ரூ.4 கோடி பறிமுதல்: நயினாா் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏப். 6-ஆம் தேதி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நாகேந்திரனின் காா் ஓட்டுநா் சதீஷ் மற்றும் உதவியாளா்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடா்பாக விளக்கம் அளிக்க நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.
அதன்படி ஏப்ரல் 22-ஆம் தேதி நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரத்தில் தொடா்புடைய நயினாா் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளா் ராகவன் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.
அவா் தனது மனுவில், ‘தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பிடிபட்டது தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினாா் நாகேந்திரன் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியுள்ளாா்.
இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமா்வு, வழக்கை வியாழக்கிழமை விசாரிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞா், ‘பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றாா்.
இதையடுத்து, சுயேச்சை வேட்பாளா் தொடா்ந்த வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம், பணம் பிடிபட்ட விவகாரத்தில் நயினாா் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.