தேர்தல் செய்திகள்

படிவம் 17சி: தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு தலைவர்கள் கண்டனம்

’எண்ணப்பட்ட வாக்குகளை வெளியிடும்போது, எவ்வளவு பதிவானது என்பதை கூறமுடியாதா?’ -கபில் சிபல்

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய படிவம் 17சி-ஐ பொதுவெளியில் வெளியிடுவது தீங்குக்கு வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

படிவம் 17சி-ஐ பதிவேற்றம் செய்வது சட்டப்படி கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் 48 மணிநேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரத்தை வெளியிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் பதிலளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாவது:

“முதல்கட்டமாக வெளியிடப்படும் வாக்குப் பதிவு விவரங்களும், இரண்டாம் கட்டமாக தபால் வாக்குகளுடன் சேர்த்து வெளியிடப்படும் விவரங்களும் வேறுபடும். இத்தகைய சூழலில் படிவம் 17சி-ஐ பொதுவெளியில் வெளியிட்டால் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

இதை வஞ்சக நோக்கமுடையவர்கள் தேர்தல் நடைமுறை மீது களங்கம் சுமத்த பயன்படுத்திக் கொள்ளக்கூடும், தீங்குக்கு வழிவகுக்கும். வலைதளத்தில் வெளியிடப்பட்டால் போலி பிரதிகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய படிவம் 17சி-ஐ பதிவேற்றம் செய்வது சட்டப்படி கட்டாயம் கிடையாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

“படிவம் 17சி-ஐ பதிவேற்றம் செய்வது சட்டப்படி கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது.

எண்ணப்பட்ட வாக்குகளை வெளியிடும்போது, எவ்வளவு பதிவானது என்பதை ஏன் கூறமுடியாது? இத்தகைய ஆணையத்தை நாங்கள் எப்படி நம்ப முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“உச்சநீதிமன்றத்திலேயே வெளிப்படையாக தேர்தல் ஆணையம் பொய் கூறுகிறது. படிவம் 17சி விவரத்தை அளிப்பதில் எவ்வித பிரச்னையும் இல்லை, ஆனால் நேரமெடுக்கும் என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும் படிவம் 17சி விவரங்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

உண்மை என்னவென்றால் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள கையேட்டின் 13.47.2 பத்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்கு எந்திரத்தில் உள்ள பொத்தானை கிளிக் செய்து மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை உடனடியாக படிவம் 17சி-ல் குறிப்பிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பொத்தானை அமுக்க மூன்று நொடிகள்கூட ஆகாது. உச்சநீதிமன்றத்தில் ஏன் பொய் கூற வேண்டும்? வாக்குப் பதிவு தரவுகளை வெட்கமின்றி ஏன் மறைக்க வேண்டும்?

ஏதோ கீழ்த்தரமான செயல் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதில், தேர்தல் ஆணையம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 48 மணிநேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் நாளை(மே 24) நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகருக்கு 250 கிலோ மோதகம் படைத்து வழிபாடு

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: 38 போ் கைது

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

குழந்தை வேலப்பா் கோயிலுக்கு லிப்ட் வசதி

கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT