கல்வி

கல்வி நிலையங்களில் சகிப்பின்மைக்கு இடமில்லை: பிரணாப் முகர்ஜி

DIN

கல்வி நிலையங்களில் சகிப்பின்மை, பாரபட்சம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை; கல்வி நிலையங்கள் பல தரப்பு கருத்துகள் உடனிருக்கும் இடமாகத் திகழ வேண்டும்'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மும்பை பல்கலைக்கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்டு சுவாமிநாதனை கெளரவித்த பிறகு, பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
தேசிய வளர்ச்சிக்கான முயற்சிகளில் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே, குறுகிய மனப்பான்மை, சிந்தனைகள் ஆகியவற்றை கைவிட்டு, விசாலமான உரையாடல்கள், விவாதங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
அணிவகுப்பில் தங்களது படைப் பிரிவை அடையாளப்படுத்தும் கொடியுடன் பல்வேறு படைப்பிரிவினர் இணைந்து வருவதைப் போல, பல்வேறு கருத்துகள், சிந்தனைகள், தத்துவங்கள் ஆகியவை உடனிருக்கும் இடமாக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும். நமது கல்வி நிலையங்களில் சகிப்பின்மை, பாரபட்சம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை.
இந்தியா வெறும் புவியியல் அடையாளமாக மட்டுமின்றி, ஒரு சிந்தனை, ஒரு கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலித்தது. உரையாடல்களும், விவாதங்களும் நமது வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தன. அவற்றை அப்படியே விட்டுவிட முடியாது. நமது பழைமையான இந்தியா, மிகப்பெரிய அளவிலான தத்துவ விவாதங்களுக்குப் பெயர் பெற்றதாகும். பல தரப்பட்ட கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கு பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிலையங்களும் மிகச் சரியானதொரு மேடையாகும்.
மேலும், கல்வி நிலையங்கள் பொருளாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியின் தரமே, பொருளாதாரத் துறையின் வலிமையைத் தீர்மானிக்கிறது.
எனவே, தொழில் துறையின் தேவைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒரு சிறந்த கல்வி முறை என்பது, மாணவர்களை சமூகப் பொறுப்பு மிக்கவர்களாக மாற்றுவதற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். எனவே, மாணவர்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.
நிகழ்ச்சியில் மும்பை பல்கலைக்கழகத்தின் 160-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
’ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதே சிறந்தது'
ஆட்சியில் இருப்பவர்கள், ஒருமித்த கருத்துகளின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும் என்று பிணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது:
நாடாளுமன்ற ஜனநாயகத்தில், பெரும்பான்மைவாதத்துக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், எல்லா நேரத்திலும் அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கும் இடம் கொடுத்து நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று பிரதமர் மோடி பணிவோடு கூறினார். அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் பிரணாப் முகர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT