தென்மேற்குப் பருவமழை நிகழாண்டு இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்யும் என்றும், தமிழகத்தில் இயல்பானதாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அந்தமான் - நிகோபர் தீவுகளில் ஏற்கெனவே பருவமழை தொடங்கிவிட்டது.
கேரளத்தின் வடமாவட்டங்களில் ஏற்கெனவே பலத்த மழை பெய்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் தேதியன்று கேரளத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு முன்கூட்டியே, அதாவது வருகிற 24 அல்லது 25-ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கோடை முடிவதற்குள், கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோடைகாலத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட இது 90 சதவீதம் அதிகம் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருக்கிறது.
தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர்களும், பொதுப் பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை நெல் சாகுபடிக்காக வருகிற ஜூன் 12-ஆம் தேதி (வழக்கமான தேதியில்) மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளதால், காவிரி கிளை ஆறுகள், நீர்வரத்துக் கால்வாய்களை முழுமையாகத் தூர்வாரி கடைமடைப் பகுதிகளுக்கும் பாசன நீர் செல்வதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
ஆண்டுதோறும் பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக இதுபோல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளையும், அறிவுரைகளையும் முதல்வர் வழங்குவது வழக்கமான நடைமுறை. ஆனால், இந்த உத்தரவுகளையும், அறிவுரைகளையும் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது சுமார் 110 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால், காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்கிற நடைமுறை மேட்டூர் அணை உருவான 1924-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் பெரும்பாலான ஆண்டுகளில் ஜூனில் 90 அடிக்கு மேல் இருந்ததில்லை.
இதனால், அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது காலதாமதமாவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. கடந்த 2012-2019-ஆம் ஆண்டு வரை, அதாவது தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக, வழக்கமான ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. கடந்த ஆண்டும் ஜூலை மாதத்தில்தான் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் மழைப் பொழிவு தொடர்ந்து நீடித்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டிவிடும். நிகழாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், வழக்கமான தேதியான ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு வழக்கமான ஜூன் 12-க்குப் பதிலாக, முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தோன்றுகிறது.
இந்தச் சூழ்நிலையில், காவிரி கிளை ஆறுகள், நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுகிறது. தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில், அதிவிரைவாக மேற்கொண்டு முடித்தால் மட்டுமே, காவிரி கடைமடைப் பகுதிகளுக்கு பாசன நீர் சென்றடைவதை உறுதிசெய்ய முடியும். அதிகாரிகள் சுணக்கம் காட்டாமல், முதல்வர் அறிவுறுத்தியபடி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காவிரி கடைமடைப் பகுதிகளுக்கு பாசன நீர் சென்றடைவது கடந்த சில ஆண்டுகளாக சாத்தியமாகவில்லை என்ற விவசாயிகளின் வேதனையைப் போக்கும் விதத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
காவிரி கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீர் சென்றடையும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்திலேயே தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் மட்டுமே குறுவைப் பருவத்தில் 5.20 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடியை உறுதிசெய்ய முடியும்.
இதேபோல, நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்கள், இடுபொருள்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதையும், குறுவை நெல் சிறப்புத் தொகுப்பு மானிய உதவிகள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதிசெய்யவும் வேண்டும் என்கிற முதல்வரின் அறிவுறுத்தல் முன்யோசனையுடன்கூடிய வழிகாட்டுதல். இதையும் வேளாண் துறை நினைவில்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.