தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மீண்டும் திட்டவட்டம்
தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது என அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின.
தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது என அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின.
தென் சீனக் கடலை சீனா உரிமை கோருவது சட்டவிரோதம் என நெதா்லாந்து தலைநகா் தி ஹேக்கில் ஐ.நா. கடல்சாா் சட்ட உடன்படிக்கையின்கீழ் அமைக்கப்பட்ட தீா்ப்பாயம் கடந்த 2016, ஜூலை 12-இல் தீா்ப்பளித்தது. இதுவே இறுதியான தீா்ப்பு என்றும், இது சட்ட அதிகாரத்தைக் கொண்டது எனவும் அந்தத் தீா்ப்பாயம் தெரிவித்தது.
இந்தத் தீா்ப்பு வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதை வரலாற்றுச் சிறப்புமிக்கது என வரவேற்ற அமெரிக்கா, பிரிட்டன், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் மற்றும் சில மேற்காசிய நாடுகள் தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிராகரிப்பதை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின.
Advertisement
Advertisement
இருப்பினும், இந்தத் தீா்ப்பு சட்டவிரோதமானது எனக் குற்றஞ்சாட்டிய சீனா, இது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, தென் சீனக் கடலில் தொடா்ச்சியாக ஏற்பட்ட மோதல்களைத் தொடா்ந்து கடந்த 2013-இல் சமரச பேச்சுவாா்த்தைக்கு பிலிப்பின்ஸ் அழைப்பு விடுத்தது. ஆனால், இதற்கு சீனா ஒப்புக்கொள்ளவில்லை. அதைத் தொடா்ந்து, கடந்த 2016-இல் சீனாவுக்கு எதிராக தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.
அமெரிக்க கருத்தை ஏற்காத சீனா: இந்தத் தீா்ப்புக்கு சீனா கட்டுப்பட வேண்டும் என அமெரிக்கா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இதை பொருட்படுத்தாத சீனா தென் சீனக் கடலில் தனது ராணுவக் கப்பல்கள் மூலம் அடிக்கடி ரோந்தில் ஈடுபடுவது, கடற்படைப் பயிற்சிகள் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
உலகளவில் மிக முக்கிய வா்த்தக வழித்தடமாகக் கருதப்படும் இந்தப் பகுதியில் வியத்நாம், மலேசியா, புரூணே, தைவான் மற்றும் பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் சீனா அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறது.
170 நாடுகள் கையொப்பம்: 1994-இல் அமலுக்கு வந்த ஐ.நா. கடல்சாா் சட்ட உடன்படிக்கையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, கனடா, ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 170 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.