பொறியியல் துறை 
படிப்புகள்

புத்துலகைக் கட்டமைக்கும் பொறியியல் கல்வி

புத்துலகைக் கட்டமைக்கும் பொறியியல் கல்வி பற்றிய விரிவான தொகுப்பு

க. தங்கராஜா

பொறியியல் இல்லாத ஒரு உலகத்தை நம்மால் கற்பனை செய்ய முடியாது. இன்றைய உலகம் இயங்குவதற்கு நாம் பொறியியலை எந்த அளவுக்கு நம்பியிருக்கிறோம் என்பதும் இதற்காக எத்தனை வகையான பொறியியலாளர்கள் எந்தெந்த காலகட்டங்களில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.

பொறியியல் துறை உலகின் மிகப் பழமையான ஒன்றாகும், இது நாகரிகத்தைப் போலவே பழமையானது. பொறியியல் இல்லாத உலகம் மனிதநேயமற்ற உலகமாகவே இருந்திருக்கும். நமது கட்டடங்கள், சாலைகள், வாகனங்கள், தொழில்நுட்பங்கள்தான் நம்மை மனிதர்களாக ஆக்குகின்றன. சக்கரம், நெம்புகோல், கப்பி, திருகு, சாய்தளம் ஆகியவையே இயந்திரங்களின் அடிப்படைகள். இவற்றை உருவாக்கியவர்களே முதல் பொறியியலாளர்கள். எகிப்திய பிரமிடுகள், சிந்து சமவெளி நகரங்கள், தஞ்சை பெரிய கோயில் போன்றவற்றை அன்றைய பொறியியல் அதிசயங்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இன்று நாம் நாகரிகமான இயந்திர உலகத்தில் வாழுகிறோம். மனிதர்கள் பலர் பல நாள்கள் செய்ய வேண்டிய வேலையை ஒற்றை இயந்திரம் உடனடியாக செய்து கொடுக்கிறது. கணிதம், இயற்பியல் சூத்திரங்கள், மின்சாரம் போன்றவை கணினி முதல், போக்குவரத்து வாகனங்கள், எதிர்காலத்துக்கான கருவிகள் வரை அனைத்தையும் வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றன. பொறியியல் நமக்கான கற்கருவி தொடங்கி அதிநவீன ஆயுதங்கள் வரை, மனித நாகரிகத்தில் தொடங்கி இன்றைய அன்றாட வாழ்க்கை வரை ஒவ்வொரு அம்சத்தையும் உருவாக்கியுள்ளது.

பழமையான பொறியியல் துறையான சிவில் இன்ஜினியரிங் இல்லாமல் இன்றைய துபையின் புர்ஜ் கலிஃபாவோ, மலேசியாவின் பெட்ரோனஸ் கோபுரங்கள் மட்டுமல்ல காண்பதற்கு அழகான கட்டடங்கள், பாலங்கள், உலகின் 7 அதிசயங்கள் போன்ற கட்டுமானங்கள் இல்லை. அதேபோல், இன்று நம் வாழ்வில் இணைந்துவிட்ட கைப்பேசி, கணினி, வேளாண் தொழிலுக்கு உதவிடும் டிராக்டர் முதலான கருவிகள், அதிநவீன வாகனங்கள், மின்சார வாகனங்கள், கணினிகள், வாழ்க்கையை எளிதாக்கும் இன்னும் பல கண்டுபிடிப்புகள், கருவிகள் யாவும் பொறியியலின் பல்வேறு துறைகளால் உருவானவையே.

பொறியியல் கல்வி புதுமையான பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கான தளத்தை உருவாக்குவதாகவும், புதிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகளை உருவாக்குவதாகவும் இருக்கிறது. மேலும், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சுகாதாரம் போன்ற துறைகளில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதாலும், அதன் மூலம் சமூகத்தின் தரம் மேம்படுவதாலும் எப்போதும் வரவேற்புக்குரிய துறையாகவும், அதிக வேலைவாய்ப்பையும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக் கூடியதாகவும் உள்ளது.

அடுத்த தலைமுறையானது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) போன்ற துறைகளைச் சார்ந்தே இருக்கும் என்பதால் இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் பொறியியல் கல்வியானது மாணவர்களையும் பெற்றோர்களையும் ஈர்க்கும் துறையாகவே தொடர்ந்து வருகிறது. உலகில் அவ்வப்போது நடைபெறும் சமூக, பொருளாதார மாற்றங்களால் ஏதாவது ஒரு பொறியியல் துறை வீழ்ச்சியைச் சந்தித்தாலும், இன்னொரு துறை ஏற்றம் கண்டிருப்பது வரலாறு.

1794 -இல் கிண்டி பொறியியல் கல்வி நிறுவனத்தில் தொடங்கிய இந்தியாவின் பொறியியல் கல்வி, இன்று தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக பல்கிப் பெருகி, அவற்றில் பயின்று உலகம் முழுக்கச் சென்ற மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அளவுக்கும், பல நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் அளவுக்கும் பங்களிப்பை வழங்கக் கூடியவர்களாக திகழுகிறது.

இன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள், தரவு அறிவியல், ரோபோக்கள், சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. அத்துடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நிலைத்தன்மை, பசுமை கட்டடம் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்மார்ட் நகரங்கள், அதிநவீன போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்குவது போன்றவற்றுக்கான தேவைகளும் காலத்தின் கட்டாயத்தால் உருவாகி வருகின்றன.

இந்தத் தேவைகளை பூர்த்தி செய்யும் இடத்தில் இந்தியாவின் மக்கள் தொகை உள்ளது. இந்திய மாணவர்கள் தங்களின் திறமையைப் பயன்படுத்தி புத்துலகைக் கட்டமைப்பதற்கான தங்களின் பங்களிப்பைச் செய்யும் ஆவலில் உள்ளனர். அதற்கேற்ப இந்திய அரசு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, பொறியியல் துறையின் சிறப்பு மையமாக தன்னை நிலைநிறுத்தி வரும் நிலையில், அடுத்த தலைமுறையை ஆக்கப்பூர்வமானதாகவும், நிலையான எதிர்கால வளர்ச்சியை வழிநடத்தக் கூடியதாகவும், அதன் மூலம் உலகிற்கு தலைமை தாங்கவல்லதாகவும் நாட்டை மாற்றக்கூடிய வல்லமையைப் பெற்ற ஒரு கருவியாகவும் பொறியியல் கல்வி உள்ளது.

இந்த கட்டுரைத் தொகுப்பில் பொறியியல் கல்வியின் ஒவ்வொரு பிரிவின் முக்கியத்துவத்தையும், அவற்றுக்கான எதிர்காலம் என்ன, வேலைவாய்ப்புகள் எங்குள்ளன என்பது போன்ற தகவல்களையும் விரிவாகக் காண்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம்!

இந்தியாவில் டி20 விளையாட மறுத்தால் வங்கதேசம் மீது கடும் நடவடிக்கை?

தொடரும் கரடிகளின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 770 புள்ளிகளுடன், நிஃப்டி 241 புள்ளிகளுடன் நிறைவு!

தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி உதவி: பிரதமர் மோடி!

59 வயதா? நதியா புகைப்படங்களுக்குக் குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT