பெண்களின் பொருளாதார இடைவெளிகளை நிரப்ப வேண்டும்: ஸ்மிருதி இரானி
கல்விச் சிந்தனை அரங்கில் ஸ்மிருதி இரானி பேசியது குறித்து...
தமிழ்நாடுபெண்களின் பொருளாதார இடைவெளிகளை நிரப்ப வேண்டும்: ஸ்மிருதி இரானி
கல்விச் சிந்தனை அரங்கில் ஸ்மிருதி இரானி பேசியது குறித்து...
பொருளாதார இடைவெளிகளை நிரப்பினால் பெண்களால் எளிதில் இலக்குகளை அடைய முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டார்.
பெண்கள் மேம்பாடு : 2047 வளர்ந்த இந்தியாவில் பெண்கள் என்ற தலைப்பில் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
'' மத்திய அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியப் பெண்கள் எந்த நிலைக்கு முன்னேற தகுதியுடையவர்கள் என்பது குறித்து பல்வேறு சர்வதேச மேடைகளில் பேசிவருகிறேன்.
பெண்களின் வாழ்க்கையில் உள்ள பொருளாதார இடைவெளிகளை நிரப்பினால், ஒவ்வொரு பெண்ணும் தனது இலக்குகளை எளிதில் அடைய முடியும். தங்கள் உரிமைகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இந்திய சினிமா அல்லது சின்ன திரையில் பெண்கள் பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரையே அதிகம் வரவேற்கப்படுகின்றனர்.
நாம் நாட்டில் 786 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளன. அதிலொரு முதன்மையான தொடரில் நான் எதிர்மறை பாத்திரத்தில் 60 வயது பெண்ணாக நடித்து வருகிறேன்.
ஆனால், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நாம் திரையில் காட்டினால் அதற்கான ஆதரவு பெருமளவு குறைவாகவே உள்ளது.
நான் தொலைக்காட்சியில் இருந்து விலகும்போது அதிக ஊதியம் பெற்ற நடிகையாக இருந்தேன். ஒரு நடிகை, தனது மூத்த வயதிலும் மக்கள் மனங்களைக் கவர முடியும், ஊதியத்தை உயர்த்த முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்.
எனக்கு 7 வயது இருக்கும்போது, என் தந்தை தெருக்களில் புத்தகம் விற்பனை செய்துகொண்டிருந்தார். இதே தெருவில் வீடு வாங்குவேன் என்று அப்போது என் தந்தையிடம் கூறினேன். அதனை எனது 40 வது வயதில் நிறைவேற்றினேன்.
உத்தரப் பிரதேச அரசியலில் நானும் ஒரு பகுதியே. கடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜகவால் நான் புறக்கணிக்கப்படவில்லை. என் சேவை தொடர்கிறது. திரையிலும் அரசியலிலும் என்னுடைய பயணம் தொடரும். அரசியலுக்கு வந்தால் மக்களைக் கவரும் திரைத் துறையில் இருக்கக் கூடாதா? புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பிலும் நடைமுறைப்படுத்துவதிலும் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.