திருமாவளவன் விலகல்! விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு!
திருமாவளவன் போட்டியிடாததால், அவருக்குப் பதிலாக விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடாததால், அவருக்குப் பதிலாக விசிகவில் முன்னாள் காங்கிரஸ் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிக போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் சில நாள்களுக்கு முன் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
திருமாவளவன் ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Advertisement
திருமாவளவன் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்த நிலையில், அவருக்குப் பதிலாக புதிய வேட்பாளராக ஜோதிமணி இளையபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் மதச்சார்பற்றக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு காட்டுமன்னார்கோயில், பெரியகுளம், திருப்போரூர், அரக்கோணம், திண்டிவனம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, செய்யூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டிவனம் (தனி) தொகுதியில் வன்னியரசு, பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரஹ்மான், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் மாலதி, செய்யூர்(தனி) தொகுதியில் சிந்தனை செல்வன், திருப்போரூரில் பன்னீர் தாஸ், பெரியகுளம் (தனி) தொகுதியில் ஆற்றல் அரசு, அரக்கோணம் (தனி) தொகுதியில் எழில் கரோலின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திருமாவளவன் விலகியதால், புதிய விசிக வேட்பாளராக ஜோதிமணி இளையபெருமாளுக்கு முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி இளைய பெருமாளின் தந்தை இளையபெருமாள். இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த ஒருமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.