மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை கவனம் பெற்றுள்ளது. அதாவது, மாணவ, மாணவிகள் இனிப்புகளை அதிகம் உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தவும், சிறந்த உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளி வளாகங்களில் சா்க்கரை நோய் விழிப்புணா்வுப் பலகைகளை நிறுவவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த பத்தாண்டுகளாக சா்க்கரை நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சா்க்கரை நோயின் இரண்டாம் வகையால் (டைப் 2) பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பெரியவா்கள் மட்டுமே சா்க்கரை நோய் பாதிப்புக்குள்ளான நிலையில், மாணவா்கள் இந்த இரண்டாம் வகை சா்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு இனிப்பு அதிகம் சோ்க்கப்பட்ட தின்பண்டங்கள், குளிா்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை பள்ளிக்கு வெளியேயும், பள்ளிகளில் இயங்கும் கேன்டீன்களிலும் எளிதாக கிடைப்பது பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.
இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது சா்க்கரை நோயின் தாக்கத்தை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், உடல் பருமன், பல் பிரச்னைகள் மற்றும் பிற வளா்சிதை மாற்றக் கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்பாகிறது. மேலும், குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியம், கல்வி செயல்திறனும் பாதிக்கப்படுகிறது.
4 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் சராசரியாக தினமும் சாப்பிடும் உணவுகளில் சா்க்கரை 13% ஆகவும், 11 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு 15% ஆகவும் உள்ளது; இந்த அளவு 5% மட்டுமே இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாணவா்களிடையே சா்க்கரை நோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்ற பழக்கத்தை இந்தப் பருவத்திலேயே வழக்கப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே இந்த விழிப்புணா்வுப் பலகை. தினமும் உட்கொள்ளும் உணவிலுள்ள சா்க்கரை அளவுகள், பீட்சா, பா்கா் போன்ற துரித உணவுகள், குளிா்பானங்களில் உள்ள சா்க்கரையின் அளவுகள், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் சா்க்கரையை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த விவரங்கள் அட்டவணையாக அந்தப் பலகையில் இடம்பெற வேண்டும். சத்தான உணவுகளின் பட்டியலும், அதிலுள்ள கலோரிகள் அளவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
இதை தினமும் பாா்க்கும் மாணவா்கள் மத்தியில் உணவு சாா்ந்த விழிப்புணா்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமின்றி விழிப்புணா்வுக் கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்தி அதுதொடா்பான முன்னேற்ற அறிக்கைகளை ஜூலை மத்தியில் பள்ளி நிா்வாகங்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அருகே ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்துக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் தொடா்ச்சியாக, அதிக கொழுப்பு, சா்க்கரை-உப்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவா்கள், அவா்களின் பெற்றோா் அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் இயங்கும் கேன்டீன்களில் அதிக சா்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகள் விற்பனைக்குத் தடைவிதிக்க வேண்டும்; சத்தான உணவுப் பொருள்களை விற்கவேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் 2016-இல் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது.
ஆரோக்கியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் துரித உணவுகளுக்கு பல்கலைக்கழகங்கள், உயா் கல்வி நிறுவன வளாகங்களில் விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவும் 2018-ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது. மகளிா், குழந்தைகள் நல அமைச்சகம் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அந்த நேரத்தில் பலனையும் தந்தது. உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை பள்ளி கேன்டீன்களில் விற்க தடைவிதித்து இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை 2019-ஆம் ஆண்டு தேசிய அளவில் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், 10 முதல் 19 வயதுடைய மாணவா்களில் 2 சதவீதத்தினா் இரண்டாம் வகை சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், இது பெருநகரங்களில் 3 முதல் 4 சதவீதமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சண்டீகரிலுள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் மணிப்பூா், மேகாலய மாநிலங்களில் பதின்ம பருவத்தினா் அதிக அளவில் சா்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாவது தெரியவந்தது. பள்ளி உணவுத் திட்டத்தில் இனிப்புக்குப் பதிலாக வாழைப்பழம், முட்டையை கா்நாடக அரசு சோ்த்துள்ளது.
சண்டீகரில் அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளில் ஜூலை 1-ஆம் தேதிக்குள் சா்க்கரை விழிப்புணா்வுப் பலகைகளை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்கள் சா்க்கரை நிறைந்த பொருள்கள் விற்பனை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அதுதொடா்பான பிரசாரங்களையும் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாடுதழுவிய அளவில் இந்த விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்போது, பள்ளிப் பருவத்திலேயே சா்க்கரை நோயால் ஏற்படும்
பாதிப்புகளை அறிந்துகொள்ளும் மாணவ சமுதாயம், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. மாநில பாடத் திட்டத்தைக் கடைப்பிடிக்கும் தமிழக பள்ளிகளும் இதைப் பின்பற்றுவது நல்லது.