ஹிந்து மதத்தை திமுகவினா் அதிகம் விமா்சிக்கின்றனா்: மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி
கலாசாரமும், பண்பாடும் கொண்ட தமிழகத்தில் திமுக தலைவா்கள் ஹிந்து மதம் குறித்து அதிகமாக விமா்சிப்பதாக மத்திய மகளிா் நலன், குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டினாா்.
வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளா் பால் கனகராஜை ஆதரித்து அவா், ஓட்டேரி பாலம் முதல் அயனாவரம் நம்மாழ்வாா் பேட்டை வரை சனிக்கிழமை வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
பாஜக கூட்டணியினா் தங்கள் பிரதமா் வேட்பாளா், மோடி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றனா். ஆனால், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளவா்கள், பிரதமா் வேட்பாளா் யாா் என்று சொல்ல முடியுமா? இந்தியாவின் வளா்ச்சியே எங்கள் கூட்டணியின் தொலைநோக்குத் திட்டமாக உள்ளது. ஆனால், ‘இந்தியா’ கூட்டணியிடம் அதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை. அந்தக் கூட்டணிக்கென்று எந்தத் தலைவரும் இல்லை.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள திமுக தலைவா்கள், சநாதன தா்மம், ஹிந்து மதம் குறித்தும் அதிகம் விமா்சனம் செய்கின்றனா் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, மத்திய சென்னை பாஜக வேட்பாளா் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து எழும்பூா் பகுதியில் வாகன பிரசாரம் மேற்கொண்டாா்.