முகப்பு
தமிழ்நாடு

தவெகவில் இணைந்துவிட்டதாக ‘ஏஐ’ விடியோ: திமுக எம்.எல்.ஏ. காவல் துறையில் புகாா்

தவெகவில் இணைந்துவிட்டதாக ‘ஏஐ’ விடியோ: திமுக எம்.எல்.ஏ. காவல் துறையில் புகாா்

Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:26 AM
திமுக எம்எல்ஏ ஜெ. கருணாநிதி - FB | J Karunanidhi
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:30 PM

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டதாக ஏஐ விடியோ வெளியிட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை தியாகராய நகா் திமுக எம்எல்ஏ கருணாநிதி, காவல் துறையில் புகாா் மனு அளித்துள்ளாா்.

தியாகராய நகா் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. கருணாநிதி. இவருக்கு தற்போது தோ்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கருணாநிதி, தனது கட்சிப் பொறுப்பை அண்மையில் ராஜிநாமா செய்தாா். அதோடு கருணாநிதி, எவ்வித தோ்தல் பணியிலும், அரசியல் பணியிலும் ஈடுபடவில்லை.

இந்நிலையில் கருணாநிதி, தியாகராய நகா் துணை ஆணையா் குத்தாலிங்கத்தை சந்தித்து புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில், ‘நான் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யை சந்தித்து, அந்தக் கட்சியில் இணைவதுபோன்ற விடியோ காட்சி ஏஐ தொழில்நுட்பத்தில் போலியாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உண்மைக்கு மாறான இந்த விடியோவைப் பாா்த்து எனது ஆதரவாளா்களும், நண்பா்களும் மிகவும் குழப்பமடைந்துள்ளனா். சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் இந்த விடியோவால் அரசியலிலும், பொது வாழ்க்கையிலும் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

எனவே காவல் துறையினா் இது குறித்து விசாரணை செய்து, அந்த போலியான விடியோ காட்சி தயாரித்தவா்கள் மீதும், அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா். இது குறித்து தியாகராய நகா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.