இன்னும் எத்தனை முறை?
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த யுகத்திலும் கூட்ட நெரிசல் மரணங்கள் நிகழ்வது என்பது நமது கையாலாகத் தனத்தைத்தான் காட்டுகிறது!
பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஷீத்தளா மாதா கோயிலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். வழக்கம்போல இரங்கல் தெரிவிப்பதும், இழப்பீடு அறிவிப்பதும் நடந்திருக்கிறது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. தீப் நகர் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்றால், கோயிலின் நான்கு பூசாரிகள் உள்பட 40 பேர் மீது முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
மிகப் பெரிய, கட்டுக்கடங்காத கூட்டம் ஒன்றும் ஷீத்தளா மாதா கோயிலில் கூடிவிடவில்லை. சுமார் 8,000 பக்தர்கள்தான் கூடியிருந்ததாகத் தெரிகிறது. அப்படி இருந்தும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, உயிரிழப்பு நேர்ந்திருக்கிறது என்றால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதுதான் காரணமாக இருக்க முடியும்.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இதற்கான வழிமுறைக் கையேடு ஒன்றைப் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டிருக்கிறது. கூட்டத்தை எப்படி ஒழுங்குபடுத்துவது, நெரிசல் ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு முன்னேற்பாடுகளைச் செய்வது, வெளியேறும் பாதைகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்த வழிகாட்டுக் கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அது இந்தியாவில் உள்ள எல்லா காவல் நிலையங்களிலும் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு; இருக்கிறதா என்று தெரியவில்லை.
Advertisement
சில ஆயிரம் நபர்கள் மட்டுமே நுழையக்கூடிய அல்லது கூடக்கூடிய இடங்களில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு நுழையும்போது, நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்படுவதும், ஒருவர் மீது ஒருவர் விழுந்து விபத்து நேர்வதும் தவிர்க்க முடியாதது.
1950 கும்பமேளாவில் தொடங்கி 1990 சபரிமலை வரை, கடந்த ஆண்டின் ஸ்ரீகாகுளம் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் தொடங்கி இப்போதைய நாளந்தா ஷீத்தளா மாதா கோயில் நிகழ்வு வரை ஒரேபோல கட்டுப்பாடற்ற பக்தர்கள் கூட்டமும்,
ஒழுங்குபடுத்தப்படாத வழிமுறையும், கவனக்குறைவான கண்காணிப்பும்தான் நெரிசல் மரணங்களுக்குக் காரணமாகி இருக்கின்றன. எந்தவொரு நிகழ்வில் இருந்தும் நாம் பாடம் படிக்க மறக்கிறோம் என்பதுதான் வேதனை.
சொல்லப் போனால், ஏனைய நாடுகள் அனைத்தையும்விட இந்த பாரத பூமியில் கூட்ட மனநிலையை நாம் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தோம். கோயில்களின் கட்டடங்கள் குறித்த வாஸ்து சாஸ்திரமும், தச்சு சாஸ்திரமும் கூட்டத்தை எதிர்கொள்வது குறித்த தொலைநோக்குச் சிந்தனையை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. ஒவ்வொரு பாதை, பிரகாரம், கர்ப்பக்கிரகத்துக்கு முற்பட்ட மண்டபங்கள், சுவாமியின் கர்ப்பக்கிரகம் வரை
யில் பக்தர்கள் சிரமமில்லாமல் வரிசையில் நகர்ந்து, கடவுளை தரிசித்துவிட்டு செல்வதற்கான கட்டமைப்புடன்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி இருந்தும்கூட நெரிசல் மரணங்கள் ஏற்படுகின்றன என்றால் அதற்கென்ன காரணம்?
பல நூற்றாண்டுகளாகத் தொன்றுதொட்டு இந்திய நாகரிகம் தர்மம், நல்லொழுக்கம், தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையேயான புரிதலுடன் இயங்கிய பெருமைக்குரியது. கோயிலில் நுழைவது, ஆராதிப்பது, வெளியேறுவது என்பது ஒழுங்குமுறையில் இயங்கி வந்தது. இப்படி ஒருவரை ஒருவர் முண்டியடித்து முன்னேறும் போக்கு ஹிந்து தர்மத்திலேயே இல்லாதது என்பதுதான் வேடிக்கை. கூட்ட நெரிசல் என்பது நமது வாழ்க்கை முறைமையின் வீழ்ச்சியைத்தான் காட்டுகிறது.
கட்டுப்பாடும், ஒழுக்கமும், நல்ல நோக்கமும் இல்லாத ஆசை பேரழிவுக்கு வழிகோலும் என்று உபதேசிக்கிறது பகவத்கீதை. அதைத்தான் திருக்குறளும் வேறு விதமாக வலியுறுத்தி, ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் தனிமனிதனின் அடிப்படை செயல்பாடாக்குகிறது. அந்த ஆன்மிக வழிகாட்டுதலில் இருந்து
விலகி தனிமனிதனின் உணர்வுக்கு முன்னுரிமை வழங்குவதன் விளைவுதான், கூட்ட நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இதுவரை நான்காயிரத்துக்கும் அதிகமான கூட்ட நெரிசல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.அவற்றில் 79% உயிரிழப்புகள் கோயில் நிகழ்வுகளில் அரங்கேறியவை, அவற்றில் மாதா கோயில் கூட்ட நெரிசல்களும் அடங்கும்.
2014-இல் மூன்று சம்பவங்களில் 62 உயிரிழப்புகள் சீனாவில் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து எடுத்த கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக இப்போது கூட்ட நெரிசல் என்பது அங்கே அநேகமாக இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நாம் இன்னும் அடிப்படை முன்னேற்பாடுகளில்கூட கவனம் செலுத்தாமல் இருக்கிறோம்.
சீக்கியர்களின் அமிருதசரஸ் பொற்கோயிலுக்கு தினந்தோறும் ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். அனைவருக்கும் உணவு உள்பட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. கனகச்சிதமாக அவர்களால் கூட்டத்தைக் கட்டுப்பாட்டுடன் கையாள முடிகிறது; அதிலிருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த யுகத்திலும் கூட்ட நெரிசல் மரணங்கள் நிகழ்வது என்பது நமது கையாலாகத் தனத்தைத்தான் காட்டுகிறது!