தூர்வாரியும் தீர்வில்லை! கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்!
டெல்டா மாவட்டங்களில் பாசன பிரச்னை முதன்மையான பிரச்னையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது...
டெல்டா மாவட்டங்களில் பாசன பிரச்னை முதன்மையான பிரச்னையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுதோறும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டாலும், கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்ற பிரச்னையும் தொடர்கிறது. இதனால், காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் சென்றாலும், கடைமடைக்கு தண்ணீர் இல்லை என்ற புகார்கள் எழுவது வழக்கமாக இருக்கிறது. ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படாததே இதற்கு காரணம்.
காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கடந்து மணல் அள்ளப்படுகிறது. இதனால், ஆறுகளில் மரம், செடிகள் வளர்ந்து நீரோட்டம் தடைப்படுகிறது. குறிப்பாக, வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்டவற்றில் மரம், செடிகள் வளர்வதால் ஆறுகளே இரண்டாகப் பிரிந்து செல்கின்றன.
உபரிநீர் கிடைத்தாலும் பயனில்லை:
தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் ஆறுகள் பள்ளமாகி, வாய்க்கால்களின் முகப்பு மேடாகிவிட்டன. இதனால், எவ்வளவு தண்ணீர் வந்தாலும் ஆறுகளிலிருந்து, வாய்க்கால்களுக்கு பாய்வது தடைப்படுகிறது.
எனவே, காவிரியில் உபரிநீர் கிடைத்தாலும் கூட கடை டைப் பகுதி பாசனத்துக்கு சீராக செல்வதில்லை. கடைமடைக்கு மட்டுமல்லாமல், இடைப்பட்ட பகுதிகளிலேயே தண்ணீர் கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் போராடுவதும் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.
மேலும், வாய்க்கால்களிலும் தலைப்பு முதல் கடைமடைப் பகுதி வரை முழுமையாகத் தூர்வாரப்படாமல் ஆங்காங்கே மட்டும் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மழைகாலத் திலும் இயல்பான அளவுக்கு பெய்தாலும் கூட வடிந்து செல்வதற்கு வழியில்லாமல் வயல்களில் பயிரிடப்படும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கு கின்றன. இதன் காரணமாக, விவசாயிகளும் பாதிக்கப்பட்டு, பேரிழப்புக்கு ஆளாகின்றனர்.
வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரும் பணி:
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தெரிவித்தது:
டெல்டா மாவட்டங்களில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல்முதலாக தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை. ஒரு இடத்தில் தூர் வாரினால் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வேண்டும்.
இதேபோல, மழைகாலத்திலும் வயல்களில் தேங்காமல் தண்ணீர் வடிந்து செல்ல வேண்டும். ஆனால், தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்போது, மண் அள்ளி கரையிலேயே கொட்டப்படுகிறது.
இதனால், மழைக்காலத்தில் மண் கரைந்து மீண்டும் வாய்க்காலிலேயே விழுவதால். ஓரிரு ஆண்டுகளில் தூர்ந்துவிடுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால் வாய்க்காலின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை எந்த ஆட்சியிலும் எடுக்கப்படுவதில்லை.
இதேபோல, பாசன வாய்க்கால்களின் முகப்பு 10 முதல் 15 மீட்டர் வரை அகலம் இருக்கிறது. ஆனால், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக 3 மீட்டர் அகலத்துக்குத்தான் தூர்வாரப்படுகிறது. இதனால், தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டாலும், வயல்களில் பயிர்கள் மூழ்குவது தொடர்கிறது. கடைமடைக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சி.டி பிரிவு வாய்க்கால்களை மட்டு மல்லாமல் ஆறுகள், ஏ. பி பிரிவு வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணியை ஒப்பந்தப் பணிக்கு விடாமல், வேளாண் பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் விமல்நாதன்.