சற்றும் எதிர்பாராத விதத்தில், கடந்த புதன்கிழமை (ஜன.28) அதிகாலையில் அவரது சொந்தத் தொகுதியான பாராமதியில் தரையிறங்கும்போது, விமானம் விபத்துக்குள்ளாகி, மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவாரும், அவருடன் பயணித்த நான்கு பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.
தொண்டர்களாலும், தொகுதி மக்களாலும் "அஜீத் தாதா' (தாதா என்றால் அண்ணன்) என்று அழைக்கப்பட்ட 66 வயது அஜீத் அனந்தராவ் பவார், அதிகாலை நேரத்தில் பாராமதிக்குச் சென்றிருக்கத் தேவையில்லை. மாநிலத்தின் துணை முதல்வர் ஒருவர், மிகச் சாதாரணமான உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்காக செல்ல வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம், துரதிருஷ்டவசமானது.
வருங்காலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக வேண்டிய ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கை இப்படியொரு அகால மரணத்தில் முடியும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? அவரது மறைவு, மகாராஷ்டிர அரசியலை திசைதிருப்பக்கூடும் என்பது மட்டுமல்ல, பிரிந்து இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வருங்காலம் குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறது. அதன் தாக்கம் தேசிய அரசியலிலும் இருக்கக்கூடும்.
தனது சித்தப்பா சரத்பவாரைப் போலவே, மகாராஷ்டிர மாநில அரசியலில் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவும், மேற்கு மகாராஷ்டிரத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடைய தலைவராகவும் வலம் வந்தவர் அஜீத் பவார். அவர் அணி மாறி இருக்கிறார்; ஆனால், எப்போதும் வெற்றி பெறும் அணியில், இருந்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வெற்றிக்குப் பின்னால், அஜீத் பவாரின் உழைப்பும், செல்வாக்கும் இருந்ததை 2023 கட்சிப் பிளவு உறுதிப்படுத்தியது.
1991-இல் சரத் பவாரால் பாராமதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார் அஜீத் பவார். தனது மக்களவைத் தொகுதியை சரத் பவாருக்காக ராஜிநாமா செய்துவிட்டு, மாநில அரசியலில் முழுநேரமாக இறங்கியதிலிருந்து தொடங்குகிறது அவரது கட்சித் தலைமையை நோக்கிய பயணம்.
எட்டு முறை சட்டப்பேரவை உறுப்பினர் மட்டுமல்ல, நான்கு வெவ்வேறு முதல்வர்கள், அணிகளின் ஆட்சியில் ஆறு முறை துணை முதல்வராகப் பணியாற்றிய சாதனை இந்தியாவிலேயே அஜீத் பவாருக்கு மட்டும்தான் உண்டு. முதல்வர் பதவிதான் தனது கனவு என்பதை அவர் ஒரு நாளும் மறைத்ததில்லை.இப்போது அந்தக் கனவு, கனவாகவே முடிந்து விட்ட சோகத்தை என்னவென்று சொல்வது?
பல ஊழல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது உண்டு. நீர்வளத் துறை அமைச்சராக இருந்தபோது, அவர் மீது தொடரப்பட்ட 70,000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு இன்றும் நிலுவையில்தான் இருக்கிறது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்தும்கூட, அதிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை.விடுவிப்பை நீதிமன்றம் அனுமதிக்கவும் இல்லை. அப்படி இருந்தும்கூட, அவரது செல்வாக்கில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது வியப்பு.
அதிகாரிகளுடன் அவருக்கு அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டு. மிகத் திறமையான நிர்வாகி என்பதால், அவரது வேகத்துக்கும், நிதி நிர்வாகத் திறமைக்கும் ஈடு கொடுக்க முடியாமல் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே திணறுவார்கள் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் நிதி நிலை அவரது விரல்நுனியில் இருந்தது. எத்தனையோ முதல்வர்களின் கீழ் மாநிலத்தில் 13தடவைகள் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்கிற சாதனை அவருடையது.
1999-இல், சரத் பவார் காங்கிரஸில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸை நிறுவியபோது, தனக்கு அடுத்த இடத்தில் சகோதரர் மகனான அஜீத் பவாரை உயர்த்தினார். சித்தப்பா பவார் தேசிய அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டபோது, மாநில அரசியலில் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தி உயர்த்தியவர் அஜீத் பவார். பால் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவற்றை பவார் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் அவர்தான்.
2023 பிளவின்போது, வெளிப்படையாகவே தனது சித்தப்பா சரத் பவாரை விமர்சித்து வெளியேறிக் கட்சியின் அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் அஜீத் பவார். இப்போது, மீண்டும் இரண்டு பிரிவுகளும் இணையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர் அகால மரணமடைந்திருக்கிறார். இனி வருங்காலங்களில் தேசியவாத காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்படுமா பாஜவுடன் இணைந்து செயல்படுமா, ஒருங்கிணைந்த கட்சியை யார் வழிநடத்துவார்கள் உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்புகிறது அவரது மறைவு .
மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அமைச்சரவையில் மறைந்த அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வர் பதவி ஏற்க இருக்கிறார்.
சுநேத்ரா பவாருக்கும் , பெரியவர் சரத் பவாருக்கும் இடையேயான குடும்ப ரீதியிலான உறவு சுமுகமானது என்பதால், இரண்டு பிரிவுகளும் இணைவது சாத்தியமாகிறது; மாநில அரசியலுக்கு சுநேத்ரா, தேசிய அரசியலுக்கு சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே என்று காட்சிகள் நகரலாம்.
ஒன்று மட்டும் நிச்சயம். மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் அஜீத் பவார், அடிக்குறிப்பாக இருக்க மாட்டார், அத்தியாயமாகத் தொடர்வார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.