வரலாறு படைக்கும் காஷ்மீர்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்த ஜம்மு - காஷ்மீர் அணி புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
தலையங்கம்வரலாறு படைக்கும் காஷ்மீர்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்த ஜம்மு - காஷ்மீர் அணி புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்த ஜம்மு - காஷ்மீர் அணி புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. கடந்த ஆண்டு அக். 15-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நாடு முழுவதும் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டம் கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் கடந்த பிப். 24 முதல் 28 வரை நடைபெற்றது. இதில், 8 முறை சாம்பியன் ஆன கர்நாடகத்தை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வீழ்த்தி ஜம்மு - காஷ்மீர் கோப்பையை வென்றது.
ஜம்மு -காஷ்மீர் அணியின் இந்த வெற்றிப் பயணம் அசாதாரணமானது. அந்த அணி ரஞ்சி கோப்பைக்கான போட்டியில் ஜலந்தரில் கிழக்கு பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த 1960 ஜன. 15-இல் முதல்முறையாக களம் கண்டு தோல்வியைத் தழுவியது. ரஞ்சி கோப்பை போட்டியில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜம்மு - காஷ்மீர் அணி 1982-இல்தான் முதல் வெற்றியைக் கண்டது.
அதன் பின்னர் தொடர்ந்து விளையாடியபோதும், கடந்த 66 ஆண்டுகளில் 2013-14, 2019-20, 2024-25 என மொத்தம் மூன்று முறைதான் அந்த அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. அதிலும் கடந்த ஆண்டு கேரளம் முதல் இன்னிங்ஸில் ஒரே ஒரு ரன் முன்னிலை பெற்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றது ஜம்மு - காஷ்மீர் அணிக்குப் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. மனம் தளராமல் அந்த அணி இப்போதைய போட்டியில் களம் இறங்கி முன்னாள் ரஞ்சி சாம்பியன்களான தில்லி, ஹைதராபாத், ராஜஸ்தான், மத்திய பிரதேச அணிகளையும் அரை இறுதியில் பெங்கால் அணியையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த கர்நாடக அணியை எதிர்கொண்டது. தேசிய அளவில் இந்திய அணிக்கு விளையாடி வரும் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், தேவதத் படிக்கல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் கர்நாடக அணியில் இடம்பெற்றபோதும், இறுதி ஆட்டத்தில் முதல் முறை விளையாடுகிறோம் என்ற பதற்றமே இல்லாமல் முதல் நாளில் இருந்தே ஜம்மு - காஷ்மீர் ஆட்டக்காரர்கள் விளையாடியது குறிப்பிடத்தக்கதாகும்.
"எதிரணிகளில் மிகுந்த அனுபவம் மிக்கவர்களும், தேசிய அணிக்காக விளையாடி வருபவர்களும் இடம்பெற்றிருந்தனர். அவர்களைப்போன்ற "ஹீரோ'க்கள் எங்கள் அணியில் இல்லை.
ஆனால், இப்போது அணியின் ஒவ்வொருவரும் "ஹீரோ' ஆகிவிட்டனர்' என்று ஜம்மு - காஷ்மீர் அணியின் பயிற்சியாளர் அஜய் சர்மா குறிப்பிட்டது 100 சதவீதம் உண்மை.
இந்த வெற்றி ஓரிருவரால் மட்டும் வந்ததல்ல. 10 ஆட்டங்களில் 60 விக்கெட்டுகள் சாய்த்து தொடர் நாயகன் விருது பெற்ற ஆகிப் நபி, மொத்தம் 748 ரன்கள் குவித்த அப்துல் சமத்,
637 ரன்கள் குவித்த 41 வயதான கேப்டன் பாரஸ் டோக்ரா, இறுதி ஆட்டத்தில் சதம் அடித்த சுபம் புந்திர் (121), கம்ரான் இக்பால் (160 நாட் அவுட்), சஹில் லோத்ரா (101 நாட் அவுட்), பந்து வீச்சாளர் சுனில் குமார் (9 ஆட்டம் - 31 விக்.) என கூட்டு முயற்சியாலேயே இது சாத்தியமாகி உள்ளது.
கடந்த ஆண்டு ரஞ்சி சீசனில் 44 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆகிப் நபி, இந்த ஆண்டு 7 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் வெறும் 12.57 ரன்கள் சராசரியில் 60 விக்கெட்டுகளை சாய்த்து பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி உள்ளார்.
மலைகள், பள்ளத்தாக்குகள் என கிரிக்கெட்டுக்கு சாதகமில்லாத புவியமைப்பு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாதத்தால் அமைதியற்ற சூழ்நிலை, குறைந்தபட்ச விளையாட்டுக் கட்டமைப்புகள், நிர்வாகச் சிக்கல்கள் என இவை அனைத்தையும் கடக்க வேண்டிய நிலையில்தான் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அணியில் இடம்பெற்ற பலரும் ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பாரமுல்லா மாவட்டம், உரி பகுதியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள ஷீரி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகிப் நபி. அதேபோன்று, அப்துல் சமத் ரஜௌரி மாவட்டம் காலாகோட் கிராமத்தையும், கம்ரான் இக்பால் ஸ்ரீநகரையும், சஹில் லோத்ரா ஜம்முவையும், அபித் முஷ்டாக் தோடா மாவட்டம், பதேர்வா பகுதியையும் யாவெர் ஹாசன் கான் அனந்தநாக் பகுதியையும் சேர்ந்தவர்கள்.
இவர்களது முன்னுதாரணம், அந்தந்தப் பகுதிகளில் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது. தேவையான உள்கட்டமைப்பு, பயிற்சிக்கான வசதிகளை மாநில அரசும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ஏற்படுத்திக் கொடுத்தால் அந்தந்தப் பகுதிகளில் பயங்கரவாதத்தின் பக்கம் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது குறையும் வாய்ப்பும் உள்ளது.
ரஞ்சி போட்டியில் மும்பை, தில்லி, கர்நாடகம் போன்று பலம் வாய்ந்ததாகக் கருதப்படும் அணிகளே சாம்பியன் ஆகி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குஜராத், விதர்பா, செளராஷ்டிரம், மத்திய பிரதேசம், இப்போது ஜம்மு - காஷ்மீர் என அனுபவமற்ற ஆட்டக்காரர்களைக் கொண்ட அணிகள் முதல்முறை சாம்பியன் ஆகி வரலாறு படைப்பது ஆரோக்கியமான அறிகுறி.