ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், 104-ஆவது பிரதமராகவும் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் ஆதரவாளரான 64 வயது சனே தகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பதவிக்கு வந்திருக்கும் நான்காவது பிரதமர் சனே தகாய்ச்சி. ஷின்சோ அபேயின் திடீர் பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமரான யோஷி ஹிடே சுகா, ஃபுமியோ கிஷிடா, ஷிகெரு இஷிபா மூவரும் ஓராண்டு காலம்தான் பதவியில் தாக்குப் பிடிக்க முடிந்திருக்கிறது.
ஜப்பானில் பெண்மணி ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது யாருமே சற்றும் எதிர்பாராத திருப்பம். ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்பதால், அவரது தலைமை எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருப்பதில் வியப்பில்லை.
1955-இல் கட்சி தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் மேலவைத் தேர்தலுக்குப் பிறகுதான் முதல்முறையாக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி)கூட்டணி இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் தகாய்ச்சி பிரதமராகப் பதவியேற்று இருக்கிறார்.
கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது போல கூட்டணியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் அவரால் கொண்டு வர முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தகாய்ச்சியின் ஷின்சோ அபே பாணி அரசியலை ஏற்காத, பெüத்த மத சார்புள்ள 'கௌ மேட்டோ' கட்சி, எல்டிபி கூட்டணியுடனான தனது 26 ஆண்டு தொடர்பை முறித்துக் கொண்டிருக்கிறது.
கௌ மோட்டோ தனது ஆதரவை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து, சற்றும் தாமதியாமல் இஷின் என அழைக்கப்படும் ஜப்பான் இன்னோவேஷன் கட்சியுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் தகாய்ச்சி. அமைச்சரவையில் உடனடியாக இணையாமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்க அந்தக் கட்சிக்கு பிரதமர் தகாய்ச்சி தந்திருக்கும் விலை என்ன தெரியுமா? ஜப்பானின் இரண்டாவது தலைநகரமாக ஒசாகாவாவை அங்கீகரிப்பது!
அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் நரேந்திர மோடிபோல தனது நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் தேசியவாதக் கொள்கையை முன்னெடுப்பவர் பிரதமர் தகாய்ச்சி.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே போலவே இவரும் ஜப்பான் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற கருத்திலும், இரண்டாம் உலகப் போரின் விளைவுகளுக்காக ஜப்பான் வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை என்பதிலும் உறுதியாக இருப்பவர்.
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த ஜப்பானிய ராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் யசுகுனி ஆலயத்துக்கு ஷின்சோ அபே சென்று வந்தது, ஜப்பான் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட சீனாவையும் கொரியாவையும் எரிச்சலூட்டியது. இப்போது அபேயின் சீடரான தகாய்ச்சியும் அந்த ஆலயத்துக்குச் செல்பவர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னால், ஜெர்மனியைப் பிளவுபடுத்தி வலிமை இழக்கச் செய்தது போலவே, ஜப்பானையும் அமெரிக்கா தலைமையிலான நேச கூட்டணி அடக்கிவைக்க முற்பட்டது. ஜப்பானியர்கள் மத்தியிலேயே ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு போர் குறித்த அச்சம் மேலெழுந்தது. ஜப்பானின் அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜப்பான் தனது ராணுவத்தைப் பலப்படுத்துவது தடுக்கப்பட்டது.
ஜப்பானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்ததுடன் நிரந்தரமாக ஜப்பானில் ராணுவத் தளம் அமைத்துக் கொண்டது. டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அதிபரானபோது, அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டார். பிரதமராக இருந்த ஷின்சோ அபே அந்நிய நாட்டின் ராணுவத்துக்காக செலவழிப்பதற்குப் பதில் ஜப்பான் தனது ராணுவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்.
அமெரிக்காவின் ஆதரவும் பாதுகாப்பும் அதிபர் டிரம்ப்பின் ஆட்சியில் நம்பகத்தன்மை இல்லாததாக ஆகிவிட்ட நிலையிலும், தெற்கு பசிபிக் கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதும் ஜப்பானை தனது தற்பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளத் தூண்டுகிறது. ஆனால், பிரதமர் தகாய்ச்சி ஜப்பானின் தற்போதைய பொருளாதார சூழலில் ராணுவத்தைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்குவாரா என்பது சந்தேகம்தான்.
ஜப்பான் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறது. வேலை செய்யும் வயதினர் குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இளம் ஜப்பானியர்களைத் திருப்பி அழைத்துக் கொள்வதன் மூலம்தான் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானின் ஜிடிபி அதிகரிக்கவே இல்லை. தனிமனித வருமானமும் உயரவில்லை. ஒருபுறம் வயதான குடிமக்கள் என்றால், இன்னொரு புறம் பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களை நம்பித்தான் பொருளாதாரம் இருக்கிறது. குடியேற்றத்தை முற்றிலுமாக தடுப்பது என்கிற அதிபர் டிரம்ப்பின் பாணி முயற்சியிலும் ஜப்பானின் புதிய பிரதமர் தகாய்ச்சி இறங்கக்கூடும்.
ஆனால், வேடிக்கை என்னவென்றால், இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும் ஜப்பானின் கட்டமைப்பு வசதிகளும், சுகாதாரப் பாதுகாப்பும், கப்பல் துறையும், வீட்டு வசதி துறையும் நம்பகத்தன்மையுடன் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் தொடர்கிறது. ஜப்பானில் குற்றவிகிதம் மிக மிகக் குறைவு. இவையெல்லாம் பிரதமர் தகாய்ச்சிக்கு சாதகமான அம்சங்கள்.
கோல்டா மேயர், மார்கரெட் தாட்சர், இந்திரா காந்தி வரிசையில் தகாய்ச்சி சாதனை படைக்கப் போகிறாரா, இல்லை, சந்திரிகா பண்டாரநாயக, பேநசீர் புட்டோ, லிஸ் ட்ரஸ் வரிசையில் வரலாற்றைக் கடந்து போவாரா என்று உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.