விசிகவின் நேர்மை அண்ணன் ஸ்டாலினுக்கு தெரியும்! திருமாவளவன்
திமுகவை விமர்சிக்க வேண்டாம் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தது பற்றி...
விசிகவின் நேர்மை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் புதன்கிழமை தெரிவித்தார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து இரண்டு இடங்களில் வென்ற விசிக, தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்ததுடன், அமைச்சரவையிலும் இடம்பெற்றது.
இந்த நிலையில், விசிகவை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, அவருக்கு எதிராக விசிகவினர் கருத்துகளை வெளியிட்டனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை திமுகவினரும் விசிகவினரும் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் தெரிவித்ததாவது:
”திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், ஆதரவு தொடர்பாக நேரில் சந்தித்து, இடதுசாரிகள் எடுத்த முடிவுகளின்படி, தாங்களும் ஆதரவு அளிக்கின்றோம் எனக் கூறிவிட்டுதான் முடிவை அறிவித்தோம். அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் ஆதரவு அளிக்கலாம் என்று இசைவு தந்தார்.
அமைச்சரவையில் இடம்பெறுவதை அவரிடம் தெரிவிக்க முடியவில்லை. இருந்தாலும், ஒருசில முன்னாள் திமுக அமைச்சர்களிடம் கூறிவிட்டுதான் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி அமைச்சரவையில் இடம்பெறப் போவதை அறிவித்தோம்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 10 ஆண்டுகளாக விசிக பயணித்து வருகின்றது. தோழமைக் கட்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம். கூட்டணிக்கு நாங்கள் அளித்த பங்கை திமுக தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் நன்கு அறிவார்கள்.
இருப்பினும், நமது முடிவை திமுக ஆ. ராசா உள்பட பலர் விமர்சிப்பது சற்று வலியைத் தருகிறது. அவர்கள் ஆதங்கத்தில் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவுடன் களத்தில் நிற்பதையும், ஆதரவு அளிப்பதையும் அவ்வளவு எளிதாக திமுக தொண்டர்களால் எப்படி கடந்து செல்ல முடியும்?
கடும் சொற்களால் விமர்சிக்கக் கூடாது என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அந்த பதிவை உடனடியாக நீக்க ஆணையிட்டார்.
இந்த நிலையில், திமுகவுக்கு எதிராகவோ, ஆ. ராசாவுக்கு எதிராகவோ போராட்டம் நடத்துவது தேவையில்லாத ஒன்று. ஆக்கப்பூர்வ பணிகளில் கட்சித் தொண்டர்கள் ஈடுபட வேண்டும். கட்சி கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
நம்மை பிடிக்காதவர்கள் எப்போது விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். நம் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் எப்போதும் நமக்கு எதிரான அவதூறுகளை பரப்புவார்கள். திமுக கூட்டணியில் தொடர்ந்தால் கொத்தடிமை என்பார்கள், வேறு அணிக்கு மாறினாலும் விமர்சிப்பார்கள்.
காங்கிரஸ் செய்த துரோகத்தைவிட விசிக செய்த துரோகம் பெரிது என்று அவதூறு பரப்புகிறார்கள். தேர்தலுக்கு முன்பே, ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்ந்து திட்டமிட்டோம் என்கிறார்கள். திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும், விசிகவும் திருமாவளவனும் எவ்வளவு நேர்மையான உறவைக் கொண்டிருந்தோம், நட்புக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்தோம், கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என நினைத்தது ஸ்டாலினின் மனசாட்க்கு தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
Brother Stalin knows of the VCK's integrity — Thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.