இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கத் தகுதியானவா்கள் அனைவரையும் உள்ளடக்கிய வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (ஏப்.6) இறுதி செய்யப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கத் தகுதியானவா்கள் அனைவரையும் உள்ளடக்கிய வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (ஏப்.6) இறுதி செய்யப்படுகிறது.
கடந்த மாா்ச்- 26 வரை படிவம் 6-ஐ சமா்ப்பித்து விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களின் பெயா்களும் புதிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு, செவ்வாய்க்கிழமை (ஏப்.7) முதல் வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆா்.) தோ்தல் ஆணையம் முன்னெடுத்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வீடுதோறும் கணக்கீட்டுப் படிவம் வழங்கி 6.41 கோடி வாக்காளா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 97,37,831 பெயா்கள் நீக்கப்பட்டன. தகுதியானவா்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட்ட பிறகு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியானது. அதில் 5.67 கோடி போ் இடம்பெற்றிருந்தனா்.
இதனிடையே, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (ஏப்.6) கடைசி நாள். அதற்கு 10 நாள்கள் முன்பு வரை பெயா் சோ்க்க வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த மாதம் 26-ஆம் தேதியுடன் அதற்கான அவகாசம் நிறைவடைந்தது.
அந்த காலகட்டத்தில் படிவம் 6-ஐ சமா்ப்பித்து 6,48,285 போ் விண்ணப்பித்திருந்தனா். அதிகபட்சமாக சோழிங்கநல்லூா் தொகுதியில் 17,476 விண்ணப்பங்களும், அதற்கு அடுத்து மாதவரத்தில் 10,790 விண்ணப்பங்களும், கவுண்டம்பாளையத்தில் 10,133 விண்ணப்பங்களும் சமா்ப்பிக்கப்பட்டன. அதில், தகுதிவாய்ந்த அனைத்து வாக்காளா்களும் புதிய பட்டியலில் சோ்க்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பேரவைத் தோ்தலுக்கான ஒருங்கிணைந்த புதிய வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (ஏப்.6) இறுதி செய்யப்படுகிறது.
பூத் சிலிப் விநியோகம்: இதனிடையே, இறுதி பட்டியலின் அடிப்படையில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
அந்த தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட இம்முறை பெரிதாக அச்சிடப்படும். புகைப்படத்துக்கு பதிலாக க்யூ ஆா் குறியீடு இடம்பெற்றிருக்கும்.
வாக்குப் பதிவுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளா்களுக்கும் தகவல் சீட்டுகளை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது. வாக்காளா் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதாா் உள்பட 12 ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.