தமிழ்நாட்டில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கொற்கை, பொற்பனைக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வரலாறு, தொல்லியல், பண்பாடு போன்ற படிப்புகளுக்கு மாணவர்களிடையே ஆர்வம் மேலோங்கியுள்ளது. இத்துறையை நோக்கி வரும் மாணவர்களின் வருகையும் சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு அடுத்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தான் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்பு உள்ளது.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் கூறியதாவது:
அண்மைக் காலமாகத் தொல்லியல் ஆய்வுகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தொல்லியல் வழியாக தமிழர்களின் பண்டைய வரலாறு வெளிப்பட்டுள்ளது. கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கொற்கை அகழாய்வுகள் தமிழர்களின் பண்பாட்டு நிலைகளையும், சங்க கால நகரமயமாக்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றன. அண்மைக்காலமாக மரபு மேலாண்மையில் அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொல்லியல், கல்வெட்டியல் படிப்புகளில் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் பல தொல்லியல் இடங்களையும், கல்வெட்டுகளையும் கண்டுபிடித்துள்ளனர். வல்லம், கொடுமணல், தாண்டிக்குடி, பெரியப்பட்டினம், நாகப்பட்டினம், அம்பல், நாங்கூர், பிள்ளையார்பட்டி, மந்திரிப்பட்டினம், மோளப்பாளையம் போன்ற தொல்லியல் இடங்கள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் சார்ந்த படிப்புகள் உள்ளன. புதிய கல்வெட்டுகளைக் கண்டுபிடிப்பது, கல்வெட்டுகளை ஆவணப்படுத்துவது, அவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவும், மாணவர்கள், ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்காகவும் வெளியிடுவது, தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத தொல்லியல் சார்ந்த இடங்களைக் கண்டுபிடித்து, அங்கு முறையான அகழாய்வுகள் மேற்கொள்வது, ஆய்வுகள் செய்வது போன்றவையே இப்படிப்பின் நோக்கம்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால முதுகலை வரலாறு (எம்.ஏ.) என்ற பட்டப்படிப்பும், கல்வெட்டியல் என்கிற ஓராண்டு கால முதுநிலை பட்டயப்படிப்பும், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையில் வரலாறு மற்றும் தொல்லியல் என்கிற 2 ஆண்டுகால பட்டப்படிப்பும் உள்ளன.
இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, இந்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத் துறை, அருங்காட்சியகவியல் ஆகிய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இவர்கள் தொல்லியல் ஆய்வாளர், கல்வெட்டியல் ஆய்வாளர், அருங்காட்சியகவியலாளர் போன்ற பணிகளில் சேர முடியும்.
மேலும் மாணவர்கள் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (யு.ஜி.சி.) ஜே.ஆர்.எப். தேர்வை எழுதினால் முனைவர் பட்டம் படிக்க உதவித்தொகை கிடைக்கும். முனைவர் பட்டம் பெற்று உதவிப்பேராசிரியர்களாகச் சேரும் வாய்ப்பும் உள்ளது.
மாணவர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, இந்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத் துறை நடத்தும் பட்டயப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அரசுத் துறை தேர்வுகளையும் எழுதி வேறு துறையில் பணி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தொல்லியல் படிப்பில் பல வல்லுனர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், கற்கருவித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிலரங்கங்கள் வழியாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கள ஆய்வு, அகழாய்வுப் பயிற்சியும், செய்முறைப் பயிற்சியும், ஆய்வேடு எழுதுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரசுத் தேர்வுக்கான பயிற்சியும், அரசு உதவித் தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வுகளுக்கும் மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். மேலும், மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, தலைமைப் பண்பு திறன், ஆய்வுத் திறன் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுகின்றன என்றார் பன்னீர்செல்வம்.
-வி.என்.ராகவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.