சட்டமல்ல, புரிதல்தான் வேண்டும்!
பிரசவம் என்பது பெண்மை எதிர்கொள்ளும் வேதனை என்றால், பருவம் எய்தும் காலம் தொட்டு முதுமைக்கால தொடக்கம் வரையில் மகளிர் எதிர்கொள்ளும் மாதவிடாய் சிரமங்கள், ஆண்களால் உணரமுடியாத இயற்கை உபாதை. பொது வெளியில் அதிகம் பேசப்படாத, பெண்கள் மட்டுமே அனுபவிக்கும் அந்த அவஸ்தை குறித்து ஆண்கள் உணருவதில்லை என்பது மட்டுமல்ல, அதை ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்வதில்லை.
பாரத சமுதாயத்தில், குறிப்பாக ஹிந்து வாழ்வியல் நெறியில், பெண்மையின் மாதவிடாய் துயரம் உணரப்பட்டிருந்தது. அவர்கள் அந்த மூன்று நாள்கள் ஓய்வு வழங்கப்பட்டு அன்றாட நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். அதை ஆணாதிக்க சமுதாய பெண்ணடிமைத்தனச் சிந்தனையின் அடையாளம் என்று வர்ணிக்க முற்படுபவர்கள், நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் நடைமுறையை மட்டுமே வைத்து மகளிரின் மாதவிடாய் ஓய்வை அணுக முற்பட்டனர் என்றுதான் கூற வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் மகளிரில் பலரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் உடல் சோர்வு அடைந்து விடுகிறது. போதாக்குறைக்கு விவரிக்க முடியாத எரிச்சலையும், அடிவயிற்றில் வலி, தலைவலி போன்ற உபாதைகளையும் எதிர்கொள்கிறார்கள். அந்த மூன்று நாள்களும் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுதல் வேண்டும் என்பதுதான் ஒதுக்கப்படுதலின் நோக்கம். அதையே, ஒரு தண்டனையாக சமுதாயம் மாற்றியது என்பது மனிதன் (ஆண்கள்) செய்த அநீதி.
காலமாற்றத்தால், பெண்கள் இப்போது "ஒதுக்கப்படுதல்' வழக்கத்தில் இருந்து அநேகமாக விடுவிக்கப்பட்டு விட்டனர். பெண்கள் கல்வி கற்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்து விட்டது என்பதைவிட வழக்கமாகவே மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் காலத்தில் இலவசமாக "நாப்கின்கள்' எல்லா மாநிலங்களிலும் வழங்கப்படுகின்றன. இன்னும் கழிப்பறைகள் உறுதிப்படுத்தப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
இந்தப் பின்னணியில்தான் சைலேந்திர மணி திரிபாதி என்கிற வழக்குரைஞரின் மாதவிடாய் விடுப்பு தொடர்பான மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி அமர்வின் முன் விசாரணைக்கு வந்திருக்கிறது. 1961 பிரசவகால அனுகூலங்கள் சட்டத்தில், அரசமைப்பு சாசனத்தின் சுய கெüரவத்துக்கான அடிப்படை உரிமைச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சைலேந்திர மணி திரிபாதியின் கோரிக்கை.
வேலை பார்க்கும், படிக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் வேதனைகளைக் கருத்தில் கொண்டு, நாடு தழுவிய அளவில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை. பஞ்சாப் பல்கலைக்கழகம், போபால், ஒளரங்காபாதில் உள்ள கல்வி நிலையங்கள் அதுபோல விடுப்பு வழங்குவதாகவும், அதை நாடு தழுவிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்னை ஏற்கெனவே சில மாநில அரசுகளின் கவனத்துக்கு வந்திருக்கிறது. ஒடிஸô மாநிலத்தில் அரசு ஊழியராக இருக்கும் பெண்கள் 55 வயது வரையில் மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். கேரள மாநிலத்தில் பல்கலைக்கழக, தொழில்பயிற்சி நிலைய மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் 52 வயது வரையிலான அரசிலோ, தனியார் துறையிலோ பணிபுரியும் பெண்களுக்கு மாதம் ஒரு நாள் விடுப்பு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனால், தனியார் துறையினர் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்குகிறார்கள் என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் அந்த அரசாணைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
இந்தியாவில் மட்டுமல்ல, ஸ்பெயின் நாட்டில் பெண்ணியத்தின் வெற்றி என்று 2023-இல் இயற்றப்பட்ட மாதவிடாய் விடுப்புச் சட்டம் தலைப்புச் செய்தியானது. ஆனால், வெகு சிலர் மட்டுமே அந்த உரிமையைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. ஜாம்பியா நாட்டில், அந்தச் சலுகை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு காரணமாக நடைமுறையில் இல்லை.
"இப்படியொரு சட்டம் கொண்டுவரப்பட்டால், நீதித் துறை உள்பட எந்தவொரு துறையிலும் மகளிருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படாமல் போகலாம்'' என்கிற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்தின் கருத்தும், "இதைக் கட்டாய சட்டமாக்கினால், அதனால் பெண்களை வேலையில் சேர்த்துக்கொள்வது பாதிக்கப்படாதா?'' என்கிற நீதிபதி ஜயமால்ய பாக்சியின் கேள்வியும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
2017-18-இல் 23.2% -ஆக இருந்த வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு, 2023-24-இல் 41.7%-ஆக உயர்ந்திருக்கிறது. பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பு பெறுவதற்குக் கட்டாய மாதவிடாய் விடுப்பு தடையாக அமைந்துவிடக் கூடாது. அதே நேரத்தில், பெண்களுக்கு இயற்கை வழங்கி இருக்கும் சகிப்புத்தன்மையை, நாம் மதித்தாக வேண்டும்.
அதற்குச் சட்டம் தேவையில்லை. புரிதல் இருந்தாலே போதும்!