ஞாயிறு கொண்டாட்டம்

ஒரே இடத்தில் 70 நெல் ரகங்கள் சாகுபடி

பசுமைப் புரட்சி அறிமுகம் செய்யப்பட்ட 1960-ஆம் ஆண்டில் இருந்து பாரம்பரிய நெல் சாகுபடியின் பரப்பளவு குறையத் தொடங்கியது.

இணையதளச் செய்திப் பிரிவு

வி.என்.ராகவன்

பசுமைப் புரட்சி அறிமுகம் செய்யப்பட்ட 1960-ஆம் ஆண்டில் இருந்து பாரம்பரிய நெல் சாகுபடியின் பரப்பளவு குறையத் தொடங்கியது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக நவீன ரக நெல் சாகுபடியே ஆதிக்கம் செலுத்துகிறது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்டவற்றால் மண்ணில் படிப்படியாக நஞ்சு பாய்ந்துவிட்டது. 'உணவே மருந்து' எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது உணவே விஷமாக மாறி, மனிதர்கள் கொடிய நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அண்மைக்காலமாக மீண்டும் பாரம்பரிய நெல் சாகுபடி பரவலாகி வருகிறது.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே ஆலங்குடி கிராமத்தில் இயற்கை மருத்துவரும், முன்னோடி இயற்கை விவசாயியுமான கோ. சித்தர் ஒரே இடத்தில் ஓராண்டுக்குள் கிட்டத்தட்ட 70 பாரம்பரிய நெல் ரகங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்துள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'1979 ஆம் ஆண்டிலிருந்து விவசாயம் செய்து வருகிறேன். தொடக்கத்தில் ரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தினேன்.

'கல்ச்சர்' என்கிற ஆடுதுறை 39 ரகத்தைப் பயிரிட்டேன். அறுவடைக்கு 20 நாள்கள் இருந்தபோது, நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்த வேளாண் விஞ்ஞானிகள், நிலத்தில் உயிரியல் வட்டம் என்கிற மண் வளம் உள்ளிட்ட இயற்கைக் கட்டுமானமே சிதைந்துவிட்டது என்றும், மீண்டும் புத்துயிரூட்டுமாறும் கூறினர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் ஆர்.எஸ். நாராயணன், கோ. நம்மாழ்வாரின் ஆலோசனைப்படி 1990 -களில் இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். 1997- ஆம் ஆண்டில் ஆர்.எஸ். நாராயணன் நேரடியாக இங்கு வந்து மண் புழு உரம் தயாரிப்பைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 25 ஏக்கரில் 28 ஆண்டுகளாக முழுமையாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.

முதலில் மரபு விதைகளைச் சேகரிக்கத் தொடங்கி, 121 பாரம்பரிய ரகங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்தேன். கடந்த இரு ஆண்டுகளாக வெயில், மழையால் பாதிக்கப்பட்டு, 84 ரகங்களாகக் குறைந்தன. கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பருவம் தவறிப் பெய்த மழையால், தற்போது 70 ரகங்களாகக் குறைந்துவிட்டன. கோடை, குறுவைப் பருவத்தில் ஏறத்தாழ 40 பாரம்பரிய விதை நெல் ரகங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்தேன். சம்பா பருவத்துக்கான ரகங்கள் அதிகமாக இருந்தாலும், பருவம் தவறிய மழையால் ஏறக்குறைய 30 ரகங்களைப் பயிரிட்டேன்.

கோடை, குறுவை பருவத்தில் வரப்புக்குடைஞ்சான், குள்ளங்கார், வெள்ளக்கார் உள்ளிட்ட 80 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை வயதுடைய விதை நெல்லை பயன்படுத்துவேன். இதேபோல, சம்பா பருவத்தில் இலுப்பப்பூச் சம்பா, வாடன் சம்பா, கிச்சிலிச் சம்பா, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி, சீரக சம்பா, கருஞ்சீரகச் சம்பா, பிச்சைவாரி, வரப்புக்குடைஞ்சான், தஞ்சாவூர் கருப்பு அரிசி, பெருங்கார் உள்பட 125 முதல் 180 நாள்கள் வரை வயதுடைய விதை நெல் ரகங்களைப் பயன்படுத்துவேன். கிச்சிலிச் சம்பா, கருப்பு கவுனி, தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா போன்ற ரகங்களை வருமானத்துக்காகப் பெருமளவில் சாகுபடி செய்யப்படும்.

மீதி ரகங்களை விதை நெல்லாக உருவாக்கி விவசாயிகளுக்குக் கொடுப்பேன். இவற்றில் லாபம் கிடையாது என்றாலும், தற்சார்பு தன்மை, செலவில்லா, உழவில்லா வேளாண்மை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவ்வளவு விதைகளையும் ஒரே இடத்தில் சாகுபடி செய்கிறோம். இயற்கை விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு அரை கிலோ, ஒரு கிலோ என இலவசமாகக் கொடுப்போம்.

எப்படிப் பாதுகாப்பது?

ஒவ்வொரு அமாவாசை நாளிலும் விதை நெல்லை காய வைப்போம். சணல் சாக்குகளை வாங்கி, மாட்டு சாணம் கரைக்கப்பட்ட தண்ணீரில் நனைத்து காய வைத்தவுடன், அவையெல்லாம் மொட, மொடப்பாக மாறிவிடும். அதில் விதை நெல்லை வைக்கும்போது பூச்சி வராது. கிருமி நீக்கத்துக்கு கருவை இலையை அரைத்தோ அல்லது பாலையோ ஊற்றுவோம். அல்லது தண்ணீரில் மாட்டு மூத்திரம் கலந்தோ அல்லது ஜீவாமிர்தம் கலந்தோ வைக்கப்படும்போது, கிருமி தாக்குதல் இருக்காது.

சாகுபடி முழுமைக்கும் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், தேமோர் கரைசல் போன்ற உயிர் உரங்கள்தான் பயன்படுத்தப்படும். வயலில் திரியும் எலிகளைப் பிடித்து எலி குணபம் செய்து, மண் வளத்துக்குப் பயன்படுத்தும்போது, மண்ணில் நுண்ணுயிரியைப் பெருக்கி, நல்ல விளைச்சல் கிடைக்கச் செய்யும்.

விளைச்சல் குறைவுக்குக் காரணம்?

இயற்கை உரங்கள் மூலம் மண் வளத்தைப் பெருக்கினாலே நல்ல விளைச்சலைப் பார்க்க முடியும். மண் வளமும், உற்பத்தித் திறனும் இல்லாததே விளைச்சல் குறைவுக்குக் காரணம். இந்த இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். மக்கும் குப்பைகளை மண்ணில் இட்டு மக்க வைக்கலாம். அவரவர் பண்ணையிலேயே மக்கும் குப்பைகள் கிடைக்கும்.

பயிர்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பூச்சிகளுக்கும் உணவாக இருக்கின்றன. பூச்சிகள் நமக்கு எதிரிகள் கிடையாது. நெல் பயிரில் வரக்கூடிய கதிர்களுக்கு பாதி பச்சைப் பரப்புதான் தேவைப்படும். மீதி பூச்சிகள் சாப்பிடுவதற்காக இருக்கிறது. தற்போது பயிர்கள் சரியாக வளராத நிலையில், பூச்சிகள் சாப்பிட்டுவிடுவதால், அதைக் கண்டு நாம் பயப்படுகிறோம். ஆனால், பாரம்பரிய விதை நெல் ரகங்களில் பல ரகங்கள் 5 அடி உயரத்துக்கு வளரும். இதன் மூலம், இயற்கை விவசாயத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத அளவுக்கு பூச்சிகளுக்கும் பயிர்கள் உணவாகவே இருக்கிறது.

இரு மடங்கு லாபம்

ரசாயனத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சாகுபடியில் இயற்கை ஒத்துழைத்தால் ஒரு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரைதான் லாபம் கிடைக்கும். ஆனால், இயற்கை விவசாயத்தில் நிபுணத்துவம் பெற்றுவிட்டால், நேரடியாக விற்பனை செய்யும்போது, உற்பத்தி செலவுடன் கூடுதலாக இரு மடங்கு லாபம் கிடைக்கும்.

நாட்டில் கிட்டத்தட்ட 2 லட்சம் பாரம்பரிய விதை நெல் ரகங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்றாலும், அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ற நெல் ரகங்கள்தான் நன்றாக வளர்ந்து விளைச்சலைக் கொடுக்கும். பகுதிக்கேற்ற விதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால், மண்ணையும், விவசாயிகளையும் வளப்படுத்தும். இது, இயற்கை விவசாயத்தில் மட்டுமே சாத்தியம். அனைவரும் ஒரே ரகங்களைப் பயிரிட்டால், உற்பத்தி அதிகரித்து விலை குறைந்து

விடும். அவ்வப்போது, சந்தையில் தேவையை அறிந்து, ரகங்களை மாற்றி, மாற்றி சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மண் சார்ந்த பயிர்களைச் சாப்பிடும்போதுதான் நமக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கும். இதற்காகவே இவ்வளவு மரபு விதைகளையும் பாதுகாத்து வருகிறோம்'' என்கிறார் சித்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நித்திலன் வாக்குமூலம்

சுதந்திரப் போரில் தமிழகத் தியாகிகள் (தொகுதி 3)

திருவள்ளுவரின் அறிவுக் கோட்பாடு

தமிழ் இலக்கியங்களில் சூழலியல் மேலாண்மை சிந்தனைகள்

வரப்பெற்றோம் (16-02-2026)

SCROLL FOR NEXT