FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

எஸ்ஐஆருக்கு நன்றி!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்திருப்பதைப் பற்றி...

Updated On : 13 ஏப்ரல் 2026, 3:30 am IST
வாக்காளர்கள்!
பகிர்:

நடைபெற்று முடிந்த கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. அஸ்ஸாமில் 85.91% வாக்குகளும், புதுச்சேரியில் 89.97 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இதற்கு முன்னர் அஸ்ஸாமில் 2016-இல் 84.67% வாக்குகளும், புதுச்சேரியில் 2011-இல் 85.87% வாக்குகளும் பதிவாகியிருந்ததே அதிகபட்சம். கேரளத்தில் கடந்த 2021 பேரவைத் தேர்தலில் 74.86 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 78.27% வாக்குகள் பதிவாகின. ஒரு நாட்டின் எதிர்காலத்தை வாக்குரிமையால்தான் தீர்மானிக்க முடியும்.

அந்த வகையில், வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதை ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். "இந்த வரலாற்றுச் சாதனை இந்தியாவுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயக உலகுக்குமானது' என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்தச் சாதனைக்காக மூன்று மாநில வாக்காளர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பேரவைத் தேர்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முதல் காரணம் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி.

வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் மட்டும் இடம்பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் பணியைத் தேர்தல் ஆணையம் தொடங்கியது.

எஸ்ஐஆருக்கு முன்னர் பிகாரில் 7.89 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. எஸ்ஐஆருக்கு பின்னர் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு 7.24 கோடி பெயர்கள் இடம்பெற்றன. அந்தப் பட்டியலிலிருந்தும் 3.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன் பிறகு நீக்கப்பட்டவர்களில் தகுதி இருப்பவர்களாகக் கருதப்பட்டவர்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, ஆவணங்களைச் சமர்ப்பித்தோர், புதிய வாக்காளர்கள் என சுமார் 21 லட்சம் பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 2025 செப்டம்பரில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி பேர் இடம்பெற்றனர்.

மொத்தத்தில் எஸ்ஐஆருக்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்து 47 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலான பெயர்கள் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை வாக்காளர் பதிவுகள்.

எஸ்ஐஆருக்குப் பின்னர் நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், 2020 தேர்தலில் 57.29% வாக்குகள் பதிவான நிலையில் சுமார் 9 சதவீதம் வாக்குப் பதிவு அதிகரித்து 66.91% வாக்குகள் பதிவாகின. 1951-க்குப் பிறகு பிகாரில் அதிகபட்ச வாக்குப் பதிவும் இதுதான். எஸ்ஐஆர் மூலம், இறந்த வாக்காளர்களின் பெயர்களும், இரண்டு இடங்களில் இருந்த ஏராளமான வாக்காளர் பதிவுகளும் நீக்கப்பட்டுவிட்டன. அதனால், தாமாகவே வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்தது.

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் வாக்குப் பதிவு அதிகரித்திருப்பதற்கும் எஸ்ஐஆர்தான் முதல் காரணம். புதுச்சேரியில் எஸ்ஐஆருக்குப் பின்னர் மொத்த வாக்காளர்களில் 7.5% பெயர்களும், கேரளத்தில் 3.2% பெயர்களும் நீக்கப்பட்டன.

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கான பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பதிலாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மொத்த வாக்காளர்களில் 1% பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டன.

எஸ்ஐஆரால் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சமும் வாக்குப்பதிவு அதிகரிப்புக்கான ஒரு காரணமாக தெரியவருகிறது. எஸ்ஐஆர் என்கிற பெயரில் வாக்குரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையமும் மத்திய பாஜக அரசும் திட்டமிடுகின்றன என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனால், தங்கள் வாக்குரிமை பறிபோய் விடுமோ என்கிற அச்சத்தால், இதுவரை எந்தத் தேர்தலிலும் வாக்களிக்காதவர்களைக்கூட இந்தத் தேர்தல் வாக்களிக்கத் தூண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆருக்குப் பின்னர் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் அது 5.73 கோடியாகக் குறைந்திருக்கிறது. சுமார் 68 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ஸாமை போன்று தமிழ்நாட்டில் தங்களது வாக்குரிமை பறிபோய்விடுமோ என்கிற அச்சம் வாக்காளர்கள் மத்தியில் இல்லை.

அதேவேளையில் இளம் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இதன் தாக்கம் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது. எத்தனையோ சர்ச்சைகளுக்குப் பிறகு எஸ்ஐஆர் நடத்தப்பட்டது என்னவோ உண்மை. ஆனால், அதையெல்லாம் கடந்து வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரித்ததில் எஸ்ஐஆருக்கு பெரும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments