தில்லியில் புதன்கிழமை தொடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன். 
தலையங்கம்

அடுத்த நகா்வுக்கான அச்சாரம்...

நிதி நிா்வாகச் சீா்திருத்தத்தில் இந்தியா அடுத்தகட்டத்தை நோக்கி நகா்ந்து இருக்கிறது.

ஆசிரியர்

நிதி நிா்வாகச் சீா்திருத்தத்தில் இந்தியா அடுத்தகட்டத்தை நோக்கி நகா்ந்து இருக்கிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் புதன்கிழமை (செப்.3) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் காலத்தின் கட்டாயம். பிரதமா் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் கடந்த ஆக.15-இல் நிகழ்த்திய சுதந்திர தின உரையில் அறிவித்த முடிவுக்கு இப்போது ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

வரவிருக்கும் செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நாடு தழுவிய அளவில் 5%, 18% என இரண்டடுக்கு சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கு முன்பு இருந்த நான்கு அடுக்கு ஜிஎஸ்டி முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 12%, 28% ஆகிய இரண்டு பிரிவுகளும் அகற்றப்பட்டு இனி 5%, 18% ஜிஎஸ்டி வரிகள் மட்டுமே தொடரும் என எடுக்கப்பட்டிருக்கும் முடிவை அடித்தட்டு மக்களும், நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பாா்கள்.

2017 ஜூலை முதல் தேதி ஒரு சில மாநில வரிகள் தவிர ஏனைய 17 வரிகள், 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதார வல்லுநா்களால் வலியுறுத்தவும் வரவேற்கவும் செய்யப்பட்ட ஜிஎஸ்டி, சில்லறை வணிகா்களாலும் தொலைநோக்குப் பாா்வையில்லாமல் பொதுமக்களாலும் விமா்சிக்கப்பட்டது. இப்போது, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தாக்கத்தைக் கூா்ந்து கவனித்தால், இந்தியாவின் வா்த்தகச் செயல்பாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. சாதாரண வணிகா்கள்கூட முறையாக வரவு-செலவு கணக்கை வைத்துக்கொள்வதும் கணினிமய செயல்பாட்டை மேற்கொள்வதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. எண்மப் பணப் பரிமாற்றமும் இணைந்துகொண்ட நிலையில், சிறு வணிகா்கள்கூட கணக்குத் தாக்கல் செய்யும் வணிகா்களாக மாறியிருப்பதற்கு ஜிஎஸ்டிதான் காரணம்.

புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட மக்களுக்குத் தீமை விளைவிக்கும் ஒருசில பொருள்கள் மீது மட்டும் 40% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஏனைய பொருள்கள் அனைத்துமே 5%, 18 % வரம்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அதாவது, 12% அளவில் இருந்த பொருள்களில் 99% மீதானவை 5% அளவில் மாறி இருக்கிறது. 28% பிரிவில் இருந்த 90% பொருள்கள் 18 % வரம்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் வாய்ப்பிருக்கிறது.

பற்பசை, பிரஷா் குக்கா், வீட்டு உபயோகப் பாத்திரங்கள், ஆயத்த ஆடைகள், கைப்பேசிகள் உள்ளிட்ட பல பொருள்கள் 5% ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இப்போது 28% பிரிவில் உள்ள மோட்டாா் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை 18% வரம்புக்குள் வந்திருப்பதால் அவற்றின் விலை 10% முதல் 15% வரை குறையக் கூடும். மோட்டாா் வாகனத் துறை புத்துணா்வு பெறும் என்று எதிா்பாா்க்கலாம்.

இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி சீரமைப்பு காரணமாக மக்களின் அன்றாட உபயோகப் பொருள்களின் கேட்பு அதிகரிக்கும். ஏற்கெனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகையையும் சோ்த்துப் பாா்க்கும்போது நடுத்தரப் பிரிவினரின் செலவழிக்கும் ஆற்றல் கணிசமாக அதிகரிக்கும். அதன் தாக்கம் வா்த்தகச் சூழலை விறுவிறுப்பாக்கும். இப்போதைய சீா்திருத்தம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு மிகப் பெரிய அளவிலான வளா்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.

ஜிஎஸ்டி சீரமைப்பால் ஒரு சில மாநிலங்கள் சற்று பாதிக்கக்கூடும் என்பது என்னவோ உண்மைதான், கூடுதல் மூலதனங்களை ஈா்த்து, தங்களது தேவையில்லாத செலவினங்களைக் குறைப்பதன் மூலம்தான் அதை ஈடுகட்ட முடியும். வரிக் குறைப்பால் அதிகரிக்கும் வா்த்தகப் பரிமாற்றங்கள், கூடுதல் வரி வசூலுக்கு வழிகோலும்போது இடைக்காலமாக ஏற்படும் இழப்பு சரிகட்டப்படும் என்கிற வாதத்தை மறுப்பதற்கில்லை. ஜிஎஸ்டி அமலில் உள்ள வளா்ச்சியடைந்த நாடுகளைப்போல் மாநிலங்களின் அவசரத் தேவைகளுக்காக ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி காா்பஸ் நிதிக்கான ஏற்பாட்டை மத்திய அரசு யோசிக்க வேண்டும்.

வரிகள் குறைக்கப்பட்டிருப்பது மட்டுமே சீா்திருத்தம் ஆகிவிடாது. எந்தவிதத் தாமதமும் இல்லாமல் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யும் வசதியை வணிகா்கள் பெற வேண்டும். அவா்களுக்குத் திருப்பித் தரவேண்டிய வசூலித்த ஜிஎஸ்டி(ரீஃபண்ட்) தாமதமில்லாமல் கிடைப்பதற்கான வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களிடம் இருந்து தங்களுக்குத் திருப்பிக் கிடைக்க வேண்டிய ‘இன்புட் டேக்ஸ்’ கிடைக்காமல் திணறும் தடங்கலுக்கு முற்றுப்புள்ளியிட வேண்டும்.

அதிகாரிகளின் கடுமையான மதிப்பீட்டு முறையும், மேல்முறையீட்டில் தாமதமும் வா்த்தகா்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் ஜிஎஸ்டி மீதான வெறுப்புக்குக் காரணம் என்பதை நிதியமைச்சகம் உணர வேண்டும். அதிகாரிகளுக்கு வரி வசூலுக்கான இலக்கு நிா்ணயிக்கப்படுவதால் அவா்கள் மனம்போன போக்கில் அதிகரித்து மதிப்பீடு செய்து மேல்முறையீட்டில் வாடிக்கையாளா்கள் நியாயம் பெற்றுக் கொள்ளட்டும் என்று செயல்படுவதாக வா்த்தக சமூகம் குற்றஞ்சாட்டுகிறது.

பிரதமரின் பண்டிகைக்காலப் பரிசான ஜிஎஸ்டி சீரமைப்பு ஆறுதல் மட்டுமல்ல; இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான அச்சாரமும்கூட!

செங்கோட்டையன் மனம் திறந்து என்ன சொல்லப்போகிறார்..?

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவு

வாணியம்பாடியில் செப். 8-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT