க்வாட் கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...
தற்போதைய இந்திய-பசிபிக் கருத்தாக்கத்தை உருவாக்கி பெயரிட்டவர் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.
-மணீஷ் திவாரி
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்: அதாவது, "செல்வந்த நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்த காலம் முடிந்துவிட்டது. அமெரிக்காவுக்கு தேவை கூட்டாளிகளே தவிர, பாதுகாப்புக்காக ஒட்டிக்கொண்டிருக்கும் நாடுகள் அல்ல. கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட கூட்டணிகளையே அமெரிக்கா விரும்புகிறது. ஒருவர் மூலம் பலனடைந்துவிட்டு, அதற்குப் பதிலாக எதையும் திருப்பி அளிக்க மறுப்பதை ஏற்க முடியாது. ஒரு கூட்டணியின் வலிமை என்பது அதில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையால் அன்றி, படை அமைப்புகளின் எண்ணிக்கையால் அளவிடப்படுகிறது. மாநாடுகளை நடத்துவதைவிட போர் திறனே தேவை' என்று கூறினார்.
இந்தச் சூழலில், ஆக்கஸ் என்றழைக்கப்படும் ஆங்கிலோ-சாக்சன் ராணுவக் கூட்டணி (ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா இடம்பெற்றுள்ள கூட்டணி) "க்வாட்' கூட்டமைப்பை (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ள கூட்டமைப்பு) எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என்பதே தற்போதைய கேள்வி.
Advertisement
Advertisement
கடந்த 1920-ஆம் ஆண்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பிராந்தியத்துக்கு கார்ல் ஹெளஸோஃபர் என்ற ஜெர்மானிய புவி அரசியல் அறிஞர் முதன்முதலில் புவியியல் வடிவம் அளித்தார். காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகள், ஆங்கிலோ- அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அவரின் பார்வையாக இருந்தது. அவரின் பார்வைக்கும், தற்போதைய "க்வாட்' கூட்டமைப்புக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. தற்போதைய இந்திய-பசிபிக் கருத்தாக்கத்தை உருவாக்கி பெயரிட்டவர் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.
கடந்த 2006, செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், இந்திய நாடாளுமன்றத்தில் "இரு கடல்களின் சங்கமம்' என்ற தலைப்பில் ஷின்ஸோ அபே உரையாற்றினார். அந்த உரையில், "இந்தியப் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் ஒன்றோடொன்று இணைந்த ஒரே உத்திசார்ந்த கடற்பரப்பாக கருதப்பட வேண்டும்' என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அந்தப் பரப்பில் சுதந்திரமும் செழிப்பும் ஒன்றுக்கொன்று வலுசேர்க்கும் வகையில் வளரவேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. இந்தக் கண்ணோட்டமே பின்னாளில் "க்வாட்' கூட்டமைப்பின் தத்துவ அடித்தளமாகவும், அதைத் தாங்கி நிற்கும் முக்கியச் சிந்தனையாகவும் மாறியது.
"க்வாட்' கூட்டமைப்பை கட்டியெழுப்பும் நடவடிக்கை 2008-ஆம் ஆண்டிலேயே சிதைந்துவிட்டது. அந்த ஆண்டு பிப்ரவரியில் சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்றபோது, அந்தக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித் செயல்பட்டார். அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் அரசும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் பங்கேற்கும் மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சியில் இருந்து விலகியது. 2020-ஆம் ஆண்டில்தான் அந்தக் கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலியா மீண்டும் இணைந்தது.
இந்தச் சூழலில், சீனாவின் ஆக்கிரமிப்பும், வலிந்து தாக்கும் அடாவடித்தனமான அணுகுமுறையும் தென்சீனக் கடற்பகுதியிலும் தீவிரமடைந்தது. புவி-பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவை இணைக்கும் சீனாவின் பிரம்மாண்ட பொருளாதார வழித்தட திட்டத்துடன் (பிஆர்ஐ முன்னெடுப்பு), இந்திய பெருங்கடலில் சீனாவின் கடற்படை ஆதிக்கமும் விரிவடைந்தது. இது "க்வாட்' கூட்டமைப்பில் உள்ள 4 நாடுகளின் உத்திசார்ந்த கணக்கீடுகளின் அடிப்படையை மாற்றியது.
2026-ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற "க்வாட்' கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய-பசிபிக் கடல்சார் கண்காணிப்புக்கு ஒன்றிணைந்து பணியாற்றுதல் என்ற வழிமுறையின் மூலம், பிராந்திய கடல்சார் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுத் திறன்களை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கிய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுவரை "க்வாட்' மேற்கொண்ட முன்னெடுப்புகளில் மிகவும் செயல்படக்கூடிய வழிமுறையாக இது தெரிகிறது.
முதலில் "க்வாட்' என்பது என்ன என்பதைச் சரிவர புரிந்துகொள்ள வேண்டும். "க்வாட்' கூட்டமைப்பை கடல் நுரையுடன் ஒப்பிட்டுப் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அந்தக் கூட்டமைப்பு தொடங்கிய வேகத்தில் காணாமல் போய்விடும் என்று கூறினார். அவர் ஒருவேளை அரசியல் நாடகத்தனமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கக் கூடும். ஆனால், கடல் நுரை மறைந்துவிடவில்லை. அதே நேரத்தில், "க்வாட்' கூட்டமைப்பை புதிதாக உருவாகி வரும் "ஆசிய நேட்டோ கூட்டமைப்பு' என்று சித்தரிப்பதும் தவறு.
"க்வாட்' கூட்டமைப்பில் உள்ள முரண்பாடு என்னவெனில், அது விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. பொறுப்புகளின் அடிப்படையில் அல்லாமல், உறுப்பு நாடுகளின் நலன்கள் மற்றும் கருத்துகள் ஒன்றிணைவதன் மூலம் செயல்படுகிறது. அந்தக் கூட்டமைப்பால் ஒத்துழைப்பை எளிதாக்க முடியும்; ஆனால் கட்டாயப்படுத்தவோ, உத்தரவாதம் அளிக்கவோ முடியாது. இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்வதே அந்தக் கூட்டமைப்பின் நோக்கமாக இருக்கும்போது, இந்த வரம்புகள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
பரஸ்பரம் நேரடியான மற்றும் ஆழமான உறவு, சூழ்நிலை குறித்த புரிதலைப் பகிர்ந்துகொள்ளுதல், கூட்டுப் பாதுகாப்புப் படை பயிற்சிகள், ராஜீய மற்றும் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்டவற்றை அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் ஏற்படுத்திக்கொள்ளும் வகையில், பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றை "க்வாட்' மூலம் உருவாக்கலாம். அமெரிக்காவின் உறுதியற்ற ஈடுபாட்டை மட்டுமே நம்பி இருக்காமல், "க்வாட்' கூட்டமைப்பில் உள்ள பிற உறுப்பு நாடுகள் தங்களுக்குள் வலுவான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை உருவாக்குவதே அந்தக் கூட்டமைப்பின் நீண்டகால முக்கியப் பங்களிப்பாக இருக்க முடியும்.
உலகில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்குப் பெரிதும் முன்னுரிமை அளிக்கும் 3 பொருளாதார நாடுகளுடன் மேம்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியா பெறுவதற்கு "க்வாட்' முக்கிய வாய்ப்பை வழங்கக்கூடும். உலகில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் காப்புரிமைப் பதிவுகளில் அமெரிக்கா முன்னணி நாடாக உள்ளது. ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முன்னோடியாக விளங்குகிறது. குவாண்டம் கணினிப் பயன்பாடு ஆராய்ச்சியில் ஆஸ்திரேலியா முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. அதே வேளையில், தனது பரந்த மற்றும் வேகமாக வளர்ந்துவரும் எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத் திறன்மிக்க மனிதவளம் மூலம், தொழில்நுட்ப விநியோகத்துக்கு இந்தியா வலுசேர்க்கிறது.செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினிப் பயன்பாடு, தூய்மையான எரிசக்தி, புதுமையான தொலைத்தொடர்பு வசதிகள் என வளர்ந்து வரும் முக்கிய தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு செயல்படும் "க்வாட்' பணிக் குழுக்கள், அந்தக் கூட்டமைப்பின் நீண்ட கால உத்திசார்ந்த முக்கியத்துவத்தின் மையக் கூறுகளாக உள்ளன.
தொழில்நுட்ப நிர்வாகம், தரநிலைகளை நிர்ணயித்தல், வலுவான விநியோக முறையை ஒருங்கிணைக்கும் "க்வாட்' கூட்டமைப்பின் திறனானது கூட்டுப் பயிற்சியைவிட அதிக சாதகமான விளைவுகளை கொண்டதாக இருக்கக் கூடும்.
"க்வாட்' எதிர்கொள்ளும் உடனடி சவால் என்னவென்றால், அதன் உறுப்பு நாடுகளின் தேசிய கண்ணோட்டங்களும் முன்னுரிமைகளும் இயல்பாகவே ஒன்றிணைவதில்லை. அவற்றை ஒரே திசையில் கொண்டு வருவதற்கு தொடர்ச்சியான ராஜீய முயற்சிகள், மிக உயர்ந்த தரத்திலான செயல்திட்ட நிர்வாகம், நீடித்த அரசியல் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. அத்துடன் அந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட்டமைப்பின் நோக்கங்கள் மற்றும் ஒத்துழைப்பு பாதிக்கப்படாமல் தொடர்வதற்கான நீடித்த நடவடிக்கைகள் அவசியம்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளமை நிலவ வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு பரந்த கூட்டணியை உருவாக்க வேண்டும். இதற்கு இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மேலும் பல நாடுகளுடனான உறவை "க்வாட்' மேலும் ஆழமாக்க வேண்டும். இது முற்றிலும் அவசியமாகும்.
உத்திசார்ந்த எதார்த்தவாதம் என்ற பெயரில், உலகளாவிய செயல்பாடுகளில் தனது பங்கையும் செல்வாக்கையும் அமெரிக்கா குறைத்துக்கொண்டு வருகிறது. உலகில் அதிகார சமநிலையைப் பேணும் மிகப் பெரிய வெளிப்புற சக்தி என்ற பொறுப்பை இனியும் சுமக்க அமெரிக்கா தயாராக இல்லை. இந்நிலையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் குறிப்பிட்டபடி எழுச்சி பெற்று வரும் சக்திக்கும் (சீனா), ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தி
வரும் ஒரு சக்திக்கும் (அமெரிக்கா) இடையிலான போட்டி மோதலாக மாறும் அபாய நிலை தீவிரமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, வல்லரசுகள் மற்றும் பெரும் சக்தி கொண்ட நாடுகளுக்கும் அடுத்த நிலையில் உள்ள நடுத்தர சக்தி கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
கட்டுரையாளர்:
முன்னாள் மத்திய அமைச்சர்.