ஒப்பந்தங்களுக்கு அப்பால்...
சீனாவைச் சுற்றியுள்ள வளையத்துக்கு வெளியே உள்ள வலிமையான இரண்டு நாடுகள் இந்தியாவும் ஜப்பானும்!
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின், 16-ஆவது இந்திய - ஜப்பான் மாநாட்டுக்கான இந்திய விஜயம் இருநாட்டு உறவில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது எனலாம். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான நட்புறவு என்பது வெறும் வர்த்தகம், கூட்டுறவு உள்ளிட்ட அம்சங்களால் மட்டுமே வடிவமைக்கப்பட்டதல்ல. "அண்டை வீட்டுக்காரன் நமது இயற்கையான எதிரி; அண்டை வீட்டுக்காரனின் அண்டை வீட்டுக்காரன் நமது நண்பன்'' என்கிறது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம். கடந்த அரை நூற்றாண்டாக இந்தியாவும் ஜப்பானும் நெருக்கமாக இருப்பது அந்தக் கூற்றை உறுதிப்படுத்துகிறது.
சர்வதேச அளவில் அதிவிரைவாக உருவாகிவரும் மாற்றங்களும், தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களும் எல்லா நாடுகளையும் தங்களது ராஜாங்க ரீதியிலான அணுகுமுறைகளைப் புதிய கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன. குறிப்பாக, சீனாவின் வளர்ச்சியும், நாகரிகமும் வல்லரசான அமெரிக்காவையே மிரட்டுகிறது எனும்போது ஏனைய நாடுகள் எம்மாத்திரம்? இந்தப் பின்னணியில்தான் ஜப்பான் பிரதமரின் விஜயத்தையும், இந்திய-ஜப்பான் உறவையும் நாம் கவனிக்க வேண்டும்.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியில் எந்த நாட்டுடனும் நிரந்தரமான நட்போ, பகையோ இல்லை என்கிற புதிய அணுகுமுறையை அமெரிக்கா முன்னெடுக்கிறது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த இந்தோ-பசிபிக் பாதுகாப்புக் கட்டமைப்பை முற்றிலுமாக விலக்கிக்கொள்ளா விட்டாலும், வலுவிழக்கச் செய்திருக்கிறது. சீனாவைச் சுற்றியுள்ள வளையத்துக்கு வெளியே உள்ள வலிமையான இரண்டு நாடுகள் இந்தியாவும் ஜப்பானும்! அவை ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதைத் தவிர்க்க இயலாது.
Advertisement
Advertisement
ஜப்பானிடம் தொழில்நுட்பம் இருக்கிறது என்றால், அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளத் தேவையான மனிதவளமும், புவிசார் வசதிகளும் இந்தியாவுக்கு இருக்கின்றன. அது மட்டுமல்லாமல், அமெரிக்கா, சீனா என்கிற இரண்டு வல்லரசுகளின் ஆதிக்கத்தில் சிக்காமல் இருக்கும் வளர்ந்து வரும் இடைநிலை வல்லரசுகள் இந்த இரண்டு நாடுகள் என்பதையும் குறிப்பிட வேண்டும். தென் கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளையும் இணைத்துச் செயல்பட்டால், இந்தியாவும், ஜப்பானும் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்.
இந்திய-ஜப்பான் உச்சி மாநாட்டில் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் குறித்தும், மேற்காசியப் போரின் விளைவாக ஏற்பட்டிருக்கும் சர்வதேசப் பிரச்னைகள் குறித்தும் இரு நாட்டுப் பிரதமர்களும் விவாதித்தனர்.
பொருளாதாரப் பாதுகாப்பு, தூய எரிசக்தி, ராணுவ உபகரணங்களை இணைந்து தயாரிப்பது, கப்பல் கட்டுமானம், விமானப் போக்குவரத்து, சரக்கு கையாளும் துறையின் ஒத்துழைப்பு, செமி கண்டக்டர்கள், க்வாண்டம் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்த 16 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன.
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகவும், நெருக்கமான நட்புறவு நாடாகவும் ஜப்பான் 1952 முதல் இருந்து வந்திருக்கிறது. மும்பை -அகமதாபாத் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட பல கட்டமைப்புகளில் பங்கு வகித்திருக்கிறது. ஜப்பான் அரசின் நேரடி உதவியை மிக அதிகமாகப் பெறும் நாடும் இந்தியாதான். 1400-க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கின்றன.
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான வர்த்தகம் 2025-26 நிதியாண்டில் 27.47 பில்லியன் டாலரை எட்டி இருக்கிறது. 2020-21 நிதியாண்டில் 15.33 பில்லியன் டாலராக இருந்தது 79% அதிகரித்திருக்கிறது. ஆனால், இதில் நாம் மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது. கடந்த ஐந்தாண்டுகளில் ஜப்பானுக்கான இந்திய ஏற்றுமதிகள் 4.4 பில்லியன் டாலரிலிருந்து 6.04 பில்லியன் டாலராக மட்டுமே உயர்ந்தன என்றால், இறக்குமதிகள் 21.43 பில்லியன் டாலராக அதிகரித்ததை நாம் கவனிக்கத் தவறலாகாது! ஜப்பானின் இறக்குமதிகளில் இந்தியா 22-ஆவது இடத்தில்தான் இருக்கிறது.
பாதுகாப்புத் துறையில் ராணுவத் தளவாடங்களை மட்டும் வாங்குவதில் இருந்து நகர்ந்து இரு நாடுகளும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தயாரிப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்திருப்பது முக்கியமான திருப்பம். இதன் மூலம் இரண்டு நாடுகளும் தங்களது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வதுடன், உற்பத்தித் துறையில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளும் உருவாகி இருக்கிறது.
இந்திய-ஜப்பானிய அரசுகள் இணைந்து செயல்பட்டாலும் தொழில் துறையினருக்கு இடையிலும், மக்களுக்கு இடையிலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நெருக்கமானதாக இல்லை. கல்வித் துறையில், இந்திய மாணவர்களின் இலக்கு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இல்லை. இன்னும்கூட நெருக்கமாக மக்களுக்கு இடையேயான கலாசார நட்புறவு மேம்படும்போதுதான், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு புதிய பாதையில் பயணிக்கும்!
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறு
படுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
திருக்குறள் (எண் 789) அதிகாரம்: நட்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.