கல்வி

திரும்ப வழியில்லை

"குருதிப்புனல்' என்ற திரைப்படத்தில் தீவிரவாதிகளின் வெறித்தனம் திறம்படச் சித்திரிக்கப்பட்டிருக்கும். அவர்களோடு மோதும்போது நல்லது கெட்டது பார்க்க முடியாது. விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா, இல்லையா என்பதை

ஆர். நட​ராஜ்

"குருதிப்புனல்' என்ற திரைப்படத்தில் தீவிரவாதிகளின் வெறித்தனம் திறம்படச் சித்திரிக்கப்பட்டிருக்கும். அவர்களோடு மோதும்போது நல்லது கெட்டது பார்க்க முடியாது. விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா, இல்லையா என்பதை ஆராய நேரமிருக்காது. யுத்தக்களத்தில் உயிரோடு இருப்பவர்தான் வெற்றி பெறுகிறார். சிஐடி போலீஸôர் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவி அங்கிருந்து தகவல் அனுப்புவது நுண்ணறிவுப் பிரிவின் உச்சகட்ட வெற்றி எனலாம்.

குருதிப்புனல் படத்தில் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவிய அதிகாரி, அந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பைப் பெறுவதற்கு சக அதிகாரியிடம் தன்னைச் சுடச் சொல்லி உயிரைத் தியாகம் செய்வது படத்தின் உச்சகட்ட காட்சி.

இவ்வாறு உயிரைப் பணயம் வைத்து பல சாதுர்யமான சாகசங்களை காவல்துறை செய்திருக்கிறது என்றாலும், மதவாத தீவிரவாத இயக்கங்கள் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாத அமைப்புகளில் ஊடுருவுவது அவ்வளவு எளிதல்ல.

மும்பையில் 26-11-2008 அன்று நடந்த பயங்கர நிகழ்வுக்குப் பிறகு தீவிரவாதம் புனேயில் தலைதூக்கியது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, (13 பிப்ரவரி 2010) புனேயில் உள்ள பிரபலமான ஜெர்மன் பேக்கரி. இது சாதாரணமாக வெளிநாட்டினர் வந்து போகும் இடம். இது ஆச்சார்ய ரஜ்னீஷ் என்ற ஓஷோவின் ஆசிரமத்துக்கு அருகில் உள்ளது. ஆசிரமமும் தீவிரவாதிகள் குறியில் இருந்தது. ஆனால், தெய்வாதீனமாகத் தப்பியது.

அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் பிடியில் இருக்கும் டேவிட் ஹெட்லியின் இந்திய வரவு பற்றியும், பல இடங்களில் குண்டு வைத்து தீவிரவாதத்தை பரவவிடச் செய்யும் திட்டம் பற்றியும் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மும்பை, புனே என்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல இடங்களில் மட்டுமன்றி தமிழகம் உள்பட பல மாநிலங்களை அவர் கண்காணித்ததாகவும் அறியப்படுகின்றன.

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் பற்றிய தகவல் சேகரிப்பது மிகவும் கடினம். சாதாரணமாக நுண்ணறிவுப் பிரிவுகளில் ஒவ்வோர் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குழு அமைத்துக் கண்காணித்து தகவல் சேகரிப்பது என்பது வெளிப்படையான தகவல் சேகரிக்கும் முறை.

ரகசியமாக உளவாளிகள் மூலம் தகவல் சேகரிப்பது இரண்டாவது வகை.

தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புச் சாதனங்களை உபயோகித்து தகவல் சேகரிப்பது மற்றொரு வகை.

செய்தித்தாள்கள், இணையதளம், தொலைக்காட்சி மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலமாக வரக்கூடிய செய்திகள், நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் அறிக்கைகள் இவற்றை ஆராய்ந்து நடக்கப்போவதை அனுமானித்துச் சொல்வது பயிற்சி பெற்ற நுண்ணறிவு அதிகாரிகளுக்கு கைவந்த கலை. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பது நுண்ணறிவுப் பிரிவின் மேல்மட்ட அதிகாரிகளின் பணி.

மே நான்காம் தேதி ஃபாய்ஸல் ஷாசாத் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நியூயார்க் நகரின் டைம் சதுக்கம் என்ற பிரசித்தி பெற்ற பொருளாதார மைய சாலையில் காரில் குண்டு வைத்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவுக்கு நல்லகாலம். குண்டு வெடிப்பதற்கு நிறுத்தி வைத்திருந்த காரிலிருந்து வந்த புகையைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வாகனத்தைக் கைப்பற்றி, வைக்கப்பட்ட குண்டை செயலிழக்கச் செய்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து புகை வந்ததை முதலில் பார்த்தவர் லான்ஸ் ஆர்டன் என்ற தெருவில் துணி விற்கும் நடைபாதை வியாபாரி. அவர் உடனே ரோந்து சென்று கொண்டிருந்த வேய்ன் ராடிகன் என்பவருக்குத் தகவல் கொடுத்தார். அந்த ரோந்து அதிகாரி தகவலை அலட்சியம் செய்யாமல் உடனடியாகக் களத்தில் இறங்கி அந்த இடத்தில் இருந்தவர்களை முதலில் வெளியேற்றினார். பதறிப்போய் தலைமையிடத்துக்குத் தகவல் கொடுத்து அதிரடிப்படை ஒன்றும் வரவழைக்கவில்லை. நிதானமாக அந்த நேரத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் ரோந்துப் பணியில் இருந்த அலுவலர்களை வைத்துப் பாதுகாப்பு சிறந்த வகையில் செய்யப்பட்டது. இது நிகழ்ந்தது சனிக்கிழமை. இரண்டு நாள்களுக்குள் அந்த வண்டியின் உரிமையாளர் பற்றியும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை வைத்தும் சந்தேக நபர் ஷாசாத்தை போலீஸôர் கைது செய்ய முடிந்தது. அவர் நியூயார்க்குக்கு அருகில் உள்ள கனெக்டிகட்டில் கம்யூட்டர் என்ஜினியர். துபாய்க்குத் தப்ப இருந்தவரை, விமானத்திலிருந்து இறக்கியது, மின்னல் வேகப் புலனாய்வின் முதல் வெற்றி.

லான்ஸ் ஆர்டன் கடமையுணர்வோடு செயல்பட்ட நாள் மே 2-ம் தேதி சனிக்கிழமை. இரண்டு நாள்கள் கழித்து அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. ஆர்டனின் கடமையுணர்வையும், உரிய சமயத்தில் தகவல் கொடுத்ததையும் ஒபாமா வெகுவாகப் பாராட்டினார் என்ற செய்தி பரவியது. சாதாரண தெரு வியாபாரி, மக்களின் பாராட்டைப் பெற்ற நாயகனானார். அதிபர் நேரில் பாராட்டியது, ஒரு பேராபத்திலிருந்து பொருளாதார தலைநகர் காப்பாற்றப்பட்டது, நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டது என்பதற்காக மட்டுமல்ல, ஆர்டன்போல் பொதுமக்களும் கடமையுணர்வோடும், விழிப்புணர்வோடும் இருந்தால்தான் தீவிரவாதத்தை முறியடிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

எந்த ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டாலும் அதை நிறைவேற்றுவதற்கு உள்ளூர்வாசிகளின் உதவி இன்றியமையாதது. ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலின் புலன் விசாரணையில் சம்பவம் நடந்த இடத்தில் உடந்தையாக இருந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் கைது செய்யப்பட்டபின் இவர்களா அப்படி சூழ்ச்சி செய்தார்கள் என்று மலைக்கும்படியும் இருக்கும்.

தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு பயங்கரங்களை நிகழ்த்தத் திட்டமிடுகிறார்களோ அங்கு "ஸ்லீப்பர் செல்' என்று ஒரு சிலரைக் கொண்ட கமுக்கக் குழாம் ஒன்றை அமைப்பார்கள். இவர்கள் மூலமாகத் தகவல் பெற்று சதித் திட்டத்தை நிறைவேற்றுவார்கள். இத்தகைய கமுக்கக் குழாம் பற்றித் தகவல் சேகரிப்பது காவல்துறைக்கு ஒரு சவால் எனலாம்.

மும்பை குண்டு வெடிப்பு சதியில் உதவிய இரண்டு குற்றவாளிகளிடமிருந்து தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம், மருத்துவமனை, லியோபால்ட் சிற்றுண்டி விடுதி இவற்றின் வரைபடம் கைப்பற்றப்பட்டது.

ஸ்லீப்பர் செல் எனப்படும் கமுக்கக் குழாமைச் சேர்ந்த இவர்கள் கச்சிதமாகத் தகவல் சேகரித்திருக்கிறார்கள். இவ்வாறு தகவல் சேகரிப்பது, முக்கிய இடங்களை நோட்டமிடுவது, பாதுகாப்பு வளையங்களைச் சோதித்துப் பார்ப்பது, வெடிபொருள்கள், ஆயுதங்கள் சேகரித்தல், தாக்குதலுக்குக் குறிவைத்த இடத்துக்கு வெள்ளோட்டம் விடுவது, இறுதியாக, தாக்குவதற்குத் தயார் நிலையில் இருத்தல் இந்த ஆறு ஆயத்த ஏற்பாடுகள் இன்றி தீவிரவாதத் திட்டம் நிறைவேறாது. இந்த ஆறு கட்ட நடவடிக்கையில் ஏதாவது ஒன்றை இனம் கண்டால் பாதுகாப்புப் படை வெற்றி கண்டு விடும். சந்தேக நபர் சம்பந்தப்படாத இடத்தில் நடமாடுவதை விழிப்போடு கண்காணித்தாலே போதும்.

தீவிரவாதி பலமுறை தோற்கலாம். ஒருமுறை வென்றால் போதும். ஆனால், பாதுகாப்புப் படை ஒவ்வொரு முறையும் வெல்ல வேண்டும் என்ற சாத்திரம் இந்தப் பாதுகாப்புப் பணியின் சாபக்கேடு.

காவல்துறை இந்தப் போரில் முந்த வேண்டும் என்றால் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தில்லி பாட்லா பகுதியில் செப்டம்பர் 19, 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தில்லி போலீஸ் ஆய்வாளர் ஷர்மா உயிரிழந்தார். பாட்லா பகுதி வீட்டை காவல்துறை முற்றுகையிட்ட பின்னர்தான் அங்கு தீவிரவாதிகள் தங்கியிருந்தனர் என்பது அக்கம்பக்கத்தவருக்குத் தெரிய வந்தது. அதற்குப்பிறகு தான் அங்கிருந்தவர்களில் சந்தேக நடவடிக்கை பற்றி மக்கள் கூற ஆரம்பித்தனர். முன்னமே தகவல் கொடுத்திருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இம்மாதிரியான நேர்வுகளில்தான் காவல்துறையின் அணுகுமுறையில் நூதனம் தேவை. எடுத்த எடுப்பிலேயே எங்கே, யார், எவர், எப்படி, எவ்வாறு என்று கேள்விகளை அடுக்கினால் மட்டும் போதாது. முதலில் நம்மிடம் உள்ள வெளிப்படையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். வெறியர்களின் தாக்குதலில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள். தீவிரவாதிகள் எந்தப் பொது இடத்தைத் தாக்குவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. சமுதாயத்தின் சமநிலையைக் குலையச்செய்வதுதான் பயங்கரவாதிகளின் நோக்கம்.

இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் என்ற விகார யுத்தத்தில் பொதுமக்கள் முக்கிய பங்குதாரர்கள் என்பதை மறக்கலாகாது. பொதுவாக சமுதாயத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளான சுகாதாரம், தொற்று நோய், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, ஹெச்ஐவி போன்றவற்றுக்குப் பல விழிப்புணர்வு முகாம்களும், பேரணிகளும் மக்களை ஈடுபடுத்தி நடத்தப்படுகின்றன.

அதேவகையில், பொதுமக்களும் தெரிந்தோ தெரியாமலோ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களுக்கு உதவக் கூடாது என்பதைத் தெளிவாக உணர்த்த வேண்டும். நமக்கேன் வம்பு என்று தகவல் கொடுக்காமல் ஒதுங்குவதும் ஒரு வகையான மறைமுக உடந்தை என்பதை மறுக்க முடியாது.

தீவிரவாதம் ஒரு வழிப்பாதை. அதில் உழலும் வெறியர்கள் திரும்ப வழியில்லை. ஆனால் அவர்கள் பிடியில் வழியில்லாமல் சிக்கியவர்கள் திருந்த வழியுண்டு. காவல்துறையின் பாரபட்சமற்ற நேர்மையான துணிவான நடவடிக்கையும் பொதுமக்களின் ஈடுபாடும்தான் அதற்கு வழி வகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கியக் கொள்கைகள்

மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர்!

இன்டர் மிலனுக்கு அதிர்ச்சி..! முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய நார்வே கிளப்!

சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை: காரணம்?

வரப்பெற்றோம் (23-02-2026)

SCROLL FOR NEXT