியவா் கைது

SCROLL FOR NEXT