அண்ணாமலைப் பல்கலை. 80-வது பட்டமளிப்பு விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 80-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பட்டமளிப்பு விழா மண்டபமான சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலை.வேந்தரும், தமிழக ஆளுநருமான கே.ரோசய்யா பங்கேற்று 2011-12 கல்வியாண்டில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், பல்வேறு அறக்கட்டளை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 80-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பட்டமளிப்பு விழா மண்டபமான சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலை.வேந்தரும், தமிழக ஆளுநருமான கே.ரோசய்யா பங்கேற்று 2011-12 கல்வியாண்டில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் நேரடியாக 820 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மையில் தேர்ச்சி பெற்ற 160 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை சார்பில் தங்க பதக்கம் உள்ளிட்ட ரொக்கப் பரிசுகளையும் ஆளுநர் வழங்கினார். மேலும் ஆராய்ச்சி பட்டமான பிஹெச்டி 350 பேருக்கும், எம்ஃபில் பட்டம் 20 பேருக்கும் வழங்கப்பட்டது. நேரடி சேர்க்கை மூலம் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள் 11,164 பேருக்கும், தொலைதூரக்கல்வி மையத்தின் மூலம் பட்டம் பெறும் மாணவர்கள் 1,02,977 பேருக்கும் தபால் மூலம் பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. விழாவில் புதுதில்லி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார். விழாவில் இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி பங்கேற்றார்.
துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பல்கலைக்கழக ஆண்டறிக்கையை படித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ரூ.50 ஆயிரத்திற்கு அறக்கட்டளை ஒன்றும் இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி நிறுவியுள்ளதாக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் அறிவித்தார். மேலும் பல்கலைக்கழகத்திற்கு அக்.5-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டதாக துணைவேந்தர் தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ, பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், செட்டிநாடு வித்தியாஷ்ரமம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குமாரராணி மீனாமுத்தையா, ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி, சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.கே.சிவக்குமார், ஏ.சம்பந்தம், டி.ராஜவன்னியன், டாக்டர் ஆர்.முத்துக்குமரன், முன்ளாள் நகரமன்றத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆளுநருக்கு வரவேற்பு: முன்னதாக ஆளுநர் கே.ரோசய்யா புதுச்சேரியிலிருந்து கார் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகருக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வருகை தந்தார். அவரை இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ, விழுப்புரம் சரக டிஐஜி சண்முகவேல், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் பகலவன், சிதம்பரம் நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் கீதாகலியமூர்த்தி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நடராஜர் கோயிலில் ஆளுநர்: காலை 11 மணிக்கு ஆளுநர் கே.ரோசய்யா, மனைவி சிவலட்சுமியுடன் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு கோயில் பொதுதீட்சிதர்கள் மேளதானத்துடன் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றி கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். சித்சபை மீது ஏறி இருவரும் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியை தரிசனம் செய்தனர். கோயில் பொதுதீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதானை செய்து பொன்னாடை அணிவித்து பிராசதங்களை வழங்கினர். பின்னர் இருவரும் ஸ்ரீதில்லைகோவிந்தராஜன் பெருமான் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் ஆளுநர் கே.ரோசய்யா பட்டமளிப்பு விழா மண்டபத்திற்கு சென்று விழாவில் பங்கேற்று துணைவேந்தர் விடுதிக்கு சென்றார். அங்கு மதியஉணவு சாப்பிட்டு ஓய்வெடுத்த பின்னர் மதியம் 4 மணிக்கு கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.