முகப்பு
தலையங்கம்

நம்பிக்கை சிதையலாகாது!

நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் ஒருபகுதியாக உள்ளது மூளைச் சாவு ஏற்பட்டோரின் உடல் உறுப்புகளை தானம் செய்வது.

Updated On : 7 மே 2026, 5:01 am IST
பகிர்:

நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் ஒருபகுதியாக உள்ளது மூளைச் சாவு ஏற்பட்டோரின் உடல் உறுப்புகளை தானம் செய்வது. அண்மைக்காலமாக, ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், கிராமம், நகரம் என்ற எந்தப் பாகுபாடுமின்றி, தங்கள் குடும்பத்தில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாக அளிப்பது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பெரும்பாலான மூளைச் சாவு சம்பவங்கள் சாலை விபத்தால் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற தருணங்களில் இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்குமாறு அவர்களது குடும்பத்தினரிடம் கேட்பது மிகவும் தர்மசங்கடமானது. என்றாலும், அந்த உறுப்புகளின் மூலம் பலர் மறுவாழ்வு பெறுவார்கள் என்பதால், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் பக்குவமாகப் பேசி, உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுகின்றனர்.

Advertisement

உடல் உறுப்புகளை தானமாகப் பெறுவதில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து பெரும்பாலான சாமானியர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இருந்தாலும், மருத்துவர்கள் மீது உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் உறுப்பு தானம் அளிக்க சம்மதிக்கின்றனர். இவ்வாறு உணர்வுபூர்வமான நம்பிக்கையின் அடிப்படையில் அளிக்கப்படும் உடல் உறுப்புகள் உண்மையில் இலவசமாக சேவை அடிப்படையில் மற்றவர்களுக்கு பொருத்தப்படுகிறதா என்பதில்தான் இப்போது விமர்சனம் எழுந்துள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த தற்போது 78 வயதாகும் ஒரு மருத்துவர், மருத்துவமனைகள் உறுப்பை சேகரிப்பதற்காக, நோயாளிகளுக்கு முன்கூட்டியே மூளைச் சாவு ஏற்பட்டதாக அறிவிக்கின்றன என குற்றஞ்சாட்டியதோடு, கேரள உயர்நீதிமன்றத்தில் இது குறித்த பொதுநல வழக்கை கடந்த 2017, மே மாதம் தொடுத்தார். இந்த முறைகேடு குறித்து கவலை தெரிவித்தாலும், மாநில அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று ஒரு மாதத்திலேயே வழக்கை முடித்துவைத்தது நீதிமன்றம். இந்த வழக்கை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திவந்த அந்த மருத்துவர், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, கடந்த ஏப்ரல் 28-இல் அளித்த முக்கிய உத்தரவு, மே 2-ஆம் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி, தற்போது பயன்படுத்தப்படும் அப்னியா சோதனைக்குப் பதிலாக, மூளை இறப்பு நிலையைத் தீர்மானிக்க, செரிப்ரல் ஆஞ்சியோகிராம் மற்றும் எலக்ட்ரோ-என்செஃபலோகிராம் போன்ற முறைகள் சிறந்தவையா என்பதை ஆய்வு செய்ய 3 நரம்பியல் அல்லது நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க புது தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு (எய்ம்ஸ்) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு தனது பரிந்துரையை 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள மருத்துவர், தற்போதைய அப்னியா சோதனை நம்பகமானதல்ல, அந்த சோதனை நடத்தப்படுகிறதா, இல்லையா என்பதற்கே ஆதாரம் இல்லை. மருத்துவர்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம். நோயாளியைப் பரிசோதிக்காமலேயே ஒருவரை மூளைச் சாவு அடைந்துவிட்டார் என அறிவிக்கலாம். இந்தச் செயல்முறையின் விடியோ பதிவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே செய்யப்படுகிறது. எலக்ட்ரோ-என்செஃபலோகிராம் மற்றும் ஆஞ்சியோகிராம் போன்ற சோதனைகள் மூளை இறப்பை உறுதி செய்வதற்கு முன்பாக செய்யப்படுமானால், அவற்றுக்கு தெளிவான பதிவுகள் இருக்கும்; இந்தப் பரிந்துரையை கேரள சுகாதாரத் துறை முதலில் ஏற்றுக்கொண்டாலும், பிறகு பெரிய தனியார் மருத்துவமனைகளின் அழுத்தத்தால் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.

உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதில், அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு உதவவும் கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இதன் பயனாக உலக அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியா 3-ஆவது இடத்திலும், தேசிய அளவில் தமிழகம் முதலிடத்திலும் உள்ளன.

மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள், முறையாக முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு மட்டுமே பொருத்தப்படுகிறதா, உறுப்பு தானம் பெறுவதில் தனியார் மருத்துவமனைகள் அதிக ஆர்வம் காட்டுவதன் நோக்கம் என்ன? உறுப்பு தானம் பெறுவோரின் அடையாளங்களை வெளிப்படுத்த முடியாது என்பதால், இதில் தவறு நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் போன்ற கேள்விகள், சந்தேகங்களுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்கப்பட்டால், இதன்மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

எங்கோ இருக்கும் முகம் தெரியாத ஒருசிலர் பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் உறுப்பு தானம் வழங்க முன்வரும் உறவுகளின் நம்பிக்கை சிதையக் கூடாது. அதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். தானமாகப் பெறப்படும் உறுப்புகள் முன்பதிவு செய்திருக்கும் வரிசைப்படியே நோயாளிகளுக்கு பொருத்தப்படும் என்பதையும், அது குறித்த வெளிப்படைத்தன்மையையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.