கல்வி

குறைந்தபட்ச இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகள்: அரசாணை வெளியீடு

DIN

தமிழகத்தில் குறைந்தபட்ச இடவசதி இல்லாத 746 தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.
பள்ளிகளுக்குத் தேவையான உள் கட்டமைப்பு வசதிகள், நிலம் தொடர்பான புதிய விதிமுறைகளை அரசு கடந்த 2004-இல் பிறப்பித்தது. இப்புதிய விதிமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக் பள்ளிகளின் தாற்காலிக அங்கீகாரத்தை கடந்த 2015-இல் அரசு ரத்து செய்தது.
அதில் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகிகள் அரசிடம் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளிகளின் தாற்காலிக அங்கீகாரம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டுடன் அங்கீகாரம் முடிவடைந்த நிலையில் ஓராண்டாக அங்கீகாரமில்லாமல் பள்ளிகள் செயல்படுகின்றன. நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத தனியார் பள்ளிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை:
படிப்படியாகக் குறைக்க வேண்டும்: ஒரு மாணவருக்கான 10 சதுர அடி, ஆசிரியருக்கு 40 சதுர அடி என்ற அடிப்படையில் வகுப்பறைகளின் பரப்பளவுக்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கையை 4 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்க வேண்டும். ஆய்வு அலுவலர்கள் பள்ளியைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்ச இடவசதி பூர்த்தி செய்யப்படாத நிலையில் கூடுதல் வகுப்புகள் புதிதாகத் தொடங்க அனுமதிக்கக் கூடாது.
பள்ளிக் கட்டட உயரம் மற்றும் விளையாட்டு மைதானத்தைப் பொருத்தவரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் உயர்நிலைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ள உப குழுவின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அடிப்படை வசதிகள்: 50 குழந்தைகளுக்கு ஒரு கழிப்பிடம், 20 குழந்தைகளுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம், 20 குழந்தைகளுக்கு ஒரு கை கழுவும் குழாய், 20 குழந்தைகளுக்கு ஒரு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்கப்பட வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளாக இருந்தால் போதுமான அளவு நூலகம், ஆய்வகம், விளையாட்டு வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். நடப்பில் உள்ள விதிகளின்படி கட்டட உரிமச் சான்று, கட்டட உறுதிச்சான்று, சுகாதாரச் சான்று உள்ளிட்ட சான்றுகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம்பெயரக் கூடாது என்ற அடிப்படையில் அந்தப் பள்ளிகளை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை பள்ளிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT