சிறப்புச் செய்திகள்

மதுரையை தக்கவைப்பாரா சு.வெங்கடேசன்?

DIN

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், மதுரை மேற்கு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மதுரை மக்களவைத் தொகுதி. இங்கு முக்குலத்தோர் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அடுத்தடுத்த நிலைகளில் சௌராஷ்டிரா, நாயுடு, யாதவர், பட்டியலினத்தவர்கள், வெள்ளாளர் சமுதாயத்தினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

இதுவரை மதுரை...

இந்தத் தொகுதியின் முதல் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியைச்

சேர்ந்த எஸ். பாலசுப்பிரமணியன். 1952-ஆம் ஆண்டுமுதல் 2019 வரை நடைபெற்ற 17 தேர்தல்களில் இங்கு 8 முறை வெற்றி பெற்று, அதிக முறை வென்ற கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. அடுத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறை வென்றுள்ளது. திராவிட கட்சிகளான திமுக, அதிமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா கட்சி ஆகியவை தலா ஒரு முறை வென்றுள்ளன.

மதுரை மக்களவைத் தொகுதியில் 2004, 2014, 2019 என 3 மக்களவைத் தேர்தல்களில் மட்டுமே அதிமுக நேரடியாகக் களமிறங்கியது. 2014 தேர்தலில் மட்டுமே வென்றுள்ளது. தற்போது, 4-ஆவது முறையாக இந்தத் தொகுதியில் அதிமுக நேரடியாகக் களமிறங்கியுள்ளது.

மதுரையில் இதுவரை 13 தேர்தல்களில் களம் கண்டு, அதிக முறை நேரடியாகக் களம் கண்ட கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது 14-ஆவது முறையாக இங்கு போட்டியிடுகிறது. பாஜக. இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளது.

வாக்காளர்கள்

ஆண்கள் : 7,77,145

பெண்கள்: 8,04,928

மூன்றாம் பாலினத்தவர் : 198

மொத்த வாக்காளர்கள் :15,82,271

மார்க்சிஸ்ட் வேட்பாளர்...

2019 தேர்தல் முடிவுகள்

சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்) - 4,47,075

வி.வி.ஆர். ராஜ் சத்யன் (அதிமுக) - 3,07,680

டேவிட் அண்ணாதுரை (அமமுக- சுயே) 85,747

எம்.அழகர் (மநீம) - 85,048

மார்க்சிஸ்ட் வேட்பாளர்...

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு.வெங்கடேசன் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர், குழலியல் செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். 2019-இல் இந்தத் தொகுதியில் அறிமுகமாகி, முதல் முயற்சியிலேயே அதிமுக வேட்பாளரைவிட 1.39 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர். மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுவது இவருக்கு மிகப் பெரிய பலம்.

அதிமுக....

அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் மருத்துவர் பா. சரவணன். இவர், 2019-இல் திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வென்றவர். மதுரையில் உள்ள பிரபல இருதய சிகிச்சை நிபுணர், பல்வேறு சமூகநலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்ற வகையில் தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்ல அறிமுகம் பெற்றவர்.

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியபோது, தனது பொருளாதார சக்திக்கு உள்பட்ட பொதுநலக் கோரிக்கைகளை தனது சொந்தச் செலவிலேயே நிறைவேற்றியவர் என்ற அறிமுகம் இவருக்கு சாதகம். மேலும், மக்கள் தன்னை எளிதில் அணுக வாய்ப்பளித்தவர் என்பதில் இவர் முதன்மை பெறுகிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இவருக்கு மிகப் பெரிய பலம்.

பாஜக...

பாஜக வேட்பாளராக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ராம. சீனிவாசன் போட்டியிடுகிறார். நபார்டு வங்கியின் தனி நிலை இயக்குநரான இவர், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வரலாற்று ஆர்வலர், கட்டுரையாளர். காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கொங்கண் ரயில்வேயில் தனி இயக்குநராகப் பணியாற்றியவர். 2016-இல் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைக் கொண்ட அமமுக கூட்டணியில் இருப்பது இவருக்கு சாதகம். கணிசமான அளவில் இருக்கும் சௌராஷ்டிர சமூகத்தினரின் ஆதரவும் இவருக்குக் கிடைக்கக் கூடும்.

நாம் தமிழர் கட்சி...

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளார் து. சத்யா தேவி. முதுநிலைப் பட்டதாரியான இவர், மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாவர். தேர்தல் களத்துக்குப் புதியவர். சீமானின் பரப்புரையும், நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல் பணியும் இவருக்கு பலம்.

21 பேர் போட்டி

இந்தத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர், சுயேச்சை கள் என மொத்தம் 21 பேர் போட்டியிடுகின்றனர்.

மாற்றமே மாறாதது...

2019 மக்களவைத் தேர்தலின் போது, மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுரை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியைத் தவிர மற்ற 5 தொகுதிகளிலும் அதிமுக 15 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே பெற்றிருந்தது. இருப்பினும், 2021-இல் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மேலூர், மதுரை மேற்கு ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வென்றது. இது 2 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்ட மாற்றம்.

இதேபோல, கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்ட அமமுக இந்தத் தொகுதியில் 85,747 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 85,048 வாக்குகளையும் பெற்றன. தற்போது, மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியி லும், அமமுக பாஜக கூட்டணியி லும் இணைந்திருப்பது இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்கு வித்தியாசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மக்களின் கோரிக்கைகள்...

வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டிய பொருள்களாக மாற்றி சந்தைப்படுத்துவதற்கு ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும், வைகை அணையை தூர்வாரி சீரமைக்க வேண்டும். பாசன கால்வாய் வசதிகளை மேம்படுத்த வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவம னைக்கு விரைவாக கட்டடம் கட்டப்பட வேண்டும். மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.சிறு,குறு தொழில்கள் துறையை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி பெல், சென்னை ஆவடி தொழிற்சாலை போன்று மத்திய அரசுத் துறை சார்ந்த பெரும் தொழில் நிறுவனத்தை அமைக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மதுரைக்கு அறிவிக்கப்பட்ட நெய்ப்பர் திட்டத்துக்கு செயலாக்கம் அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT