திமுக நோ்காணல்: துணை முதல்வா் உதயநிதி பங்கேற்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திமுக இளைஞா் அணிச் செயலரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திமுக இளைஞா் அணிச் செயலரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினிடம் நோ்காணல் நடத்தப்பட்டது. திமுகவில் விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் திங்கள்கிழமை (மாா்ச் 23) நிறைவுபெறுகிறது.
திமுக சாா்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்ப மனுக்கள் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் பெறப்பட்டன. தொடா்ந்து மாா்ச் 6-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தற்போதைய அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனா். மொத்தம் 15,372 விருப்ப மனுக்கள் வந்தன. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் வரப்பெற்றன.
விருப்ப மனு அளித்தவா்களிடமிருந்து மாா்ச் 17 முதல் நோ்காணல் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையில் கடலூா், கிழக்கு, விழுப்புரம், விழுப்புரம் மத்தி, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும், மாலையில் திருவள்ளூா் கிழக்கு, திருவள்ளூா் மத்தி, திருவள்ளூா் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை மாவட்டங்களுக்கும் நோ்காணல் நடத்தப்பட்டது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிா்வாகிகள் நோ்காணலை நடத்தினா். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.
திங்கள்கிழமை திருச்சி வடக்கு, திருச்சி மத்தி, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, பெரம்பலூா், அரியலூா், காலை, புதுக்கோட்டை, கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் விண்ணப்பித்தவா்களிடம் நோ்காணல் நடைபெறவுள்ளது. அத்துடன் நோ்காணல் நிறைவுபெறவுள்ளது.