அரிசி (கோப்புப்படம்) 
தலையங்கம்

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிக அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது.

ஆசிரியர்

சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிக அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் ஐயப்பாடில்லை. அரிசியும் கோதுமையும் இந்திய விவசாயிகளின் முக்கிய வேளாண் உற்பத்திகளாக தொடர்ந்து உற்பத்தி சாதனைக்கு வழிகோலியிருப்பது அரசின் உறுதியான ஆதரவால்தான் என்பதை மறுத்துவிட முடியாது.

வேளாண் பெருமக்கள் நெல், கோதுமை சாகுபடியை மட்டுமே நம்பியிருக்காமல் மாற்றுப் பயிர்களுக்கு முன்னுரிமை தந்து மாற வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாக நிறைவேறாமல் தொடர்கிறது. இதற்கு விவசாயிகள் மட்டுமல்லாமல் அரசின் கொள்கை முடிவும் முக்கியக் காரணம்.

குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டுமல்லாமல், உறுதிப்படுத்தப்பட்ட கொள்முதலும் நெல், கோதுமை சாகுபடியை அதிக லாபமுள்ள பயிர்களாக நிலைநிறுத்தி இருக்கின்றன. அரசின் ஆதரவு, பாசன வசதி, தானியக் கிடங்குகள், இடுபொருள் கடன் வசதி உள்ளிட்ட அனைத்துமே நெல், கோதுமை சாகுபடிக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியம், சோளம் உள்ளிட்ட மாற்றுப் பயிர்களுக்கு விலை உத்தரவாதம், சந்தை ஆதரவு, சாகுபடிக்குப் பிறகான கட்டமைப்பு வசதிகள் போன்றவை வழங்கப்படாததால், அதிகமான சலுகைகள் அளிக்கப்பட்டு லாபத்துக்கு உத்தரவாதம் உள்ள நெல்,கோதுமை சாகுபடியை வேளாண் பெருமக்கள் நாடுவதை ஊக்குவிக்கின்றன.

நெல் (அரிசி), கோதுமை சாகுபடி உணவுப் பாதுகாப்புக்கு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அளவுக்கு அதிகமான உற்பத்தி மூலம் உலகச் சந்தைக்கு இந்த தானியங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு என்கிற பெருமை இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது ஒருவகையில் தேசத்தின் சர்வதேச மதிப்பை அதிகரித்திருப்பதும் உண்மை. அதேநேரத்தில் நெல், கோதுமைப் பயிர்களால் கிடைக்கும் ஆதாயத்துடன் வெளியில் தெரியாத பல இழப்புகளையும் நாம் சந்திக்கிறோம் என்பதை உணரத் தவறுகிறோம்.

குறிப்பாக, நெல் சாகுபடி அதிகமான அளவில் பாசன நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நெல், கோதுமை தானியப் பயிர்கள் வெளியேற்றும் கரியமில வாயு புவி வெப்பமயமாவதற்கு காரணியாகிறது. மண் வளம் குறைவது, அதிகரித்த இடுபொருள் செலவு போன்றவற்றையும் நெல் சாகுபடி அதிகரிப்பதன்மூலம் நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரிசி உற்பத்தியில் அடைந்திருக்கும் சாதனையும், அதிகரித்த கோதுமை சாகுபடிப் பரப்பும் மேலோட்டமாக மகிழ்ச்சி அளித்தாலும், அதை நாம் எச்சரிக்கையாகவும் பார்க்க வேண்டும். வேளாண்மை என்பது அதிகரித்த உற்பத்தியும், ஏற்றுமதியும் என்பதுடன் நின்றுவிடக் கூடாது. விவசாயிகளை ஒன்றிரண்டு சாகுபடிப் பயிர்களுடன் முடக்கிவிடும் வேளாண் கொள்கை ஆக்கபூர்வமானதல்ல. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், சோளம் உள்ளிட்ட இன்ன பிற பயிர்களின் சாகுபடியை அதிகரிக்கும் விதத்தில் அரசின் திட்டங்கள் இருந்தால்தான் தொலைநோக்குப் பார்வையுடையதாக இருக்கும்.

அரிசி, கோதுமை தானியப் பயிர்களின் உத்தரவாதமுள்ள மகசூல், கொள்முதல் ஆகியவற்றால் அதில் ஈடுபடும் வேளாண் மக்களை ஏனைய மாற்றுப் பயிர்களின் சாகுபடிக்கு ஈர்ப்பது எளிதானதல்ல. உத்தரவாதமுள்ள கொள்முதல், நம்பகத்தன்மையுள்ள சந்தை, உற்பத்தியைப் பாதுகாப்பதற்கான கிடங்குகள் போன்றவை வழங்கப்படாமல், அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

மாற்றுப் பயிர்களுக்கு அவர்கள் மாறாமல் இருந்தால், அதன் விளைவுகளை தேசம் மட்டுமல்ல அந்த விவசாயிகளும் சந்திக்கக்கூடும்.

இந்திய மக்கள்தொகையில் 42% மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்; 46% தொழிலாளர்களுக்கு விவசாயம் வாய்ப்பளிக்கிறது. ஆனால், இந்திய ஜிடிபியில் வேளாண் துறையின் பங்களிப்பு வெறும் 5% மட்டுமே. நபார்டு அறிக்கையின்படி, வேளாண் குடும்பங்களின் மாத வருவாய் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.13,663.

அதில் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம் என்று பார்த்தால், வெறும் ரூ.4,476 மட்டுமே. மற்றவை பிற வேலைகளிலிருந்தும் தொழில்களிலிருந்தும் கிடைப்பவை.

மக்கள்தொகைப் பெருக்கம் விவசாயக் குடும்பங்களின் விவசாய நில இருப்பை லாபகரமாகவும் வேளாண்மைக்கு ஏற்றதாக இல்லாமல் குறைத்திருக்கிறது. 1971-இல் ஓர் இந்திய விவசாயியின் சராசரி விவசாய நிலப் பரப்பு 2.28 ஹெக்டேர் என்றால், 2021-இல் அதுவே வெறும் 0.74 ஹெக்டேராகக் குறைந்திருக்கிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் லாபகரமாகப் பயிரிட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கூட்டுறவுப் பண்ணைகளோ, கார்ப்பரேட் விவசாயமோ உருவாகாமல் போனால் பெரும்பாலான விவசாய நிலப்பரப்பும் தரிசாக மாறிவிடும் அபாயத்தை இந்தியா எதிர்கொள்கிறது. இடுபொருள் செலவும், பணவீக்கமும் வேளாண் பொருள்களின் விலையை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், விவசாயிகள் மாற்றுத் தொழில் தேடி வெளியேற வேண்டும்; இல்லையென்றால், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம்.

1991-இல் சீனாவில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 60% என்றால் இந்தியாவில் 63%. சீனா அதை 22% -ஆகக் குறைத்திருக்கிறது. இந்தியாவில் 42% விவசாயிகள். மானியத்தின் தயவில் விவசாயம் என்பது பெருமைக்குரிய ஒன்றல்ல. லாபகரமான விவசாயத்தையும், அனைத்துப் பயிர்களின் விவசாயத்தையும் இந்தியாவின் வேளாண் கொள்கை வழிநடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT