மவுசு குறைந்தது: 19 கல்லூரிகளில் கைவிடப்பட்ட ஐ.டி. படிப்பு
தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு மதிப்பு குறைந்து வருவதால் 2013-14 கல்வியாண்டில் 19 கல்லூரிகளில் பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பு கைவிடப்பட்டது.
தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு மதிப்பு குறைந்து வருவதால் 2013-14 கல்வியாண்டில் 19 கல்லூரிகளில் பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பு கைவிடப்பட்டது.
இதுபோல 2014-15 கல்வியாண்டில் இந்தப் படிப்பை கைவிட மேலும் 5 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
ஆள்குறைப்பு, ஊதிய குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் எதிரொலியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
Advertisement
அதே நேரம் பி.இ. மெக்கானிக்கல், சிவில் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நடந்து முடிந்த 2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் இசிஇ பிரிவில் அரசு ஒதுக்கீடான 42,966 இடங்களில் 24,992 இடங்கள் மட்டுமே நிரம்பின. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 33,505 இடங்களில் 15,684 இடங்கள் நிரம்பின. பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) துறையில் மொத்தமுள்ள 16,466 இடங்களில் 6,705 இடங்கள் மட்டுமே நிரம்பின. பி.டெக். தகவல் தொழில்நுட்பம் படிப்பில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து பல கல்லூரிகள் இந்த துறையை இழுத்து மூடி வருகின்றன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
2013-14 கல்வியாண்டில் பி.டெக். தகவல் தொழில்நுட்பப் படிப்பை 19 கல்லூரிகள் கைவிட்டுள்ளன. மேலும் 8 கல்லூரிகள் இந்தத் துறையில் மாணவர் எண்ணிக்கையை குறைத்து கொண்டன. அதாவது மாணவர் எண்ணிக்கை 120 என்பதை 60-ஆகக் குறைத்துக் கொண்டன. இதுபோல் கம்ப்யூட்டர் சயின்ஸ் (சிஎஸ்சி) படிப்பில் 6 கல்லூரிகள் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்துக் கொண்டன.
எம்.சி.ஏ. படிப்பை 16 கல்லூரிகள் கைவிட்டன. 3 கல்லூரிகள் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்துக் கொண்டன.
இதுபோல், 2014-15 கல்வியாண்டில் பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பை கைவிடுவதற்கு இதுவரை 5 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. இந்தத் துறையில் மாணவர் எண்ணிக்கையைக் குறைக்க 4 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள 6 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. இதுபோல் எம்.சி.ஏ. படிப்பில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள இதுவரை 3 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பேராசிரியர் பணி நீக்கம் கூடாது: கல்லூரிகள் இதுபோல் படிப்புகளை இழுத்து மூடுவது மற்றும் மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் காரணமாக, பேராசிரியர் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளக் கூடாது.
அவர்களை வேறு துறைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு படிப்படியாகத்தான் பேராசிரியர் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இதுபோன்று ஒரு சில துறைகளில் மாணவர் குறைப்பு செய்யும் கல்லூரிகள், வேறு சில துறைகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள விண்ணப்பிப்பர்.
இதுபோன்று எண்ணிக்கை அதிகரிக்கும் துறைகளில் கூடுதல் பேராசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து அனைத்துக் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.