முகப்பு
தலையங்கம்

இதே நிலைமை தொடர்ந்தால்...

சர்வதேச பிரன்ட்' கச்சா எண்ணெய் அடிப்படை விலை, மார்ச் மாத மேற்காசியப் போரைத் தொடர்ந்து 51% அதிகரித்திருக்கிறது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:44 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

மேற்காசியாவில் ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத அளவிலான போர்ச்சூழல் ஒட்டுமொத்த உலகத்தையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. கச்சா எண்ணெய், எரிவாயுத் தட்டுப்பாடு உலக நாடுகளைச் செயலிழக்கச் செய்திருக்கிறது.

இதுகுறித்தெல்லாம் கவலைப்படாத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவேன் என்று கெடு விதிப்பதும், ஈரானும் அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் நிலைமை கைமீறுகிறது என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏனைய உலக நாடுகளின் நிலைமையைப் பார்க்கும்போது, நமது இயல்பு வாழ்க்கை இன்னும் முற்றிலுமாகப் பாதிக்கப்படாமல் ஓரளவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயுத் தட்டுப்பாடு சவாலை இந்தியா சமாளிக்கிறது என்று ஆறுதல் அடையலாம்.

உலகின் உர ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் சென்றாக வேண்டும். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் உரம் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், விவசாயிகள் கோதுமை சாகுபடிப் பரப்பை குறைத்திருக்கிறார்கள். போனால் போகட்டும் என்று, வெனிசுலாவின் மீதான உர ஏற்றுமதித் தடையை அமெரிக்கா இடைக்காலமாக நிறுத்தியிருப்பது ஆறுதல்.

Advertisement

தென் கொரியாவின் எரிபொருள் தேவை மேற்காசியாவைச் சார்ந்திருக்கிறது. மின்சார உற்பத்தியும்கூட எரிவாயு அடிப்படையிலானது. அதனால் குளிக்கும்போது குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தும்படி அந்நாட்டு அரசு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

தாய்லாந்தின் பிரதமர் உள்பட பலரும் வழக்கமான கோட்-சூட்களைக் கைவிட்டு டி-சர்ட்டுகளும், அரை நிஜார்களும் அணியத் தொடங்கி இருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் உள்ள குளிர்சாதன வசதிகள், எரிபொருள் சிக்கனத்துக்காக பாதிக்குப் பாதி முடக்கப்பட்டிருக்கின்றன.

பிலிப்பின்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் மின்சார சிக்கனத்துக்காக மின் தூக்கிகளை (லிப்ட்) பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது. எகிப்தில் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் வாரத்தில் ஐந்து நாள்கள்தான் செயல்படுகின்றன.

இலங்கையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் செலவைக் குறைப்பதற்காக புதன்கிழமைகளும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. லாவோஸ் நாட்டில் பள்ளிக்கூடங்கள் வாரத்தில் மூன்று நாள்கள்தான் இயங்குகின்றன.

வங்கதேசம், ஆயத்த ஆடை ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் பொருளாதாரம். விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட வங்கதேச விமான நிலையங்களில் ஏற்றுமதிக்கான துணிகள் குவிந்து கிடக்கின்றன. பெட்ரோ கெமிக்கல் சார்ந்த டிராக் சூட் உள்ளிட்ட ஆடைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வால் உற்பத்தி பாதிக்கப்பட்டு கடும் விலையேற்றத்தை எதிர்கொள்கின்றன.

உலகளாவிய அளவில் சர்க்கரை விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும். உலகின் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடான பிரேஸில் எரிவாயு விலை உயர்வை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது. தனது சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து உயிரி எரிபொருள் உற்பத்திக்கு மாறத் தொடங்கி இருக்கிறது. சர்க்கரை ஆலைகள் உயிரி எரிபொருள் உற்பத்திக்கு மாறுவதற்கு பிரேஸில் அரசு பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்காவும் பாதிக்கப்படாமல் இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வால் விலைவாசி உயரும் என்கிற அச்சம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தனியார் கடன்களின் வட்டி விகிதம் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் வீடுகள் வாங்குவது எளிது என்கிற நிலைமை மாறி, இப்போது கடுமையான விலை உயர்வை எதிர்கொள்கிறது.

மருந்து உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது மேற்காசிய போரால் உருவாகி இருக்கும் மற்றுமொரு மிகப் பெரிய அவலம். சரக்குகள் கையாளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை, கத்தாரின் தோஹா ஆகியவை முடக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆங்காங்கே பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மருந்துகள் தேக்கம் அடைந்திருக்கின்றன. குளிர்பதன வசதியில் பாதுகாக்கப்பட வேண்டிய மருந்துகள்சரக்குக் கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கின்றன. புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான அடிப்படைத் தேவை மருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நாடுகளைப் போய்ச் சேர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை என்னவென்று சொல்ல!

"சர்வதேச பிரன்ட்' கச்சா எண்ணெய் அடிப்படை விலை, மார்ச் மாத மேற்காசியப் போரைத் தொடர்ந்து 51% அதிகரித்திருக்கிறது. 1990 செப்டம்பர் மாதம், இராக் அதிபர் சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து நடந்த முதலாவது வளைகுடா போருக்குப் பிறகு இந்த அளவு கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது இப்போதுதான். அப்போதுகூட 46% தான் அதிகரித்தது என்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது. இதிலிருந்து பிரச்னையின் கடுமை என்ன என்பதை நாம் உணரலாம்.

கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு டாலர் அதிகரிக்கும்போதும் அதன் நீட்சியாக இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நாணயத்தின் மீதான தாக்கம், யூரியா விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு என்று பலமுனை பாதிப்புக்கு நமது பொருளாதாரம் உள்ளாகும் என்பதை மறந்துவிடக் கூடாது. உலகில் வேறு எந்தப் பெரிய பொருளாதாரமும் இந்தியா அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்படுவதில்லை.

அடுத்த 50 நாள்களுக்கு போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பு நம்மிடம் இருக்கிறது என்பது நமது பலம். நமது நட்பு நாடான ஈரான் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதிக்கிறது என்பது மிகப் பெரிய ஆறுதல். ஆனால், இதே நிலைமை தொடர்ந்தால்...விடை தெரியவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments