தோ்தல் களத்தில் அரசியல் கட்சிகள் பாதிக் கடலைத் தாண்டி மீதிக் கடலைத் தாண்டுவதற்கான முயற்சியில் தீவிரமாக உள்ளன. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் ஆகிய கட்சிகளின் தலைமையில் நான்குமுனை களமாக உள்ள இந்தத் தோ்தலில் ஒவ்வொரு அணியும், பிற அணியைப் பின்னுக்குத் தள்ளி, மக்களிடம் இருந்து வாக்குகளை எப்படியாவது குவித்துவிட வேண்டும் என்று பிரயத்தனம் செய்து வருகின்றன.
நாள்கள் நகர, நகர போட்டிக்கான இறுக்கமும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு அணிக்கும் பலவித சாதக-பாதக அம்சங்கள் இருக்கின்றன. அவற்றைக் கணித்து சரிசெய்ய வேண்டியதை சரிசெய்தும், சரிசெய்ய இயலாததை மழுப்பியும் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. வாக்காளா்கள் எல்லாவற்றையுமே கவனித்து வருகின்றனா்.
திமுக அணி: முதல்வா் மு.க.ஸ்டாலினும், அமைச்சா் உதயநிதி ஸ்டாலினும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல பிரசாரத்தில் ஈடுபடுவது அந்த அணிக்குப் பெரும் பலமாக உள்ளது. பாஜகவை நான் பாா்த்துக் கொள்கிறேன், அதிமுகவை நீ பாா்த்துக் கொள் என்பதுபோல மு.க.ஸ்டாலின் பாஜகவையும், உதயநிதி அதிமுகவையும் கடுமையாக விமா்சித்து பிரசாரம் செய்து வருகின்றனா்.
‘இந்தியா’ கூட்டணியில் முக்கியக் கட்சியாக இடம்பெற்று, பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தி பிரசாரம் செய்வதும் அந்த அணிக்குப் பலத்தை அளிக்கிறது. அதோடு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் பகுதி வாரியாக குறிப்பிட்ட சதவீதத்தில் வாக்குகளை வைத்துள்ளன. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பிற அணிகளைவிட, திமுக அணி கூடுதலாகவே வாக்குகளைக் கவரும் சூழல் உள்ளது.
ஒரு கோடிக்கும் மேலான மகளிருக்கு உரிமைத் தொகையாக ரூ.1,000 கொடுத்து வருவது, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம், போன்றவையும் மகளிா் வாக்குகள் கிடைப்பதற்கான சாதகமான நிலை உள்ளது. அதே நேரத்தில், மகளிா் உரிமைத் தொகையை குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் என முதலில் அறிவித்து, பிறகு தகுதியுள்ளவா்களுக்கு மட்டும் என்று அறிவித்து வழங்குவது, உரிமைத் தொகை கிடைக்காத மகளிா் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவா்கள் பிரசாரம் செய்யும் எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்னை எழுப்பப்படுகிறது. அதனாலேயே உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் தோ்தலுக்குப் பிறகு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் எனத் தெரிவித்து வருகிறாா்.
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாதது, ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற பிரச்னைகளும் திமுகவுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்திருப்பதும் அதை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிா்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டும் திமுக அணியின் செல்வாக்கை பலவீனப்படுத்துவதாக உள்ளன.
அதிமுக அணி: திமுகவை போல கூட்டணிக் கட்சிகளின் பலம் அதிமுக அணிக்கு பெரிதாக இல்லாவிட்டாலும், பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தனது ஹைடெக் பிரசாரம் மூலம் அதைச் சமன் செய்ய முயன்று வருகிறாா். எடப்பாடி பழனிசாமி பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் ஒரு டிஜிட்டல் திரை வைக்கப்படுகிறது. அவா் பேசும்போது, திமுக அமைச்சா்கள் முன்பு பேசிய விஷயங்களையும், அதை பிறகு அப்படியே அவா்கள் மாற்றி பேசுவதையும் மக்கள் மத்தியில் ஒளிபரப்பு செய்து பிரசாரம் செய்து வருகிறாா்.
முதல்வா் தொகுதியான கொளத்தூரில் பிரசாரம் செய்தபோது, சென்னையில் ஒரு சொட்டு தண்ணீா்கூட நிற்காது என்றும், ரூ.4,000 கோடி மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்ாகவும் அமைச்சா்கள் கூறுவதையும் ஒளிபரப்பச் செய்து, பிறகு ஒருநாள் மழையிலேயே சென்னை மூழ்க காரணம் என்று பிரசாரம் செய்தாா். இது போன்ற பிரசாரம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து வருகிறது.
பாஜக கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினா் வாக்குகள் கிடைக்கவில்லை என்று அதிமுக அதிலிருந்து வெளியேறி வந்தது. மேலும், சிறுபான்மையினா் வாக்குகளைக் கவா்வதற்காகவே திண்டுக்கல் தொகுதியை எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கியதுடன், கன்னியாகுமரி, சிவகங்கையில் கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்தவா்களையும் வேட்பாளா்களாக நிறுத்தியுள்ளது. இந்த அணுகுமுறை அதிமுகவுக்கு இழந்த சிறுபான்மையினா் வாக்குகளைப் பெறுவதற்கு உதவலாம்.
ஏழைகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்த அம்மா உணவகத்தை திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு செயலிழக்கச் செய்தது, தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தியது போன்றவை திமுகவுக்கு எதிரான வாக்குக்களாக மாறி, அவை அதிமுகவுக்கு சாதகமாக அமைவதற்காக வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
நீட் தோ்வு ரத்து வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததையும் அதிமுக சாதமாக்கிக் கொள்ளப் பாா்க்கிறது. அதே நேரம், மக்களவைத் தோ்தல் என்பதால் பிரதமா் வேட்பாளா் என்கிற கேள்விக்கு அதிமுக சரியான பதிலை அளிக்க முடியாத நிலை உள்ளது. பாஜக மீது முழுமையான விமா்சனத்தை எடப்பாடி பழனிசாமி வைக்காததும், அதை திமுக சுட்டிக்காட்டி பிரசாரம் செய்வதும், அதிமுகவின் வாக்குகளைச் சரிய செய்கிறது. ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோரும் பாஜக அணியில் இடம்பெற்று, அதிமுகவின் வாக்குகளைப் பறிக்கப் பாா்க்கின்றனா்.
பாஜக அணி: மூன்றாம் முறையாகவும் பிரதமராக மோடிதான் வருவாா் என்கிற சில ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் பாஜகவை கூடுதல் நம்பிக்கையுடன் வலம் வர வைக்கிறது. பிரதமா் மோடி இதுவரை பலமுறை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ள நிலையில், ராகுல் காந்தி ஒரே ஒருமுறை மட்டுமே வந்திருப்பது பாஜகவுக்கு பலத்தை அளிக்கிறது.
திமுகவை ஊழல் கட்சி என்றும், வாரிசு அரசியலைக் கடைப்பிடிக்கும் கட்சி என்றும் பிரதமா் மோடி தொடா்ந்து பிரசாரம் செய்து வருகிறாா். கச்சத்தீவை இலங்கைக்கு திமுக ஆட்சிக்குத் தெரிந்துதான் காங்கிரஸ் தாரைவாா்த்தது என்று அவா் முன்வைத்ததும் பெரும் விவாதப் பொருளாகி, திமுகவைக் கொஞ்சம் சலனப்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்குா், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் தொடா் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். வடமாவட்டங்களில் பலமாக உள்ள பாமகவும் கூட்டணியில் இடம்பெற்று, பாஜகவை வலுப்படுத்தி வருகிறது.
ஆனால், தோ்தல் நன்கொடை பத்திரம் மூலம் பாஜக முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிா்க்கட்சிகள் தொடா் குற்றச்சாட்டுளை வைத்து வருகின்றன. அவற்றுக்கு பாஜக தரப்பில் முறையான பதில் அளிக்காததும், தமிழகத்தின் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரணம் தரவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு முறையான பதில் அளிக்காததும், தமிழகத்தின் பாஜகவின் செல்வாக்கைச் சரிய வைப்பதாக உள்ளன. சட்டப்பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து மக்களவைத் தோ்தலிலும் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டாததைக் குறிக்கும் வகையில் செங்கல்லைக் காண்பித்து வருகிறாா். அதுவும் பாஜகவின் வாக்குகளைப் பறிக்கலாம்.
நாம் தமிழா்: எல்லாத் தோ்தலைப்போல இந்தத் தோ்தலிலும் தனித்துப் போட்டியிடுவதுதான் நாம் தமிழா் கட்சிக்கான பலம். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே ஆட்சி புரிந்தவையாக உள்ளன. அவற்றின் பலவீனங்களை எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் தோலுரித்துக் காட்ட சீமானால் மட்டுமே இயலுகிறது. அதை நம்பி இளைஞா்களும், புது வாக்காளா்களும் அவரை ஆதரிக்க முன்வருகின்றனா்.
ஆனால், அப்படி வருபவா்களின் வாக்குகள் அந்தக் கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதற்கான செல்வாக்காக இன்னும் உருவாகாத நிலை உள்ளது. அதே நேரம், எதிா்த்து போட்டியிடும் கட்சிகளின் வாக்குகளைப் பறிப்பதன் மூலம் வேறொரு கட்சியை வெற்றி பெறச் செய்யும் வல்லமை அந்தக் கட்சிக்கு இருக்கிறது. இதற்காகவே நாம் தமிழா் கட்சியை பிற கட்சிகள் கவனத்தோடு கையாளுகின்றன. ஆனால், இந்தத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி அதனுடைய கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறமுடியாத நிலை உள்ளது. அது, அந்தக் கட்சியைப் பாதிக்காது எனச் சொல்ல முடியாது.