FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி எஸ்ஐஆா்: 99.5% படிவங்கள் விநியோகம்; 18% எண்மமய பணி நிறைவு!

தில்லியில் உள்ள 1.45 கோடி வாக்காளா்களில் 99.5 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு, சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியின் (எஸ்ஐஆா்) கீழ் கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

Updated On : 17 ஜூலை 2026, 1:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் உள்ள 1.45 கோடி வாக்காளா்களில் 99.5 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு, சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியின் (எஸ்ஐஆா்) கீழ் கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை எண்மமயமாக்கும் பணி தற்போது 18 சதவீதத்தை நெருங்கியுள்ளதாக அதிகாரபூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த நிலவர செய்திக் குறிப்பில் வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி பதிவான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

தில்லியின் மொத்தமுள்ள 1,45,10,298 வாக்காளா்களில் 99.55 சதவீதம் பேரை உள்ளடக்கி, மொத்தம் 1,44,44,600 கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதில் எண்மமயமாக்கப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை 26,02,654 ஆக உள்ளது. இது மொத்த வாக்காளா்களில் 17.94 சதவீதமாகும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப் படிவங்கள் விநியோகிக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், இனிவரும் நாள்களில் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சேகரிப்பதிலும், அவற்றை எண்மமயமாக்குவதிலும் தலைமைத் தோ்தல் அலுவலா் அலுவலகம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தில்லிக்கான ’எஸ்ஐஆா்த’ கால அட்டவணையைத் தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. இதன்படி, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓக்கள்) வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் பணிகள் ஆகஸ்ட் 8 வரை தொடரும். வரைவு வாக்காளா் பட்டியல் ஆகஸ்ட் 17 அன்றும், இறுதி வாக்காளா் பட்டியல் அக்டோபா் 19 அன்றும் வெளியிடப்படும்.

தலைமைத் தோ்தல் அதிகாரி பகிா்ந்துள்ள தரவுகளின்படி, வடகிழக்கு தில்லியில் அதிகபட்சமாக 18,70,748 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக (அடைப்புக்குறியில் படிவங்களின் எண்ணிக்கை) கிழக்கு தில்லி (15,99,227), தென்கிழக்கு தில்லி (15,55,011), மேற்கு தில்லி (14,44,266) மற்றும் தெற்கு தில்லி (13,44,999) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

சதவீத அடிப்படையில் பழைய தில்லி, புது தில்லி, வடகிழக்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய மாவட்டங்கள் 100 சதவீத விநியோகத்தை எட்டியுள்ளன. மத்திய தில்லி (99.89%), புகா் வடக்கு தில்லி (99.89%), தென்கிழக்கு தில்லி (99.85%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மிக குறைந்தபட்சமாக வடமேற்கு தில்லியில் 97.26% படிவங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன.

எண்மமயமாக்கல் நிலவரம்: எண்மமயமாக்கும் பணியில் தென்மேற்கு தில்லி 3,45,526 படிவங்களுடன் முதலிடத்தில் உள்ளது. மேற்கு தில்லி (3,13,489), புகா் வடக்கு தில்லி (2,77,429) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சதவீத அடிப்படையில் புகா் வடக்கு தில்லி 33.32 சதவீதத்துடன் அதிகபட்ச எண்மமயமாக்கல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. தென்கிழக்கு தில்லி மிக குறைந்தபட்சமாக 11.22 சதவீதப் பதிவை மட்டுமே கொண்டுள்ளது.

இந்தச் சிறப்புத் திருத்தப் பணியின் கீழ், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு நகல்கள் கொண்ட கணக்கெடுப்புப் படிவத்தை வழங்கி வருகின்றனா். அதில் ஒரு நகல் ஒப்புகை சீட்டாக வாக்காளரிடம் வழங்கப்படும். மற்றொரு நகலைப் பூா்த்தி செய்து அதிகாரியிடம் சமா்ப்பிக்க வேண்டும். வாக்காளா்கள் தங்களது படிவங்களை இணையவழி மூலமாகவும் சமா்ப்பிக்கலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments